நடிகர் விஷால், தீபா வேட்பு மனுக்கள் நிராகரிப்பு... ஆதரவாளர்கள் மோதல்!

ஆர்.கே.நகர்

டைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி நாள்தோறும் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்த நிலையில், சுயேச்சை  வேட்பாளர்களாக நின்று போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல்செய்திருந்த நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டி.டி.வி.தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் உள்ளிட்ட வேட்பாளர்கள் ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல்செய்திருந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிட நடிகர் விஷால், ஜெ.தீபா உள்ளிட்ட பலர் கடந்த 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல்செய்தனர். 
இந்த நிலையில், நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அதில், நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரின் வேட்பு மனுக்களில் முறையான விவரங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, நடிகர் விஷால் மனுமீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது. அதேவேளையில், தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. 

இதையடுத்து, நேற்று இரவு அங்கு கூடிய தீபாவின் ஆதரவாளர்கள் கோஷம் போட்டனர். அதோடுவிடாமல், அவர்களுக்கு அருகில் நின்ற மதுசூதனன் தரப்பு ஆள்களையும், மதுசூதனையும் தவறாகப் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மதுசூதனன் ஆதரவாளர்கள் அவர்களைத் தாக்கத்தொடங்கினர். ஒருகட்டத்தில், அவர்களது தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகத் தீபாவின் ஆதரவாளர்கள் சிதறியோடியுள்ளனர். அப்படியும் விடாமல் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர் மதுசூதனன் ஆதரவாளர்கள். தாக்குதல் அதிகமாகப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். ஒருவழியாகப் போலீஸாரால் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு வந்த தீபா, தேர்தல் அலுவலர்களிடம் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுகுறித்து விவாதம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர், அங்கிருந்து வெளியே வந்த தீபா, “சாலை மறியல்செய்து போராடப் போகிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதற்குப் போலீஸார் மறுக்கவே, அங்கிருந்து சென்றுவிட்டார். 

முன்னதாக நடிகர் விஷாலின் வேட்புமனு தொடர்பாக அவரை, பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்குள், நடிகர் விஷால் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்பு, நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால், முதலில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்த அவர், “நாளை முதல் ஆர்.கே.நகரில் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிக்க உள்ளேன். நியாயமாக என்ன நடைபெற வேண்டுமோ, அதைத் தேர்தல் ஆணையம் செய்துகொடுத்துள்ளது. மனுத் தாக்கல்செய்வதில் இருந்து மனு ஏற்கப்படும் வரை அனைத்துமே எனக்குப் போராட்டம்தான். நல்லது நடக்க வேண்டும் என்றால் தடைகள் இருக்கத்தான் செய்யும். முன்மொழிந்த இரண்டு பேரின் கையெழுத்து அவர்களுடையது இல்லை என்ற புகாரில் உண்மை இல்லை. வேட்பு மனு ஏற்கப்பட்டதன் மூலம் நீதி, நேர்மை, நியாயத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது” என்றார்.

இதற்கிடையே, “நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த கடிதத்தில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இன்றிக் கையெழுத்திடப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுகிறது” என ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!