வெளியிடப்பட்ட நேரம்: 09:25 (06/12/2017)

கடைசி தொடர்பு:10:13 (06/12/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தொகுதியில் வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறை

வரும் 21-ம் தேதி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, அன்றைய தினம் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தலை அறிவித்தது, தேர்தல் ஆணையம். தொடர்ந்து,  அதற்கான வேலைகளில் அனைத்துக் கட்சியினரும் களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டுவந்த வேளையில், தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, அந்தத் தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். 

இந்த நிலையில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால், இந்த முறையும் பலமுனைப் போட்டி நிலவுகிறது. நவம்பர் 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, டிசம்பர் 4-ம் தேதி வரை நடந்தது. இதன் பின்னர் நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. நாளை டிசம்பர் 7-ம் தேதி, ஆர்.கே.நகர் தொகுதியில்  போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடப்பதால், ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.