ஆர்.கே. நகரில் விஷால் மனு நிராகரிக்கப்பட்ட பின்னணியில் அ.தி.மு.க.?!

ஆர்.கே.நகர் அ.தி.மு.க வேட்பாளர்

ஆர்.கே.நகர் தேர்தலில் எப்படியும் வெற்றியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க தரப்பு, தீவிர திட்டத்துடன் இறங்கியுள்ளது. முதல்வர் தலைமையில் முழுவீச்சில் அ.தி.மு.க தேர்தல் களத்தில் இறங்க இருப்பதாக அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தினகரன் என மும்முனைப் போட்டி தீவிரமாக உள்ளது. ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க., இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்று தீவிரமாக உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி-க்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரண்டு அணிகளாகக் களத்தில் நின்றவர்கள் இந்த முறை ஓர் அணியாகக் களம் இறங்குவதால் அதுகுறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

இந்த ஆலோசனைக் கூட்டம்குறித்து அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, “ஆர்.கே.நகர் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த முறை தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் அனைவரும் களம் இறங்கி வேலை பார்த்தார்கள். மறுபுறம், மதுசூதனனுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள் களம் இறங்கினார்கள். இந்தமுறை இரண்டு அணிகளின் நிர்வாகிகள் ஒரே அணியில் இருப்பதால் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது.

ஏற்கெனவே அமைச்சர்கள் எந்தப் பகுதியைத் தங்கள் பொறுப்பில் பணியாற்றினார்களோ, அதே பகுதியில் இந்த முறையும் பணியாற்றச் சொல்லியுள்ளார்கள். பணிக் குழுவும் போடப்பட்டுள்ளது. அதோடு, ஆர்.கே.நகர் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ் பாபு ஏற்பாட்டில் ஆர்.கே.நகர் தனியார் மண்டபத்தில் தேர்தல் பணிக்குழுக் கூட்டமும் நடைபெற உள்ளது. கடந்தமுறை அமைச்சர்கள் பலர் ஏராளமாகப் பணத்தைச் செலவு செய்துவிட்டதால், இந்த முறை செலவு செய்யத் தயக்கம் காட்டுவது வெளிப்படையாகத் தெரிகிறது. அதிலும், மதுசூதனனுக்கு எதிராகக் கட்சிக்குள் சில அதிருப்தி அமைச்சர்கள் இருப்பதால், அவர்கள் கையில் இருந்து காசு எடுப்பது கடினம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

மாவட்டச் செயலாளர்களிடமும் பூத் வாரியாகப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தினகரன் அணியினர் மற்றும் தி.மு.க-வினர் வியூகங்களைக் காலி செய்வதுதான் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக அ.தி.மு.க இருப்பதால், ஆர்.கே.நகர் மக்கள் மதுசூதனன் தரப்பில் வெயிட்டான கவனிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 'அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்' என்று சில நிர்வாகிகள் முதல்வரிடம் கேட்டுள்ளனர். 'அதுகுறித்து பிறகு முடிவு செய்துகொள்ளலாம்' என்று முதல்வரும் சொல்லியுள்ளார்” என்று தெரிவித்தனர். 

விசால்

அ.தி.மு.க தரப்பில் இருந்து கரன்சிகளை இறக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், கடந்தமுறைபோல செலவு செய்ய வேண்டாம் என்று சிலர் முதல்வரிடம் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். ஐம்பது ஓட்டுக்கு ஒரு நிர்வாகி என்று பிரித்து வேலை செய்தாலே வெற்றி பெறலாம் என்று பேசியுள்ளார்கள். அ.தி.மு.க -வை வீழ்த்துவதற்கு தினகரன் தரப்பு காய்களை நகர்த்திவருகிறது. விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் மதுசூதனன் இருந்ததாகவும் தகவலறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு அளித்த ரிப்போர்ட்டில் இப்போது இருக்கும் களநிலவரப்படி தி.மு.க வெற்றிபெறும் என்று சொல்லியுள்ளார்கள். அதற்குக் காரணம் தினகரன் பிரிக்கப்போகும் வாக்குகள் தி.மு.க-வுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்று சொல்லியுள்ளார்கள். இந்தத் தகவல் டெல்லி பி.ஜே.பி தலைவர்கள்மூலம் அ.தி.மு.க-வினருக்கு எட்டியதால், எந்த விலை கொடுத்தேனும் வெற்றியைப் பறித்துவிட வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதன், ஒரு பகுதியாகத்தான் விஷாலைத் தேர்தல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த முடிவெடுத்திருக்கின்றனர். இதனால் கொஞ்சம் பயமின்றி அ.தி.மு.க. போராடும் என்று தெரிகிறது. 
ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க அதகளப்படுத்தும் திட்டத்தில் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!