‘தேர்தலில் தோற்றால்கூட பரவாயில்லை...!’ - ஆர்.கே.நகர் நிர்வாகிகளிடம் கொதித்த ஸ்டாலின் | Stalin's advice to his party members over RK nagar by-election

வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (06/12/2017)

கடைசி தொடர்பு:16:37 (06/12/2017)

‘தேர்தலில் தோற்றால்கூட பரவாயில்லை...!’ - ஆர்.கே.நகர் நிர்வாகிகளிடம் கொதித்த ஸ்டாலின்

ஸ்டாலின்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் சினிமா காட்சிகளை விஞ்சும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது. விஷால் வேட்புமனு நிராகரிப்பு பரபரப்புகளையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 'அ.தி.மு.கவைப் போல முறைகேடுகள் செய்து வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக நாம் தோற்றுப் போகலாம்' என நிர்வாகிகளிடம் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். 

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனுக்கும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தகவலை அறிந்து, வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனத்தைத் தெரிவித்தனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் ஆளும்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும் தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ். தி.மு.க-வின் முந்தைய ஆட்சிகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் அ.தி.மு.க அரசால் ஆர்.கே.நகர் தொகுதி வஞ்சிக்கப்படுவதையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் தி.மு.கவுக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர். 

மருது கணேஷ்'ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க-வின் வியூகம் என்ன?' என்று மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். "கடந்தமுறை தினகரன் போட்டியிட்டபோது, வரலாறு காணாத அளவுக்குத் தொகுதியில் பணப்புழக்கம் இருந்தது. தொகுதியைச் சேர்ந்த பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வேறு தொகுதிக்குள் வைத்து பரிசுப் பொருள்களை வாரியிறைத்தது தினகரன் தரப்பு. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக போட்டியிட்ட மதுசூதனன் தரப்பில் இருந்தும் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்தது. 'இந்தப் போட்டியில் நாம் பின்தங்கிவிடக் கூடாது' என்பதற்காக, தி.மு.க தரப்பில் இருந்து மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் சிலர் நேரடியாகக் களமிறங்கி, பண விநியோகம் செய்தனர். தினகரன் மீதுள்ள கோபத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். இந்தமுறையும் தி.மு.க வேட்பாளராக மருது கணேஷை களமிறக்கினார் ஸ்டாலின். தேர்தல் வேலைகள்குறித்து செயல் தலைவர் ஸ்டாலினுடன் அன்றாடம் பேசி வருகின்றனர் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள். 

கடந்த சில நாள்களுக்கு முன்பு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பகுதி, வட்டச் செயலாளர்களுடன் தீவிரமாக விவாதித்தார் ஸ்டாலின். அப்போது, ‘அரசு நிர்வாகத்தை வைத்துக்கொண்டு முறைகேடாக வெல்வதற்கு ஆளும்தரப்பு முயற்சி செய்யும். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாமும் சில விஷயங்களைச் செய்தாக வேண்டும். மக்களுக்குத் தேவையானதைச் செய்தால் நன்றாக இருக்கும்' என நிர்வாகி ஒருவர் எடுத்துக்கூற, இடைமறித்த ஸ்டாலின், ‘காசு கொடுத்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. இந்தமுறை ஒரு ரூபாய்கூட நாம் கொடுக்கப் போவதில்லை. அப்படி வெல்வதற்குப் பதிலாக தோற்றுப் போகலாம். மக்களிடம் தினம்தோறும் சென்று நம்முடைய ஆட்சிக்காலத்தில் செய்த நல்ல காரியங்களைப் பற்றிப் பேசுங்கள். அவர்களை அன்றாடம் சந்தித்துப் பேசுங்கள். வட்டம், பாகம் வாரியாக நிர்வாகிகளைப் பிரித்துக் கடுமையாக உழைத்தால் போதும். ஆளும்கட்சி மீதான அதிருப்தி வாக்குகள் அனைத்தும் நமக்கே வந்து சேரும்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதற்குக் காரணம், கடந்தமுறை ஆளும்கட்சியைப் போலவே நாங்களும் ஏராளமாக செலவு செய்துவிட்டோம். இந்தமுறை கையில் இருந்து பணம் விரயமாவதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. எனவேதான், ‘பணம் கொடுக்க வேண்டாம்’ எனத் தலைமையும் கூறிவிட்டது" என்றார் விரிவாக. 

“சென்னை கிழக்கு மா.செ சேகர் பாபுவும் மேற்கு மா.செ அன்பழகனும் களத்தில் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். ஆர்.கே.நகரில் ஒரு வட்டத்துக்கு பத்து பாகம் என பிரித்துக் கொண்டு நிர்வாகிகளைக் களமிறக்கியுள்ளது தலைமை. ஒவ்வொரு நிர்வாகியின்கீழும் வட்டப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் ஆயிரம் வாக்குகள் வரையில் தங்களது பொறுப்பில் வைத்துக்கொண்டு, தேர்தல் பணி செய்கின்றனர். இதுதவிர, ஆளும்கட்சி தரப்பின் முறைகேடுகளைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில், வழக்கறிஞர் அணி ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுக்கவே சாலை வசதியின்மை, மழை நீர் தேங்குவது போன்ற பிரச்னைகள்தான் ஏராளம். இதைப் பற்றித்தான் மக்கள் புகார் வாசிக்கின்றனர். ஜெயலலிதா வெற்றி பெற்ற பிறகும், இந்தத் தொகுதியில் எந்தவொரு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவையெல்லாம் தி.மு.கவுக்குச் சாதகமாக இருக்கக் கூடிய விஷயங்கள்" என்கிறார் ஆர்.கே.நகர் தி.மு.க பிரமுகர் ஒருவர்.


டிரெண்டிங் @ விகடன்