வெளியிடப்பட்ட நேரம்: 10:16 (07/12/2017)

கடைசி தொடர்பு:10:17 (07/12/2017)

ஆர்.கே.நகர் - 72 வேட்பாளர்கள்... 100 பிரச்னைகள்! - இம்முறையேனும் சுதாரிப்பார்களா மக்கள்? #RKNagarAtrocities

ஆர்.கே.நகர்

டைத்தேர்தல் சரித்திரத்தில் ஆர்.கே.நகர் தொகுதியும் கட்டாயம் இடம்பெற்றுவிட்டது. காலியானதாக அறிவிக்கப்படும் எந்தத் தொகுதிக்கும் ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் விதி. அதுதான் இங்கேயும் நடக்கிறது கடந்த ஓர் ஆண்டுக்காலமாக... அந்தத் தொகுதியில் நின்று வெற்றிபெற்ற முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்ததையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தத் தொகுதிக்குக் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். இடைத்தேர்தலால் களைகட்டிய ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா கொடுத்ததாகப் புகார் எழுந்ததையடுத்து, தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். 

இந்த நிலையில், டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த முறை போட்டியிட்ட அதே முன்னணி வேட்பாளர்களான மருதுகணேஷ், தினகரன், மதுசூதனன் ஆகியோர் இந்த முறையும் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலில் நடிகர் விஷால் முதன்முறையாகச் சுயேச்சையாக நின்று போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்புமனுத் தாக்கலும் செய்திருந்தார். ஆனால், “நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த கடிதத்தில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இன்றிக் கையெழுத்திடப்பட்ட புகாரின் அடிப்படையில், அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படுகிறது” எனத் தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்பட்டது. அதேபோல், இந்தத் தேர்தலிலும் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெ.தீபாவின் (ஜெ. அண்ணன் மகள்) மனுவும் நிராகரிக்கப்பட்டது.  

ஆர்.கே.நகர்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பிரதானக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அனைவரும் பிரசாரத்தில் தீவிரம் காட்டிவருகின்றனர். அதில் சிலர், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் அள்ளிவீசி வருகின்றனர். ஆனால், அந்தத் தொகுதி மக்களோ, “பொதுவாக எங்கள் தொகுதியில் காலங்காலமாக இருக்கும் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்த்துவைத்தாலே... ஆர்.கே.நகர்த் தொகுதி முன்மாதிரியாக மாறிவிடும். ஆனால், அந்தப் பிரச்னைகளை இந்தத் தொகுதியிலிருந்து வென்ற எந்த எம்.எல்.ஏ-க்களும் இதுவரை செய்யவில்லை”  என்கின்றனர் வேதனையுடன்.

அப்படி, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எந்தமாதிரியான பிரச்னைகளைப் பட்டியலிட்டனர் என்பதை இங்கே பார்ப்போம்... அந்தப் பட்டியலில் முக்கியமாய் முதலிடம் வகிப்பது அடிப்படைப் பிரச்னைகளே!

ஆர்.கே.நகர்தண்ணீர்ப் பிரச்னை!

“வள்ளலார் நகரில் ஆரம்பித்து சுங்கச்சாவடிவரை இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் முக்கியப் பிரச்னையாய் இருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான். இந்தப் பகுதியில் உள்ள குடிநீர்க் குழாய்களில் வரும் நீர், கால்வாய் நீர் கலந்துவருகிறது; துர்நாற்றம் வீசுகிறது; மஞ்சள் நிறத்தில் வருகிறது. அந்த நீரைக் குடிக்கப் பயன்படுத்தாவிட்டாலும், கழிப்பறைக்கு ஊற்றுவதற்கு வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதுகூடக் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை. சில நேரங்களில் நள்ளிரவு தொடங்கி விடியற்காலைக்குள்ளேயே வந்து நின்றுவிடுகிறது அல்லது காலை 7 மணிக்கு வந்து 10 மணிக்குள் நின்றுவிடுகிறது அல்லது மாலை நேரங்களில் வருகிறது.

மொத்தத்தில் சொல்லப்போனால் குறிப்பிட்ட நேரம் வைத்துத் தண்ணீரை விடுவதில்லை. அந்தத் தண்ணீரைச் சோதனை செய்வதற்கு அதிகாரிகளும் வருவதில்லை. ஏதோ, அதாவது வருகிறதே என்று நினைத்து அதைப் பிடிக்கிறோம். குடிப்பதற்கு மட்டும் குடிநீர் லாரியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதுவும் வரவில்லையென்றால் கேன் வாட்டர் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதனால் கேன் வாட்டர் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இப்படியே போனால் இங்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் போய்விடும்” என்கின்றனர் அவர்கள். 

ஆர்கே நகர்

வேறு பிரச்னைகள்!

இதுதவிர, இன்னும் சில பிரச்னைகளையும் அவர்கள் அடுக்குகிறார்கள். “பொதுவாக இந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நாள்தோறும் மக்கள் அவஸ்தைப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்புகளால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவுக்கு மருத்துவர்களும், பணியாளர்களும் இல்லாமல் இருக்கிறார்கள். ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள் சரியாக வழங்கப்படுவதில்லை. முதியோர்களுக்கு முறையாக ஓய்வூதியம் கிடைக்கப்பெறுவதில்லை. தெருநாய்களும் வெறிநாய்களும் கட்டுப்படுத்தப்படாமல் வலம்வருகின்றன. ரயில்வே டிராக்குகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ்கூட விரைவாக வர முடிவதில்லை.

ஆர்.கே.நகர்

குறிப்பாக இந்தத் தொகுதிகுட்பட்ட கொடுங்கையூர் குப்பைமேட்டால்  பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. யானைக்கால் வியாதியும், தோல் வியாதியும் ஏற்படுகிறது. பராமரிப்பின்றி மின்கம்பங்கள் கீழே விழும் நிலையில் இருக்கின்றன. மிகவும் ஆபத்தான வயர்கள் தரையில் கிடக்கின்றன. இதனால், மழை - வெள்ளப் பாதிப்பின்போது மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாகின்றன. அதற்கு உதாரணம், கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது. ஐ.ஓ.சி-யிலிருந்து சென்னைத் துறைமுகம்வரை எண்ணெய்க் குழாய்கள் பூமிக்கு மேலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆர்.கே.நகர்த் தொகுதியின் உட்புறப் பகுதிகளில் சிக்னல் இல்லாததால் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன” என அவர்களுடைய பட்டியல் நீளுகிறது. 

“இரண்டு முறை, முதல்வரையே வென்றெடுத்த இந்தத் தொகுதியில் இவ்வளவு பிரச்னைகளா” என்று ஆச்சர்யத்துடன் அவர்களிடம் கேட்டோம்... “ஆம்” என்றவர்களிடம், “இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்” என்றோம். 

“இந்த முறை வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கும் நபருக்கும், மக்களோடு அன்யோன்யமாகப் பழகும் நபருக்கே எங்கள் ஓட்டு இருக்கும்” என்கின்றனர் அவர்கள் தெளிவாக. 

தொகுதி மக்களின் குமுறல்களைக் கொஞ்சம் கவனத்தில்கொள்ளுங்கள் வேட்பாளர்களே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்