வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (07/12/2017)

கடைசி தொடர்பு:14:28 (07/12/2017)

'வெற்றி பெற எந்த எல்லைக்கும் தினகரன் செல்வார்'- ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற தினகரன் எந்த எல்லைக்கும் செல்வார். அதைத் தடுத்து மதுசூதனனின் வெற்றிக்காக கட்சியினர் பாடுபட வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கறாராக தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. தீவிர தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா இல்லாமல் இந்த இடைத்தேர்தலை ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சந்திப்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளனர். ஆனால், பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினரிடையே நிலவும் கருத்துவேறுபாடு வெற்றி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பது தி.மு.க., டி.டி.வி. தினகரனின் கணக்காக உள்ளது. இதனால், பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, கட்சியினருக்கு நீண்ட நேரம் பாடம் எடுத்துள்ளார் பன்னீர்செல்வம். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.வினர் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி நிலவுகிறது. தி.மு.க.வினரின் பிரசாரத்துக்குப் பதிலடி கொடுப்பதுகுறித்து பன்னீர்செல்வம் விரிவாகப் பேசினார்.

அடுத்து, ஜெயலலிதா வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில் தோல்வியடையக் கூடாது. அம்மா போட்டியிட்டபோது தமிழகத்திலிருந்து கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பிரசாரத்துக்காக வரவழைக்கப்பட்டனர். அதுபோல இந்த முறையும் செயல்பட வேண்டும்.  யார், யாருக்கு எந்த இடம் என்று பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அம்மாவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டவர்களின் விவரம், அவர்கள் பணியாற்றிய பூத்கள் மூலம் கிடைத்த ஓட்டுக்கள் குறித்து விரிவாக பேசிய பன்னீர்செல்வம், சம்பந்தப்பட்டவர்களிடம் கடந்தமுறையைப்போல இந்த முறையும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கூறினார். தொடர்ந்து, அதிக ஓட்டுக்கள் பெற்ற நிர்வாகிகளை பாராட்டியதோடு அதே உத்வேகத்துடன் இந்த முறையும் பிரசாரத்தில் ஈடுபட்டு மதுசூதனனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மூன்று வார்டுகளுக்கு ஒரு அமைச்சர், மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர்களுக்கு மீண்டும் அதே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அ.தி.மு.க.வுக்கு குறைவாக ஓட்டுக்கள் கிடைத்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார் பன்னீர்செல்வம். அடுத்து, அவர் சூசகமாக பேசியது கட்சியினருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. ``இந்தத் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் கருத்துவேறுபாடின்றி ஒற்றுமையாக பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். அதிக ஓட்டுக்கள் பெற்றுக் கொடுக்கும் பூத் பொறுப்பாளர்களுக்கு எதிர்பார்க்காத பரிசு கட்சி சார்பில் கொடுக்கப்படும். அ.தி.மு.க. வெற்றி ஒன்றே நம்முடைய  இலக்காக இருக்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதுபோல இந்த முறையும் நடக்கக்கூடாது. இந்த தேர்தலில் மதுசூதனனை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் பொறுப்பாளர்களுக்கு உள்ளது. இதுவரை நிகழ்ந்த மனகசப்புகளை அனைவரும் மறந்து, மன்னித்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தேர்தலை ரத்துசெய்ய சிலர் முயற்சி செய்வார்கள். அதைத் தடுக்க வேண்டும். அடுத்து, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். பெண்களின் ஓட்டுக்களைப் பெற வீடு, வீடாக  சென்று மகளிரணியினர் ஓட்டுக்கேட்க வேண்டும். இந்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு அ.தி.மு.க.வில் எடுக்கப்படும் புதிய மாற்றங்கள் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதை மனதில் வைத்து அனைவரும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்'' என்றார்.

இதையடுத்து, பன்னீர்செல்வத்தின் தேர்தல் வியூகத்தில் சில மாற்றங்களைச் செய்ய கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஏனெனில் ஜெயலலிதா இருந்தசமயத்தில் அ.தி.மு.க. ஒற்றுமையாக செயல்பட்டது. ஆனால், இன்றைக்கு சூழல் மாறியிருக்கிறது. இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்து டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றிபெற அவரது தரப்பினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அடுத்து, அ.தி.மு.க.வின் பிளவு தி.மு.க.வினருக்கு பலமாக அமையும். இதனால் அ.தி.மு.க. ஓட்டுக்கள் ஓட்டுமொத்தமாக இரட்டை இலைச் சின்னத்துக்கு கிடைக்க வேண்டும். அதில் ஒரு ஓட்டுக்கள்கூட தினகரனுக்கு கிடைக்கவிடக்கூடாது.

தீபா, விஷால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது ஒருவகையில் நமக்கு பலம்தான். இதனால் அ.தி.மு.கவே போட்டியிடுவதாகக் கருதி அ.தி.மு.க. வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் மூத்த அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார்.
கண்கொத்திப் பாம்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு உள்ளது. அதுதவிர தி.மு.க.வினரின் பார்வை நம் அனைவரின் மீது உள்ளது. பணப் பட்டுவாடாவைத் தடுக்க சி.சி.டி.வி.கேமரா பொருத்த வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. இதனால், அ.தி.மு.க-வினர் கவனமாக செயல்பட வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுக்கு பொறுமையாக பாடம் எடுத்துள்ளனர். அதன்படி தேர்தல் பொறுப்பாளர்கள் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.


டிரெண்டிங் @ விகடன்