வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (07/12/2017)

கடைசி தொடர்பு:12:55 (07/12/2017)

தினகரனுக்கு அனுமதி மறுப்பு; கரகாட்டம், தாரைதப்பட்டையுடன் இறங்கிய ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்! கலகலக்கும் ஆர்.கே.நகர் தொகுதி

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்ய டி.டி.வி.தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று களத்தில் இறங்கினர். கரகாட்டம், தாரைதப்பட்டையுடன் முதல்வரும், துணை முதல்வரும் பிரசாரத்தில் இறங்கியுள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி கலகலப்புடன் காணப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் உள்ளிட்டவர்கள் வீடு வீடாக, தெருத் தெருவாக இறங்கி பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர். சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்ய காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், காவல்துறையினர் பிரசாரத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சசிகலா ஆதரவாளர் வெற்றிவேல் இன்று சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், "ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள டி.டி.வி.தினகரனுக்கு காவல்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்துவருகின்றனர். பிரசாரத்துக்காக ஆன்லைன் மூலம் தினகரன் விண்ணப்பித்ததை ஏற்க காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். தினகரன் பிரசாரம் செய்ய அனுமதிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று காலை ஆர்.கே.நகர் தொகுதியில் களத்தில் இறங்கினர். கொருக்குப்பேட்டையில் உள்ள கோயிலில் முதல்வர், துணை முதல்வருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தரிசனத்துக்குப் பின்னர் இவர்கள் பிரசாரத்தைத் தொடங்கினர்.

திறந்த ஜீப்பில் முதல்வர், துணை முதல்வர் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர். கரகாட்டம், தாரைதப்பட்டையுடன் அ.தி.மு.க-வினர் தொகுதியை அமர்க்களப்படுத்திவருகின்றனர். மகளிர் அணியினரும் சீருடையுடன் அணிவகுத்து முதல்வர், துணை முதல்வரை வரவேற்றனர்.