வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (07/12/2017)

கடைசி தொடர்பு:17:02 (07/12/2017)

“தினகரன் ஆயிரம் வாக்குகள் கூட பெறக் கூடாது!” - ஆர்.கே.நகரை இறுக்கும் எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive

ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி

ஆர்.கே.நகர் தொகுதிக்குள் தினகரனை நுழையவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது காவல்துறை. தாரை தப்பட்டைகளுடன் தொகுதியை அதகளம் செய்துகொண்டிருக்கிறது அ.தி.மு.க. ‘பொதுச் செயலாளராக சசிகலா இருந்தபோதே, அவருடைய பேனரை தூக்கியெறிந்தவர் எடப்பாடி பழனிசாமி. தினகரனை செல்வாக்கற்றவராகக் காட்டுவதுதான் இந்தத் தேர்தலின் நோக்கம்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை பிரசாரம் செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வந்தனர். பூரண கும்ப மரியாதையோடு வரவேற்பு அளித்த அ.தி.மு.கவினர், தாரை தப்பட்டைகள் முழங்க தொகுதி மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தனர். இந்தக் காட்சிகளை தினகரன் ஆதரவு நிர்வாகிகள் அதிர்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தனர். காரணம், கடந்த நான்கு நாள்களாக ஆர்.கே.நகர் தொகுதிக்குள் நுழைய தினகரனுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்த தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், 'ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள டி.டி.வி.தினகரனுக்குக் காவல்துறையினர் தொடர்ந்து அனுமதி மறுத்துவருகின்றனர். பிரசாரத்துக்காக ஆன்லைன் மூலம் தினகரன் விண்ணப்பித்ததை ஏற்க காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். அவரைப் பிரசாரம் செய்ய அனுமதிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 

“வெற்றிவேல் கொடுத்த புகார் மனுவின் மீது அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. தொப்பி சின்னத்தைக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றம் வரையில் சென்ற தினகரனுக்குத் தோல்வியே மிஞ்சியது. தற்போது ஆர்.கே.நகரில் மூன்று தினகரன்கள் போட்டியிடுகின்றனர். நான்காவதாகத்தான் டி.டி.வியின் பெயரே வருகிறது. அவர் கேட்ட தொப்பி சின்னமும் கிடைக்கப் போவதில்லை. தனிமரமாகவே நின்று தேர்தலை சந்திக்கிறார். அவரை டெபாசிட் இழக்க வைப்பதுதான் எங்கள் நோக்கம்" என விவரித்த ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், “அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா இருந்தபோதே, தலைமைக் கழகத்திலிருந்து அவரது புகைப்படத்தை அப்புறப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.

அதன்பிறகு, தலைமைக் கழகத்துக்குள் தினகரனை நுழையவிடாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தினார். தேர்தல் ஆணையம் முடிவெடுக்காத நேரத்தில், அவர்தான் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். அவருக்கு நெருக்கமான சென்னை நிர்வாகிகளால்கூட தினகரனை கட்சி அலுவலகத்துக்குள் நுழைய வைக்க முடியவில்லை. ‘தினகரனுக்குச் சொந்த ஊரில் மட்டும்தான் செல்வாக்கு. சென்னைக்குள் அவருடைய ஆதிக்கம் எடுபடாது' என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் எடுத்து வருகின்றனர். அவருக்கென்று தனிப்பட்ட மதிப்பு எதுவும் இல்லை என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்” என்கிறார். 

இதையடுத்து, நம்மிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், “தினகரனின் சொந்த மாவட்டமான பெரியகுளத்திலிருந்து அதிக வாகனங்களில் சிலர் வந்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு, தொகுதியை விட்டு வெளியேற்றும் வேலையில் காவல்துறை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தினகரனால் உதவி பெற்றவர்கள்தாம் இவர்கள் அனைவரும். இவர்கள் மூலமாக வாக்காளர்களை கேன்வாஸ் செய்யும் வேலைகள் நடந்து வந்தன. தொகுதியின் எந்த வார்டுக்குள் நுழைந்தாலும், தினகரனும் சங்கடத்தோடுதான் வெளியேறுவார். ஜெயலலிதா சமாதியில் தடுமாறியது போலத்தான் ஆர்.கே.நகரிலும் பிரசாரத்தை எதிர்கொள்ளப் போகிறார். தன்னுடைய செல்வாக்கை வைத்து ஆயிரம் வாக்குகளைக்கூட அவரால் வாங்க முடியாது. அந்தளவுக்கு ஒவ்வொரு வாக்காளர்களையும் அ.தி.மு.கவினர் சந்தித்து வருகின்றனர்" என்றார். 
 


டிரெண்டிங் @ விகடன்