`தலைமைத் தேர்தல் ஆணையம் வரை கொண்டு செல்வேன்’ - ஆர்.கே.நகரில் கொதித்த விஷால்

ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தைத் தலைமைத் தேர்தல் ஆணையம் வரை கொண்டு சென்று நியாயத்துக்காகப் போராடுவேன் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதற்காக மனுத்தாக்கல் செய்தார். முதலில் அவர் வேட்புமனு ஏற்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரை முன்மொழியாதவர்கள் இரண்டு பேரின் பெயர்கள் வேட்புமனுவில் இடம்பெற்றிருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான இறுதிநாளான இன்று இதுதொடர்பாகத் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியை நேரில் சந்தித்து விஷால் முறையிட்டார். 

அந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ``எனது வேட்புமனுவை ஏற்பதாகத் தேர்தல் அலுவலர் கூறியது அந்த அலுவலக சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. ஆனால், நிராகரிக்கப்பட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் விளக்கம் கேட்டால், அவரை நாங்கள் மிரட்டியதாகவும் அதனாலேயே எனது வேட்புமனுவை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் இப்போது கூறுகிறார்.

என்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டது தொடர்பான ஆடியோ ஆதாரத்துடன் தேர்தல் அலுவலரிடம் நாங்கள் கெஞ்சிய வீடியோ காட்சிகள் உள்ளன. ஆனால், அவரை நான் மிரட்டியதாகத் தற்போது புகார் கூறுகிறார். என்னை முன்மொழியவில்லை என்று கூறிய சுமதி மற்றும் தீபன் ஆகிய இரண்டு பேரை தேர்தல் அலுவலர் முன்பாக 3 மணிக்குள் ஆஜராக்க வேண்டும் என்று ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து அறிந்து தேர்தல் அலுவலரிடம் கேட்டதற்கு, தான் அப்படிக் கூறவில்லை என்று தெரிவித்துவிட்டார். இதுதொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையம் வரை சென்று நீதிக்காகப் போராடுவேன்’ என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!