ஆர்.கே.நகரில் தொப்பி சின்னம் இவருக்குதான்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 4-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்த விஷால், ஜெ.தீபா உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த விவகாரம் அனலைக் கிளப்பியுள்ள நிலையில், மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உதவியால் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிகிறது.  

கடந்த இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், இந்தத் தேர்தலிலும் ஒதுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தை, நமது கொங்கு முன்னேற்றக் கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எழுச்சித் தமிழர் முன்னேற்றக் கழகம் எனப் பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகள் கோரின. இதையடுத்து, குலுக்கல் முறையில் நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்குத் தொப்பி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதேபோல், தினகரன் கோரிய மற்றொரு சின்னமான விசில் சின்னத்தை, கேசவலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தினகரன் கேட்டிருந்த கிரிக்கெட் பேட் சின்னமும் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அவருக்குச் சின்னம் ஒதுக்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயத்துக்கு வழக்கம்போல் இரட்டை மெழுகுவத்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பி-படிவத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லாததால், அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னத்தை மதுசூதனனுக்கு ஒதுக்க தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!