வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (08/12/2017)

கடைசி தொடர்பு:11:57 (08/12/2017)

'ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற இவரை நீக்குங்கள்!' - பன்னீர்செல்வத்திடம் கொதித்த கட்சியினர் #RKNagarAtrocities

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வெற்றி பெற வேண்டும் என்றால் தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேலின் மாவட்டச் செயலாளர் பதவியை அதிகாரபூர்வமாக பறிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் கட்சியினர் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் எரிமலையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது, தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே தொகுதியில் அக்கப்போர் நடந்துவருகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரசாரத்தை தொடங்கினாலும் இரண்டு தரப்பினரும் இன்னமும் ஒற்றுமையாக செயல்படவில்லை. பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இடையே தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக இல்லை. இதே நிலை நீடித்தால் வேட்பாளர் மதுசூதனனுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர் அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள். 

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, 256 பூத்களுக்கு 40 பேர் விதம் பொறுப்பாளர்களாக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்தது. அப்போது, கடந்த தேர்தல்களில் பூத் கமிட்டியில் நியமிக்கப்பட்டவர்களையே இந்த முறையும் நியமிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் தினகரனின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். இந்த தகவல் தெரிந்ததும் பன்னீர்செல்வம் ஷாக் ஆகியுள்ளார். அவர்களைத் தவிர மற்றவர்களை நியமிக்கலாம் என்றால் அனுபவமில்லாதவர்களிடம் தேர்தல் பணிகளை ஒப்படைக்க வேண்டாம் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், தினகரன் அணியில் இருக்கும் பூத் கமிட்டியினரை தங்கள் பக்கம் இழுக்குமாறு கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிக்காக பொறுப்பாளர்களை நியமிப்பதிலும் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியினருக்கு இடையே ஈகோ பிரச்னைத் தலைதூக்கியுள்ளதாம். குறிப்பிட்ட வார்டுகளைத் தங்களுக்கு ஒதுக்குமாறு இரண்டு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். இது, தேர்தல் பொறுப்பாளர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளிலிருந்து முதல்வர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால், சிறப்பான ஏற்பாடுகளை அமைச்சர் தரப்பு செய்து பழனிசாமியிடமும், பன்னீர்செல்வத்திடமும் நல்ல பெயரை வாங்கியுள்ளது. பன்னீர்செல்வம், பழனிசாமி சென்ற இடங்களில் எல்லாம் மகளிரணியினர் மூலம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து இருவரின் முகங்களும் பிரகாசமாகின. ஆனால், கட்சியின் நிர்வாகிகளிடையே பழனிசாமி, பன்னீர்செல்வம் அணி என்ற வேறுபாடு இன்னமும் நிலவுகிறது. அதை தினகரன் அணியினர் வேடிக்கைப்பார்ப்பதோடு, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வினர், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 10,240 பேரை பூத் கமிட்டியில் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, கடந்த முறை தேர்தலில் பூத் கமிட்டியில் நியமிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து தினகரன் அணியிலேயே இருக்கின்றனர். இதனால், பூத் கமிட்டியினரை முழுமையாக நியமிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பணத்தை செலவழிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

 அடுத்து, வடசென்னையில் தினகரனின் ஆதரவாளராக இருக்கும் வெற்றிவேலுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. அதை மீறி பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினரால் முழுமையாக தேர்தல் பணிகளில் ஈடுபட முடியவில்லை. தினகரன் தரப்பினர் பணத்தை அள்ளிவீசி கட்சியினரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர். மேலும், வெற்றிவேலிடம் மாவட்டச் செயலாளர் பதவியும் இருப்பதால் கட்சியினர் பலர் இன்னமும் அவரது சொல்படி நடக்கின்றனர். மாவட்டச் செயலாளர் பதவியை அவரிடமிருந்து அதிகாரபூர்வமாக பறிக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம், பழனிசாமியிடம் கட்சியினர் முறையிட்டனர். அதுதொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டச் செயலாளர் பதவி காலியாகுவதால் அதைப் பெற எம்.பி. ஒருவரும், நடிகர் விஷால் விவகாரத்தை வெற்றிகரமாக முடித்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரும் முட்டிமோதுகின்றனர். இதற்கிடையில் கடந்தமுறை அ.தி.மு.க தேர்தல் அலுவலகம் இருந்த இடத்தை இந்தமுறை முன்கூட்டியே தி.மு.க.வினர் கைப்பற்றிவிட்டனர். இதனால், வசதியற்ற இடத்தில்தான் அ.தி.மு.க.வுக்கு தேர்தல் அலுவலகம் அமைக்க இடம் கிடைத்துள்ளது. பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினரிடையே ஒற்றுமையில்லாத காரணத்தால் தேர்தல் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது" என்றனர். 

 தினகரன் தரப்பினரிடம் பேசிபோது, "பதவியைக் காப்பாற்றதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் கட்சியினர் இருக்கின்றனர். ஆட்சி அதிகாரம் பறிக்கப்பட்டபிறகு மீண்டும் தினகரனிடம் அவர்கள் சரண் அடைவார்கள். கட்சியில் சசிகலா, தினகரனுக்கு உள்ள செல்வாக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவு மூலம் தெரியவரும். எங்களிடம் உள்ள பூத் கமிட்டியினரை அந்த அணியினர் மிரட்டுகின்றனர். நடிகர் விஷால் விவகாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தொப்பி சின்னம் எங்களுக்கு கிடைக்காமல் போனாலும் பெண்கள் தினமும் பயன்படுத்தும் குக்கர் சின்னம் கிடைத்துள்ளது. இதனால் சின்னத்தை எளிதில் பிரபலப்படுத்திவிடுவோம். இந்த தேர்தலில் தினகரனின் வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால்தான் பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் நடிகர் விஷாலுக்குகூட பயப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்றனர்.