வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (08/12/2017)

கடைசி தொடர்பு:15:02 (08/12/2017)

`கிறிஸ்துமஸ் பரிசாகப் பிரஷர் குக்கர், 7 ஆயிரம் ரூபாய்!' - ஆர்.கே.நகரை ரவுண்ட் கட்டும் தினகரன் #RKNagarAtrocities

தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் விறுவிறுப்பைக் காட்டத் தொடங்கிவிட்டன. ' அ.தி.மு.கவின் வெற்றியைத் தடுக்கும் வகையில் தனது ஆட்களைக் களமிறக்கிவிட்டிருக்கிறார் தினகரன். கிறிஸ்துமஸ் பரிசாக பிரஷர் குக்கர் வழங்கத் தொடங்கியுள்ளனர். இந்தமுறை வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் வரையில் கொடுக்க உள்ளனர்" என்கின்றனர் தொகுதிவாசிகள். 

தொப்பி சின்னத்தை எதிர்பார்த்து டெல்லி உயர் நீதிமன்றம் வரையில் சென்ற தினகரனுக்கு, பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். 'துரோகிகளுக்கு பிரஷர் கொடுக்கும்விதமாகவே இந்த சின்னம் கிடைத்திருக்கிறது' எனப் பேட்டி அளித்தார் தினகரன். ' பிரஷரால் வெடிக்கப் போவது யார் என்பது தேர்தல் முடிவில் தெரிய வரும்' என்கிறார் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். அ.தி.மு.கவுக்கு எதிராக தினகரன் நடத்தும் போராட்டத்துக்கு வலு சேர்க்கும்விதமாக பெரியகுளத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் திரளாக ஆர்.கே.நகரில் குவிந்துள்ளனர். மதுசூதனனை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என பெரும்படையே களம் இறங்கியிருக்கிறது. இந்நிலையில், தொகுதிக்குள் பிரசாரம் செய்ய போலீஸ் அனுமதி மறுப்பதாக நேற்று தேர்தல் ஆணையத்தில் புகார் கூறியிருந்தார் வெற்றிவேல்.

லோகநாதன்நேற்று குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, வழக்கம்போல களத்தில் இறங்கிவிட்டார் தினகரன். " அ.தி.மு.கவின் வாக்குகளைப் பிரிப்பதை ஒன்றையே நோக்கமாக வைத்துக்கொண்டு தினகரன் தரப்பினர் தொகுதிக்குள் வலம் வருகின்றனர். நேற்று மாலைதான் சின்னத்தை ஒதுக்கீடு செய்தார் தேர்தல் அலுவலர். அன்று இரவே பத்து மணியளவில் குக்கர் விநியோகம் தொடங்கிவிட்டது. இங்குள்ள தமிழன் நகரில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் கிறிஸ்துமஸ் பரிசாக வீடுகளுக்கு குக்கரைக் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்" என ஆதங்கத்தோடு விளக்கினார் ஆர்.கே.நகர் தொகுதியின் முன்னாள் சி.பி.எம் கட்சி வேட்பாளர் லோகநாதன். அவர் நம்மிடம், " தொகுதிக்குள் ஒரு பாகத்துக்கு ஆயிரம் வாக்குகள் வரையில் உள்ளன. இவற்றில் கிறிஸ்துவ மக்களை மட்டும் குறிவைத்து கேக்குடன் குக்கரைக் கொடுக்கின்றனர். 

ஒரு பாகத்துக்கு முப்பது கிறிஸ்துவ குடும்பங்கள் உள்ளன. சில பாதிரிமார்களின் துணையோடுதான் இந்த விநியோகம் நடந்துவருகிறது. நம்பய்யா தெருவில் படித்தவர்கள் அதிகம் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளியில் வர மாட்டார்கள். இவர்களது வீடுகளுக்கே சென்று பரிசுப் பொருள்களைக் கொடுக்கின்றனர். கடந்தமுறை தினகரன் போட்டியிட்டபோது, கட்சிப் பணிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு 200 ரூபாய் கொடுத்தனர். தற்போது பெண்களுக்கு 300 ரூபாயும் ஆண்களுக்கு 400 ரூபாயும் கொடுக்கின்றனர். ஆறு மாதத்துக்குள் தொகையும் உயர்ந்துவிட்டது. இதுதவிர, தேர்தல் பணிகளுக்காகக் கூடும் இடங்களில் கறி சாப்பாடு, மீன் குழம்பு என சமையல் வேலை செய்வதற்கு தனி ஆட்களை நியமித்துள்ளனர். வாக்கு சேகரிக்கச் செல்லும் தினகரன் ஆட்கள், ' வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். நிச்சயமாக 7 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்' என உறுதியளிக்கின்றனர்.

இதற்குக் காரணம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வாக்குக்கு எட்டாயிரம் ரூபாய் வரையில் கொடுக்கலாம் என்ற தகவல் கிடைத்ததால்தான். யார் எவ்வளவு தருவார்கள் என்றுதான் இங்குள்ள பெரும்பாலான வாக்காளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதில் ஆறுதலான விஷயம் ஒன்றுதான். வெளியூர் கார்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக டிராவல்ஸ் கார்களில் வந்து இறங்குகின்றனர். டிசம்பர் 10-ம் தேதிக்குப் பிறகு களநிலவரம் முற்றிலும் மாறிவிடும் என்கின்றனர். அதற்குள் முதல்கட்ட விநியோகத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர் ஆளும்கட்சி பிரமுகர்களும் தினகரன் தரப்பினரும். தொகுதியின் அடிப்படை பிரச்னைகளைப் பற்றி ஆளும்கட்சியோ தினகரன் தரப்பினரோ கண்டுகொள்ளவே இல்லை" என்றார் இயல்பாக. 

" ஆர்.கே.நகரைப் பொறுத்தவரையில் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் வெற்றி வித்தியாசம் என்பது நாற்பதாயிரம் வாக்குகள்தான். இதில் தினகரன் பிரிக்கப் போவது மதுசூதனனுக்கு வரும் ஓட்டுக்களைத்தான். இதனால் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு எளிதாகலாம். இதை உணர்ந்துதான் பணத்தைக் கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது தி.மு.க. ஆர்.கே.நகரில் தி.மு.கவுக்காக வேலை பார்த்த பலரும் தினகரன் தரப்பிடம் விலை போய்விட்டார்கள் என்பதுதான் நிஜம். அறிவாலய பிரமுகர்கள் தீவிரமாக ஆராய வேண்டிய பிரச்னை இது" என்கின்றனர் ஆர்.கே.நகர் தி.மு.க நிர்வாகி ஒருவர். 


டிரெண்டிங் @ விகடன்