ஆர்.கே.நகர் தேர்தல்- விஷாலின் அடுத்த மூவ் என்ன? #RKNagarAtrocities

விஷால்

''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான அ.தி.மு.க வெற்றிபெறுவதற்காகக் கையாளப்பட்ட யுக்திகளில் ஒன்றுதான் விஷால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது” என்கிறார்கள் அ.தி.மு.க-வுக்கு நெருக்கமானவர்கள். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைத் தமிழகமே உற்றுநோக்கிவரும் நிலையில், 'இடைத்தேர்தலில் ஆளும் தரப்பே வெற்றிபெறும்'  என்ற வழக்கம் உடைந்துவிடுமோ என்ற அச்சம் ஆளும் அ.தி.மு.க தரப்புக்கு ஏற்பட்டுவிட்டது என்றே தெரிகிறது. மதுசூதனன் வெற்றிக்காக அனைத்து யுக்திகளையும் கையாள அ.தி.மு.க. தரப்பு முடிவு செய்துவிட்டது. அதன் ஒரு பகுதிதான் விஷால் வேட்புமனு நிராகரிப்பு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

அ.தி.மு.க தரப்புக்கு நெருக்கமான சிலரிடம் இதுகுறித்து பேசியபோது, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆரம்பத்தில் வேட்பாளர் தேர்வில் குழப்பங்கள் ஏற்பட்டது உண்மைதான். சிலருக்கு மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியதில் உடன்பாடு இல்லை. அதனால்தான்  வேட்பாளர் அறிவிப்பு முடிந்து ஒன்றிரண்டு நாள்கள் அ.தி.மு.க முகாம் கொஞ்சம் அமைதிகாத்தது. ஆனால், அதன்பிறகு முதல்வர் வீட்டிலும், அ.தி.மு.க அலுவலகத்திலும்  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற உத்வேகம் அ.தி.மு.க-வினரிடையே ஏற்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே திட்டத்துடன் தினகரன் களம் இறங்கியிருப்பதை நிர்வாகிகள் பலரும் ரசிக்கவில்லை. இந்த நிலையில்தான் விஷாலின் திடீர் என்ட்ரி அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே பலமான கூட்டணியோடு தி.மு.க களத்தில் இறங்கியுள்ளது. அதோடு தினகரன் ஒருபக்கம், அ.தி.மு.க-வின் வாக்குகளைப் பிரிக்க களத்தில் இறங்கி உள்ளார். இந்த நிலையில், விஷாலும் ஆர்.கே.நகரில் களத்தில் இறங்கினால், மதுசூதனனுக்குப் பக்கபலமாக இருக்கும் தெலுங்கர்கள் வாக்கு சிதறும் என்று மதுசூதனன் தரப்பில் இருந்தே சொல்லப்பட்டது. 

ஆர்.கே.நகரில் விஷால் ஒன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இளைஞர்கள் வாக்கையும், தெலுங்கர்கள் வாக்கையும் கணிசமாகப் பெற்றுவிடுவார் என்ற அச்சம் ஆளும் தரப்பான அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்டது உண்மை. அதனால்தான் திரைப்படங்களில் ஹீரோவாக ஜொலித்த விஷால், ஆளும்தரப்புக்கு ஒரேநாளில் வில்லனாக மாறிப்போனார். விஷால் திரைநட்சத்திரமாக இருப்பதால் அந்த மாயையில் ஓட்டுகள்  பிரிந்துவிடாமல் இருக்க, அவரைத் தேர்தல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்துவதைத் தவிர, வேறு வழிதெரியவில்லை. 

அதன்பிறகுதான் ஆர்.கே.நகரில் முக்கியப் புள்ளி ஒருவர் வீட்டில் அவசர ஆலோசனை நடைபெற்றது. சில அதிகாரிகளிடமும் ஆளும் தரப்பு ஆலோசனை நடத்தியது. அதன் முடிவில்தான் முன்மொழிந்தவர்களைக் கஸ்டடிக்குக் கொண்டுவரும் முடிவினை எடுத்தார்கள். சுமதி என்ற பெண்ணின் வீட்டுக்கே சென்று மதுசூதனனுக்கு நெருக்கமானவர்கள் சிலர் பேசியுள்ளார்கள். வேட்புமனு பரீசிலனை நடைபெற்று விஷால் மனு நிராகரிக்கப்பட்ட  நேரத்தில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் உட்பட முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர். 

மதுசூதனன்

ஆனால், எதிர்பார்த்ததைவிட விஷால் தரப்பு வீரியமாகக் களம் இறங்கி மறியல் போராட்டம் என ஒட்டுமொத்த மீடியாக்களை அவர்கள் பக்கம் திருப்பியதும், வேறு வழியில்லாமல் தேர்தல் அலுவலர் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார். அந்தத் தகவல் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்து சேர்ந்ததும், முதல்வர் தலைமையில் மீண்டும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. அந்த ஆலோசனையின் அடிப்படையில் சில உத்தரவுகள் பறந்துள்ளன. அதன்பிறகு தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, விஷால் வேட்புமனு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளிவந்த பிறகே, அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து முதல்வரின் கான்வாய் புறப்பட்டது. 

விஷால் தரப்பில் முன்மொழிந்த இருவரைக் காணவில்லை என்று சொல்லியுள்ளார்கள். ஆனால், அவர்கள் எங்கே, யார் கஸ்டடியில் இருந்தார்கள் என்ற விவரங்கள் எல்லாம் விஷாலுக்குத் தெரியாமல் இல்லை. தெரிந்தும் அவர் சொல்லாததற்குக் காரணம் ஆளும் தரப்பு வேறு ரூபத்தில் அடுத்த அஸ்திரங்களை ஏவும் என்று தெரிந்துதான்” என்கிறார்கள்.

இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் வெளியில் இருந்து மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்லியுள்ளார் விஷால். அதாவது சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் களம் இறங்கி அ.தி.மு.க வாக்குகளைச் சிதறடிக்க முடிவு செய்துள்ளார் விஷால். 

விஷால் விவகாரத்தில் இப்படி ஒரு முடிவு வரும் என்று தி.மு.க தரப்பு நினைக்கவே இல்லையாம். விஷால் களத்தில் நின்றால் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று தி.மு.க தரப்பு ஒருபுறம் நினைத்தது. அதனால்தான் விஷால் மனு நிராகரிக்கப்பட்டதும், தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் காட்டமாக அறிக்கை கொடுத்ததன் பின்னணி என்கிறார்கள். 

அரசியல் என்றால் என்ன என்பதை ஒரே நாளில் விஷாலுக்குப் புரியவைத்துவிட்டார்கள் ஆளும் தரப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!