‘சசிகலா எதிர்ப்பு, ஸ்டாலினுக்குச் சாதகமாகிவிடக் கூடாது!’ - ஆர்.கே.நகரில் ‘கறார்’ காட்டிய எடப்பாடி பழனிசாமி | Edappadi Palanisamy advice to party workers on RK Nagar by election

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (11/12/2017)

கடைசி தொடர்பு:14:49 (11/12/2017)

‘சசிகலா எதிர்ப்பு, ஸ்டாலினுக்குச் சாதகமாகிவிடக் கூடாது!’ - ஆர்.கே.நகரில் ‘கறார்’ காட்டிய எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனை வெற்றிக்காகத் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர் அமைச்சர்கள். ‘தினகரனை எதிர்ப்பது ஒருபுறம் இருந்தாலும், 'சசிகலா எதிர்ப்பில் இருக்கும் சமுதாய வாக்குகள் எதுவும் தி.மு.க பக்கம் சென்றுவிடக் கூடாது' என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். இதற்காக, சமுதாய அமைப்புகளை தனது வீட்டுக்கே வரவழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

‘இலையா...சூரியனா?’ என்ற முழக்கத்தை பிரதானமாக வைத்து ஆர்.கே.நகர் தேர்தல் களம் சுழன்றாலும், பிரஷர் குக்கரின் வேகத்தைக் கண்டு மலைத்துப் போகின்றனர் தொகுதிவாசிகள். ‘நாம் வெல்வதைவிட மதுசூதனன் தோற்க வேண்டும்' என்பதில் உறுதியாக உள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். தினகரன் தரப்பினரின் விநியோகம் குறித்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது ஆளும்கட்சி. “இந்தத் தேர்தலை மிகுந்த எச்சரிக்கையோடு அணுகி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கட்சி கைக்கு வந்த பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேநேரம், தன்னுடைய தலைமைப் பண்புக்கு விடப்பட்ட சவாலாக இந்தத் தேர்தலைப் பார்க்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த 2016 பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராகக் களமிறக்கப்பட்டார் தி.மு.கவின் சிம்லா முத்துச்சோழன். அப்போது சசிகலா மீது இருந்த எதிர்ப்பில் தொகுதியைச் சேர்ந்த நாற்பதாயிரம் நாடார் வாக்குகளில் பெரும்பான்மையானவை தி.மு.க வேட்பாளருக்குச் சென்று சேர்ந்தது. 'இந்தமுறை இந்த வாக்குகளைத் தவறவிடக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

ஸ்டாலின்“சென்னை, அடையாறில் உள்ள முதல்வர் இல்லத்தில் சமுதாயத் தலைவர்கள் தினம்தோறும் வந்து செல்கின்றனர். நேற்று ஆர்.கே.நகரைச் சேர்ந்த சமுதாய பிரமுகர்களிடம் வெளிப்படையாக பேசியிருக்கிறார் முதல்வர். அப்போது, ‘அவைத்தலைவர் என்ற முறையில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். ‘மூத்த தலைவரை நிறுத்த வேண்டும்’ என சக நிர்வாகிகள் உறுதியாகக் கூறியதால், அவரை நிறுத்தினோம். இரட்டை இலை எங்கள் பக்கம் வந்த பிறகு, சசிகலா குடும்பத்துக்கு எதிராக நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். சசிகலா கட்சிப் பதவியில் நீடித்தபோதே, அவருடைய பேனரை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்திலிருந்து நான் நீக்கினேன். தினகரனை கட்சி அலுவலகத்துக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை. அந்தக் குடும்பத்தால் நீங்கள்பட்ட கஷ்டங்களை அருகில் இருந்து பார்த்தவன் நான். இன்றளவும் அந்தக் குடும்பத்துக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடந்தமுறை தி.மு.க வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளைச் செலுத்தினீர்கள். இதற்குக் காரணம், சசிகலா மீதான எதிர்ப்புதான். இந்தமுறை அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது.

சசிகலாகடந்தமுறை நிறுத்தப்பட்ட அதே வேட்பாளருக்கு, இந்தமுறை ஸ்டாலின் ஏன் வாய்ப்பு தரவில்லை? இதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும். இந்த ஆட்சிக்கு எதிராக ஆதாரமில்லாத விஷயங்களைப் பேசிக்கொண்டு வருகிறார் ஸ்டாலின். இரட்டை இலைக்கே உங்கள் வாக்குகள் வந்து சேர வேண்டும்' என விவரித்தவர், ‘சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் காமராஜருக்கு மிகப் பெரிய மணிமண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளோம். மேற்கு மாவட்டங்களில் உள்ள பனை மரத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளோம். ஆர்.கே.நகரில் அபரிமிதமான வெற்றி கிடைத்துவிட்டால், நீங்கள் முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றும்’ என உறுதியளித்தார். முதல்வரின் கருத்தை சமுதாயத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர்” என்றார் விரிவாக. 

“அ.தி.மு.கவில் காலச்சூழல்கள் மாறிவிட்டது என்பதை ஆர்.கே.நகர் தொகுதியில் கோலோச்சும் சமுதாயத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். அதற்கேற்ப, சமூகத்துக்கு மக்களிடம் ஆளும்கட்சிக்கு ஆதரவான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தென்மாவட்டங்களில் செல்வாக்காக இருக்கும் அமைச்சர்களை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘ஜெயலலிதா இருந்தபோது பெற்ற வாக்கு சதவீதத்தை, ஆர்.கே.நகரில் அப்படியே பெற வேண்டும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார்” என்கிறார் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். 

வீட்டுக்கு வீடு பிரஷர் குக்கரை இறக்கி, ஆளும்கட்சியின் பிரஷரை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார் தினகரன். ‘சாதாரண மனிதராக இருந்த சேகர்ரெட்டியை மிகப் பெரிய நபராக வளர்த்துவிட்டது எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும்தான். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் மத்திய அரசிடம் அடிபணிந்துள்ளனர். இவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், ஆர்.கே.நகரில் இவர்கள் தோற்க வேண்டும்' என்பதுதான் தினகரனின் வாதமாக இருக்கிறது. ‘இந்தச் சண்டையில் மருதுகணேஷ் பெருவாரியாக வெற்றி பெறுவார்’ என உறுதியாக நம்புகின்றனர் உடன்பிறப்புகள்.


டிரெண்டிங் @ விகடன்