`தினகரனின் ஒருநாள் பிரசார செலவு ரூ. 3 கோடி!’ - மிரளவைக்கும் ஆர்.கே.நகர் கணக்கு #VikatanExclusive | Rupees 3 crores per day was spent during dinakaran's campaign

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (13/12/2017)

கடைசி தொடர்பு:14:52 (13/12/2017)

`தினகரனின் ஒருநாள் பிரசார செலவு ரூ. 3 கோடி!’ - மிரளவைக்கும் ஆர்.கே.நகர் கணக்கு #VikatanExclusive

தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் தமிழக அமைச்சர்கள். ‘தினகரன் தரப்பினரின் பிரசார வியூகத்தைப் பார்த்து தி.மு.க நிர்வாகிகளே மிரண்டுபோய் உள்ளனர். நான்கு வீடுகளுக்கு குக்கர் சின்னத்தை வரைந்து அ.தி.மு.க வேட்பாளருக்கு அதிர்ச்சி கொடுக்கின்றனர்' என்கிறார்கள் ஆர்.கே.நகர் அரசியல் பிரமுகர்கள். 

தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க எம்.பி-க்கள் எனப் பிரசார களத்துக்குள் நுழைபவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். நேற்று மாலை 7 மணியளவில் பிரசாரத்துக்குச் சென்ற எம்.பி வைத்திலிங்கத்தின் கார்மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தென்மாவட்ட அமைச்சர்கள் பலரும் தினகரன் தரப்பினரின் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. 'சின்னம்மாவுக்குத் துரோகம் செய்துவிட்டுப் போனவர்களுக்கு, நாம் யார் என்பதைக் காண்பிக்க வேண்டும்' எனப் பெரியகுளத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் கொதிக்கின்றனர்.

சசிகலா“தாக்குதல், கல்வீச்சு என நாள்தோறும் அதிகரிக்கும் வன்முறைக் காட்சிகளின்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் தினகரன் ஆட்கள்மீது தாக்குதலை நடத்துகின்றனர். இவர்களோடு உள்ளூர் போலீஸாரும் கை கோத்துச் செயல்படுகின்றனர். இந்த வழக்குகளிலிருந்து ஆதரவாளர்களைக் காப்பாற்ற வக்கீல் குழு ஒன்றை நியமித்திருக்கிறார் தினகரன். ஆர்.கே.நகரில் உள்ள 14 மண்டலங்களுக்கும் தலா ஆறு வக்கீல்கள் எனப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தினகரன் ஆதரவாளர்களான பழனியப்பன், செந்தில்பாலாஜி, மாரியப்பன் கென்னடி, தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 14 முக்கிய நிர்வாகிகளை மண்டலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின்கீழ் இந்த வக்கீல் குழு இயங்குகிறது. ‘டி.டி.வி அட்வகேட் விங்' என்ற பெயரில் இவர்கள் செயல்படுகின்றனர். காவல்நிலையங்களுக்கு டி.டி.வி ஆதரவாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டால், இந்தக் குழு உடனடியாகக் களமிறங்கும்" என விவரித்த தினகரன் ஆதரவாளர்களில் ஒருவர், 

“தினகரன் பிரசாரத்துக்கு வருகிறார் என்று சொன்னாலே, தாய்மார்கள் கூட்டம் திரள்கிறது. தெருவுக்குத் தெரு சாலையில் குக்கர் சின்னங்களை வரைந்துள்ளனர். இப்படி வரைவதற்குத் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. இருப்பினும், ஒவ்வொரு கூட்டத்துக்கும் 3 ஆயிரம் பேர் வரையில் கூடுகின்றனர். இவர்களுக்கான செலவுகள், ஆரத்திச் செலவுகள், நிர்வாகிகளின் செலவுகள் ஆகியவற்றைக் கணக்கிட்டால் நாளொன்றுக்கு மூன்றரை கோடி ரூபாய் வரையில் செலவாகிறது. இதற்கான நிதி ஆதாரம் யார் மூலம் வருகிறது என்பதைக் கணிக்கவே முடியவில்லை. ஆனாலும், அவரவர் தேவைக்கான பணம் உடனடியாக வந்து சேர்ந்துவிடுகிறது.

அ.தி.மு.க எவ்வளவு பணம் கொடுத்தாலும், அதற்கு மேல் 1,000 ரூபாய் கொடுப்போம் என்பதை உறுதியாகக் கூறிவிட்டோம். தேர்தலில் பணம் செலவழிக்கும் முடிவில் தி.மு.க இல்லை என்பதால், தினகரனுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. தினம்தோறும் கூடும் கூட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் குவிந்துள்ளனர். இவர்களுக்குப் பிரசாரப் பணிகளைப் பிரித்துக் கொடுக்கும் பணிகளில் மண்டலப் பொறுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவதுதான் தினகரனின் நோக்கம்” என்றார் விரிவாக. 

“தொடக்கத்தில் தினகரனோடு முரண்பட்டுக்கொண்டிருந்த குடும்ப உறவுகள் அனைவரும் ஆர்.கே.நகர் களத்துக்கு வரத் தொடங்கிவிட்டனர். இரண்டு நாள்களுக்கு ஆர்.கே.நகர் தொகுதிக்குள் தீவிர பிரசாரம் செய்தார் ஜெயானந்த். விவேக் தரப்பில் இருந்தும் தினகரனுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வது, ஆட்களைத் திரட்டுவது என களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதை நேரில் பார்த்த அமைச்சர்கள் சிலர், தினகரனை நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். ‘சின்னம்மாதான் எங்களுக்கு எல்லாம். வேறுவழியில்லாமத்தான் இங்க இருக்கோம். சின்னம்மா சிறையிலிருந்து வந்ததும் நாங்களும் வந்துவிடுவோம். எங்கள் மீது கோபம்கொள்ள வேண்டாம்' எனப் பேசியுள்ளனர். அதேபோல், சிறையிலிருந்தும் குடும்ப உறவுகளுக்கு மெசேஜ் வந்துள்ளது. ‘எவ்வளவு சண்டைகள் இருந்தாலும் தேர்தல் வெற்றிக்காகப் பாடுபடுங்கள். நமது குடும்பத்தின் கௌரவமும் இதில் அடங்கியிருக்கிறது. நாம் யார் என்பதை இந்தத் தேர்தலின் முடிவு காட்ட வேண்டும்' எனக் கூறியிருக்கிறார் சசிகலா. அதன் விளைவாகத்தான் மன்னார்குடி சொந்தங்கள் களமிறங்கியுள்ளன" என்கிறார் பெரியகுளத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். 

தனது பிறந்தநாளையொட்டி திருப்பதிக்குச் சென்றுள்ள டி.டி.வி.தினகரன், அங்கிருந்து திருவண்ணாமலைக்குப் பயணப்பட இருக்கிறார். அதன்பிறகு ராமாவரம், எம்.ஜி.ஆர் தோட்டத்துக்கு வருகை தந்துவிட்டு, மாலை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வர இருக்கிறார். அவரது ஒவ்வொரு நாள் பிரசார பாணியையும் கதிகலங்கியபடியே கடந்து செல்கின்றனர் அமைச்சர்கள். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close