வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (13/12/2017)

கடைசி தொடர்பு:17:49 (13/12/2017)

தி.மு.கவுக்கும் சேர்த்தே 'செக்' வைக்கிறார் தினகரன்!  - ஆர்.கே.நகரை ஆய்வு செய்த ஐ.பி. #RKNagarAtrocities

தினகரன் பிரசாரம்

ஆர்.கே.நகரில் நடக்கும் காட்சிகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். ' சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி, இளைஞர்கள் மத்தியிலும் தினகரனுக்கான செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.கவின் வாக்கு வங்கிக்கும் சேர்த்தே அவர் குறிவைக்கிறார்' என்ற மத்திய உளவுத்துறையின் அறிக்கையை தீவிரமாக அலசி வருகின்றனர். 

' இலையா? சூரியனா...' என்ற வாதத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு தொகுதி முழுக்க குக்கர் விசில் சத்தத்தைப் பரவவிட்டிருக்கிறார் தினகரன். தாய்மார்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பாரபட்சமில்லாமல் விநியோகத்தில் ஆர்வம் காட்டி வருகிறது தினகரன் டீம். அமைச்சர்களுக்கு எதிராக வரிந்து கட்டும் தினகரன் ஆட்களால், தொகுதி முழுக்க கலவர அபாயம் சூழ்ந்திருக்கிறது. வேட்புமனுத் தாக்கலின்போதே அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக முழக்கமிட்டனர் தினகரன் ஆதரவாளர்கள். கடந்த சில நாட்களாக, தென்மாவட்ட அமைச்சர்களை குறிவைத்து சில காட்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தேர்தல் குறித்து மத்திய உளவுத்துறை அறிக்கையை தீவிரமாக அலசி வருகின்றனர் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகள். 

கடந்த சில வாரங்களாக ஆர்.கே.நகரில் முகாமிட்டிருந்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், தொகுதி நிலவரம் குறித்து விரிவான அறிக்கையை டெல்லிக்கு அளித்துள்ளனர். அந்த அறிக்கையில், ' தேர்தல் களத்தில் பணம் பிரதானமாக இருக்கிறது. தொகுதி முழுக்க 5 சதவீதமான முக்குலத்தோர் வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளைக் கவர அந்த சமூகத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அந்த மக்கள் மத்தியில் தினகரனின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இவர்களில் 75 சதவீதம் பேர் தினகரனுக்குத்தான் வாக்களிக்க இருக்கின்றனர். காரணம், தங்களது சமூகத்தின் அடையாளமாக அவர்கள் தினகரனைப் பார்க்கின்றனர்.

அதேபோல், கிறிஸ்துவ, முஸ்லிம் மக்களும் தினகரனை ஆதரிக்கின்றனர். பிரதமர் மோடிக்கு எதிரான சிறுபான்மை மக்களின் அலை, தினகரனை நோக்கிச் சென்றுள்ளது. பொதுவாக, சிறுபான்மை மக்கள் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். இந்தமுறை அவர்கள் தினகரனை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. முன்னர் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டபோது, தொகுதிக்குள் தினகரன் தரப்பினர் கொடுத்த நான்காயிரம் ரூபாயை மக்கள் மறக்கவில்லை. இதையும் தாண்டி ஆர்.கே.நகர் இளைஞர்களில் கணிசனமானவர்கள் தினகரனை ஆதரிக்கின்றனர். தமிழகம் முழுவதும் அவருக்கு நான்கு சதவீத ஆதரவு இருப்பதாக, சர்வே அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தோம். அவரே தேர்தல் களத்தில் நிற்பதால் இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன' எனக் கள நிலவரத்தைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், " ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாநில தலைவர் தமிழிசை முன்வைத்திருக்கிறார். ' தேர்தலை நடத்துவதால் அரசியல்ரீதியாக என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்?' என்பதை டெல்லி பா.ஜ.க மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திவிட்டு, ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தலாமா என்ற பேச்சும் எழுந்து வருகிறது. அதற்குள் தினகரன் தரப்பினரின் நடவடிக்கைகளுக்கு தடை போடும் திட்டமும் இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கினால், தன்னை செல்வாக்குமிக்கவராகக் காட்டிக் கொள்வார் தினகரன். இதனை முறியடிப்பது குறித்துத்தான் பா.ஜ.க நிர்வாகிகள் விவாதித்து வருகின்றனர்" என்றார் விரிவாக. 

'தேர்தலை ரத்து செய்துவிட்டுப் போங்கள்' என்ற தமிழிசையின் பேச்சுக்கும் ' இடைத்தேர்தலை ரத்து செய்தால், ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்துவிடுவார்கள்' என இல.கணேசன் சொல்வதையும் ஒரே தட்டில் வைத்து அலசி ஆராய்கிறது டெல்லி பா.ஜ.க தலைமை. 
 


டிரெண்டிங் @ விகடன்