வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (13/12/2017)

கடைசி தொடர்பு:19:00 (13/12/2017)

`ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தடுக்காவிட்டால்...' - கொதிக்கும் ஆர்.எஸ்.பாரதி

வருகிற 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தெருத் தெருவாகச் சென்று அனல் பறக்க பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றனர். அங்கு பணப்பட்டுவாடாவை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. ஆனால், அதையும் மீறி விதவிதமான முறையில் பணப்பட்டுவாடா நடந்து வருவதாகப் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்துப் பணப்பட்டுவாடா குறித்த புகாரை தி.மு.க-வின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

ஆர்.எஸ்.பாரதி

புகார் மனுவை அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் பணப்பட்டுவாடா தொடர்பாகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் மனு அளித்துள்ளோம். பணப்பட்டுவாடாவைத் தடுக்காவிட்டால் தேர்தல் சுமுகமாக நடைபெறாது. பணப்பட்டுவாடாவைத் தடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம். ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியினரும் டி.டி.வி அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு பணப்பட்டுவாடா செய்கின்றனர்' என்று குற்றம் சாட்டினார்.