`நாங்க பா.ஜ.க-வை ஆதரிக்கல...' - முஸ்லிம்களிடம் ஓட்டுகேட்கும் அ.தி.மு.க-வினர் 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்


 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுக்களைப் பெற அ.தி.மு.க-வினர் புதிய வியூகத்தை அமைத்துள்ளனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். மதுசூதனன் வெற்றிக்காக அ.தி.மு.க-வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் நேரத்தில் தொகுதியில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வினர், "தொகுதியில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் தொழுகைக்கு வரும் ஆண் முஸ்லிம்களிடம் மட்டுமே வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், நாங்கள் வீடுகளிலிருக்கும் முஸ்லிம் பெண்களிடம் ஓட்டுகேட்க முடிவு செய்துள்ளோம்.

இதற்காக அ.தி.மு.க மகளிரணி மூலம் முஸ்லிம் பெண்களிடம் ஓட்டுவேட்டை நடத்தப்படுகிறது. அதோடு, வ.உ.சி.நகர், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் சென்று வாக்குசேகரித்துவருகின்றனர். பிரசாரத்தில் பா.ஜ.க-வை நாங்கள் ஆதரிக்கவில்லை. தினகரன்தான் பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று கூறி இரட்டை இலைச் சின்னத்துக்கு ஓட்டுக்கேட்கிறோம். மேலும், முஸ்லிம்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி, புனித பயணத்துக்கான சலுகை என ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும் எடுத்துக் கூறுகிறோம். இதனால் 60 சதவிகித முஸ்லிம்களின் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றனர். 

 தொகுதியில் உள்ள முஸ்லிம் ஓட்டுக்களைப் பெற அன்வர்ராஜா எம்.பி-க்கும் தமிழ்மகன் உசேனுக்கும் இடையே அக்கப்போர் நடந்துவருகிறதாம். இருதுருவங்களாக அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. தினமும் ஒவ்வொரு அமைச்சர்களுடன் இணைந்து தமிழ்மகன் உசேன், ஜெ.எம்.பஷீர் உள்ளிட்ட முஸ்லிம் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!