ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம்! - கலவரக்காடான ஆர்.கே.நகர்! #RKNagarAtrocities

பிடிபட்ட 2000 ரூபாய் நோட்டுகள்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு வழங்க கொண்டு வந்த பணத்தைத் தி.மு.க-வினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதனால், ஆர்.கே.நகர் களேபரக் களமாக மாறியுள்ளது. 

ஆர்.கே.நகர் களேபரம்

ஆர்.கே.நகர் தொகுதியின் மன்னப்பன் தெரு, நாவலர் நகர், மூப்பனார்நகர், ஆர்.கே.நகர் ஒன்று மற்றும் இரண்டாவது தெரு, எழில்நகர், பிள்ளையார் கோயில் தெரு ஆகிய இடங்களில் இன்று பகல் பணப்பட்டுவாடா நடந்தன. 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளை, பிரம்புக் கூடை மற்றும் கட்டைப் பைகளில் அடுக்கி வைத்துக்கொண்டு வந்தனர் சிலர். அதை தி.மு.க-வினரும் நடுநிலையாளர்களும் தடுத்ததால் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதேபோல் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காகக் கொருக்குப்பேட்டையில் உள்ள ஆர்த்தோ பிசியோதெரபி சென்டரில் பதுக்கியிருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளையும் தி.மு.க-வினர் கைப்பற்றினர். அவற்றின் எண்ணிக்கை 13 லட்ச ரூபாய் ஆகும். இச்சம்பவம் குறித்த தகவலைப் பெற்ற தேர்தல் அதிகாரிகள், தொகுதிக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் தினகரன் தரப்பும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க தரப்பும் மோதிக்கொண்டன. நிலைமையைச் சரிசெய்ய முதல்முறையாகத் துணை ராணுவத்தினர் கட்சிக்காரர்களைப் பிடித்து சாலை ஓரமாகத் தள்ளிவிட்டனர். பின்னர் கட்சிக்காரர்களை எச்சரித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதிகளில் பதற்றநிலை நீடிக்கிறது. தேர்தல் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நேற்று பொறுப்பேற்ற பத்ரா, "இதுவரையில் பொதுவான புகார்களே எங்களுக்கு வந்திருக்கிறது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறோம்" என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!