வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (18/12/2017)

கடைசி தொடர்பு:11:55 (18/12/2017)

ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு அனைத்தும் நேரடி ஒளிபரப்பு! உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

'ஆர்.கே.நகரில், அனைத்து வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவுகள் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்' என்று உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும்கட்சியினர் மற்றும் தினகரன் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துவருதவாக தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அனைத்து வாக்குச்சாவடிகளின் வாக்குப்பதிவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜராக வழக்கறிஞர், ஒவ்வொரு வாக்காளரும் ஓட்டுக்கு பணம் பெறுவதாக தி.மு.க சித்திரிக்கிறது. தேர்தலை நிறுத்தும் நோக்கத்துடன் தி.மு.க வழக்குத் தொடர்ந்துள்ளது. 15 கம்பெனி துணை ராணுவப்படை கண்காணிப்பில் உள்ளது. ஆர்.கே. நகரில் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடி வாக்குப்பதிவுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை  இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் கூறினார்.

அப்போது குறுக்கிட்டு வாதாடிய தி.மு.க வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறப்பு அதிகாரி பத்ரா வந்த நாளன்றே, ரூ.100 கோடி பணப்பட்டுவாடா நடந்ததாகப் புகார் வந்துள்ளது என்று தெரிவித்தார்.