வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (18/12/2017)

கடைசி தொடர்பு:13:26 (18/12/2017)

1 லட்சம் வாக்குகளுக்கு ரூ.60 கோடி!  - தி.மு.கவை உறைய வைத்த தினகரன்

தினகரன் பிரசாரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான காரணங்களைத் தேடி வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். ' வாக்குக்கு ஆறாயிரம் என தினகரனும் ஐந்தாயிரம் என அ.தி.மு.கவும் தி.மு.கவும் களமிறங்கியுள்ளன. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைகளை இறைப்பதன் மூலம், தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் தினகரன். இந்தத் தேர்தலில் அவர் மட்டும்தான் லாபம் பார்க்கப் போகிறார்' எனக் கொந்தளிக்கின்றனர் பா.ஜ.கவினர். 

இடைத்தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் மூன்று நாள்களே உள்ளன. இன்று காலை தினகரனின் ஆதரவாளர்கள் யாரும் தொகுதிக்குள் பிரசாரம் செய்யவில்லை. வாக்காளர்களைக் கவனிக்க நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் ஏராளமான ஆட்டோக்களில் கிளம்பிவிட்டனர். ' தங்களுக்கு வர வேண்டியதைப் பெற்றுக்கொள்ளத்தான் நிர்வாகிகள் கிளம்பியுள்ளனர். தொகுதிக்குள் இன்று இரவு விநியோகம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்' என்கின்றனர் தினகரன் தரப்பினர். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் வெற்றிபெறுவதற்கான பணத்தை வாரிக் கொடுப்பார்கள். நாம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனப் பேசிய தி.மு.கவினரும் களத்தில் இறங்கிவிட்டனர். 

" தி.மு.கவில் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 2 பாகம் எனப் பிரித்துள்ளனர். அந்தப் பாகத்தில் தி.மு.கவுக்கு சாதகமாக விழக்கூடிய 500 வாக்காளர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு மட்டும் 5 ஆயிரம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.  இது ஒரு பெரிய தொகை இல்லை என மூத்த நிர்வாகிகள் நினைக்கின்றனர். தொகுதிக்குள் பிரசாரம் செல்லும்போது, 'தினகரன் ஆட்கள் பணம் கொடுக்கிறார்களா?' என தி.மு.க நிர்வாகிகள் கேட்டால்கூட, ' அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கேட்க வேண்டாம். உங்களுக்கு வரக்கூடிய ஓட்டுக்கள் வரும். கொடுக்கிறவர்களையும் தடுக்க வேண்டாம்' எனப் பொதுமக்கள் சொல்கின்றனர். ' இப்படியே போனால் மூன்றாம் இடம்தான் மிஞ்சும்' என்பதால் ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்" என விவரித்த ஆர்.கே.நகர் தி.மு.க பிரமுகர் ஒருவர், " தினகரன் மற்றும் ஆளும்கட்சி நிர்வாகிகளின் பிரசாரத்தைப் பார்த்து தி.மு.க சீனியர்களே உதறலில் இருக்கின்றனர். தொகுதிக்குள் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கும் பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளையும் தினகரன் தரப்பினர் வளைத்துவிட்டார்கள். தி.மு.கவின் உள்ளூர் நிர்வாகிகள் சிலர் தினகரன் பக்கம் தலைசாய்க்கத் தொடங்கிவிட்டனர் என்பதை அறிந்து, உடனடியாக அவர்களுக்குத் தேவையானதை செட்டில் செய்துவிட்டனர் சீனியர் தி.மு.க நிர்வாகிகள். கட்சி நிர்வாகிகளைக் கண்காணிக்க வேண்டிய சூழலுக்குத் தி.மு.க தள்ளப்பட்டுவிட்டது" என்றார் விரிவாக. 

ஆர்.கே.நகர் அ.தி.மு.க பிரசாரம்

" ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பினரின் வேகத்தைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அ.தி.மு.க எடுத்து வருகிறது. தொகுதிக்குள் தினகரனுக்கு ஆதரவான முக்கிய பிரமுகர்களை கைதுசெய்யும் வேலைகள் தீவிரமடைந்து வருகின்றன. ' எங்கள் பக்கம் வந்துவிடுமாறு அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பணத்தைக் காட்டி விலை பேசுகின்றனர்' என்றெல்லாம் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தார் அண்ணா நகரைச் சேர்ந்த வேலு. இவர்மீது உள்ளூர் காவல்நிலையத்தில் சில வழக்குகள் இருக்கின்றன. பிரசாரத்தில் இவர் காட்டும் வேகத்தைப் பார்த்து, பழைய லாட்டரி வழக்கைக் காரணம் காட்டி கைதுசெய்துவிட்டனர். அதேபோல், குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்கச் செல்லும் முன்னாள் வட்டச் செயலாளர்கள், பகுதிக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் பழைய கிரிமினல் பின்புலத்தை ஆராய்ந்துவருகின்றனர் போலீஸார். தேர்தலுக்கு ஓரிருநாள் முன்பு இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வளைக்கப்படலாம்" என்கிறார் தேர்தல் பணிகளைக் கவனித்து வரும் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். 

சி.பி.எம் கட்சியின் ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் லோகநாதனிடம் பேசினோம். " பத்து வாக்காளர்களுக்கு ஒரு ஆள் என்ற கணக்கில் தினகரன் தரப்பினர் பிரசாரம் செய்கின்றனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் 99 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார் ஜெயலலிதா . அவருக்கு அதிகப்படியான வாக்குகள் எந்த பூத்தில் விழுந்தது என்பதைக் கணித்து, அதற்கேற்ப 1 லட்சம் பேருக்குத் தலா ஆறாயிரம் ரூபாய் எனப் பணப்பட்டுவாடாவை முடித்துவிட்டனர். தேர்தலுக்கு முந்தைய நாள்களில் கண்காணிப்பு பலமாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே பண விநியோகத்தை நிறைவு செய்ய உள்ளனர். அரசு இயந்திரம் இருப்பதால் எந்தவித தயக்கமும் இல்லாமல் அ.தி.மு.கவினரும் பணம் கொடுக்கின்றனர். வாக்குக்கு ஆறாயிரம், ஐந்தாயிரம் என்பது அவ்வளவு ஆரோக்கியமான அரசியலாகத் தெரியவில்லை" என்றார் கவலையோடு. 

" பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் யார் மீதும் வழக்குப் பதிவு செய்ய முடிவதில்லை. இதுவரையில் பொதுமக்களிடம் இருந்து எங்களுக்கு எந்தவிதப் புகார்களும் வரவில்லை" என்கிறார் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர். 


டிரெண்டிங் @ விகடன்