வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (19/12/2017)

கடைசி தொடர்பு:13:13 (19/12/2017)

' ஸ்டாலினுக்கு அதிர்ச்சி மட்டும்தான் கிடைக்கப் போகிறது!'   - எடப்பாடி பழனிசாமியின் 'ஆர்.கே.நகர் ஃபார்முலா' #RKNagarAtrocities

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரமும் பணவிநியோகமும் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டன. ' இடைத்தேர்தல்களில் நாம் பெற்ற வெற்றி இங்கும் தொடரும். தேர்தலை நிறுத்த சதிவேலைகளில் தி.மு.க ஈடுபட்டது. தேர்தல் முடிவுகள் ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும்' எனப் பேசியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள்முதல் திருவிழாக்களை விஞ்சும் வகையில் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது ஆர்.கே.நகர். பணம் கொடுத்த வீட்டின் முகப்பில் அடையாளக் குறியீடுகள், பரிசுப் பொருள்கள், வாக்குறுதிகள், எங்கும் வியாபித்திருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் என தொகுதிவாசிகள் யாரும் வேலைக்குச் செல்லாதவாறு பார்த்துக்கொண்டனர் சில வேட்பாளர்கள். ஆர்.கே.நகரில் விநியோகத்தால் பிரச்னை வரும் எனக் கணித்து மாற்றுப் பகுதிகளுக்கு மக்களை வரவழைத்துப் பணத்தைக் கொடுத்தனர். வாக்காளர்களை அழைத்து வரும் கட்சிக்காரர்களுக்கு 20 சதவிகித கமிஷன் என அசர வைத்தனர். கடந்த ஓரிரு நாள்களாக ஆளும்கட்சியும் தினகரன் தரப்பும் வாக்காளர்களை முழுமையாக வளைத்துவிட்டனர்.

பிரசாரத்தில் ஈடுபடும் தி.மு.கவினரிடம் பேசும் மக்கள்கூட, ' கொடுப்பவர்களைத் தடுக்க வேண்டாம்' எனக் கேட்டுக் கொண்டனர். இரட்டை இலை கைக்கு வந்த பிறகு எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால், ஒட்டுமொத்த அமைச்சர்களையும் களத்தில் இறக்கிவிட்டிருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட தேர்தல் பணிகளில் பலத்தைக் காட்டும் நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார். தொகுதி முழுக்க சமுதாயரீதியான வாக்குகளைப் பெறுவதற்கான அந்தந்த சமூக அமைச்சர்களுக்கு தனி அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருந்தது. நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை சந்தித்து ஆதரவு கொடுத்தார் பாலபிரஜாபதி அடிகளார். ' நமக்கான முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதாவைச் சுற்றியிருந்த சிலரால்தான் நமக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இனி எந்த இடையூறுகளும் நமக்கு இல்லை. இரட்டை இலைக்குத்தான் நாம் வாக்களிக்க வேண்டும்' எனப் பிரசாரம் செய்துவிட்டுப் போனார். 

ஆர்.கே.நகரில் தி.மு.க பிரசாரம்

இந்நிலையில், நேற்று கொங்கு மண்டல அமைச்சர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் குறித்து விவரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ' ஆர்.கே.நகரில் இலைதான் மலரப் போகிறது. 50 சதவிகித வாக்குகளை நாம் பெறுவோம். மிகக் குறைவான வாக்குகளையே தினகரன் பெறுவார். குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு அவரும் அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவார். நீண்டகாலம் அரசியல்வாதியாக அவரால் நீடிக்க முடியாது. ஆர்.கே.நகர் மட்டுமல்ல, ஏராளமான தேர்தல் களங்களை நான் பார்த்திருக்கிறேன். தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் கிடைத்த தெளிவான வெற்றியை நாம் பெறுவோம். ஒவ்வொரு பூத்துகளிலும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கிடைக்கப் போகிறது. மத்திய அரசிடம் நல்ல உறவில் இருக்கிறோம். தேர்தலைத் தடுக்க பல்வேறு முயற்சிகளில் தி.மு.க இறங்கியது. தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றியது, 40 ஆயிரம் வாக்காளர்களை நீக்கியது, போலீஸ் அதிகாரிகளை மாற்றியது என மனு கொடுத்தே காரியங்களைச் சாதித்தனர். எப்படியும் தேர்தலை நிறுத்திவிடுவார்கள் என நம்பினார் ஸ்டாலின். அவரது முயற்சி பலிக்கவில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகள் வரும் எனவும் பேசியிருக்கிறார். ' அம்மா (ஜெயலலிதா) வழியிலேயே சிறுபான்மை மக்களுக்கான அரசாக இது தொடரும்' என அவர்களிடம் பிரசாரம் செய்தோம். இவர்களது வாக்குகளை தி.மு.வும் தினகரனும் பெறப் போவதில்லை. தேர்தலை தடுத்து நிறுத்த மேற்கொள்ளப்பட்ட சதிகளை முறியடித்துவிட்டோம்' எனப் பேசியிருக்கிறார். 

முதல்வரின் பேச்சுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், " ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பெற்ற 1 லட்சம் வாக்குகளை குறிவைத்து தலைக்கு 6 ஆயிரம் என விநியோகித்தனர் தினகரன் தரப்பினர். நாங்களோ தொகுதி முழுக்க இருக்கும் இரண்டரை லட்சம் வாக்காளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் கவனித்தோம். பணமும் இரட்டை இலைச் சின்னமும் மதுசூதனனுக்கு வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். முந்தைய இடைத்தேர்தல்களைவிட இரண்டு மடங்கு வெற்றியைப் பெறுவோம் என அமைச்சர்கள் உறுதியாக நம்புகின்றனர். தி.மு.கவையும் தினகரனையும் பின்னுக்குத் தள்ளுவது மட்டும்தான் அமைச்சர்களின் ஒரே நோக்கம்" என்றார். 

திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சும் வகையில் ஆர்.கே.நகருக்கு என தனி அத்தியாயத்தை எழுதி முடித்துவிட்டனர் அமைச்சர்கள். ' இரண்டாம் இடத்துக்கு வந்தால் போதும்' என்ற மனநிலையில் இருக்கின்றனர் தினகரன் தரப்பினர். ' அதிருப்தி வாக்குகள் நம்மைத் தேடி வரும், எளிதில் வெற்றி பெறுவோம்' என நம்பிக் கொண்டிக்கிறது தி.மு.க தலைமை. வாக்குப் பதிவை நல்லமுறையில் நடத்தி முடிக்கும் பதற்றத்தில் இருக்கிறது தேர்தல் ஆணையம். 


டிரெண்டிங் @ விகடன்