‘தினகரனுக்கு 85% மதுசூதனனுக்கு 50%’ - பழனிசாமியின் தேர்தல் கணக்கு

அ.தி.மு.க பிரசாரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 80 சதவிகித வாக்காளர்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்ய, அ.தி.மு.க -வினர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், 30 சதவிகிதத்தை தேர்தல் பொறுப்பாளர்களாக இருக்கும் சிலர் ஆட்டையப் போட்டுவிட்டதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், டிசம்பர் 21-ம் தேதி நடக்கிறது. தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இரட்டை இலைச் சின்னம் கிடைத்த உற்சாகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க-வினர் உள்ளனர். இந்தத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் தினகரன். அதே நேரத்தில், ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் இந்தத் தேர்தலின் வெற்றியைத் தன்மானப் பிரச்னையாகக் கருதுகின்றனர் அ.தி.மு.க-வினர். அ.தி.மு.க-வில் உள்ள பிளவு, தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று கருதுகின்றனர் தி.மு.க-வினர்.

ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளநிலையில், இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. தேர்தலில் வெற்றிபெற திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டுள்ள சில கட்சிகளால் தொகுதியில் 2000 ரூபாய் நோட்டுகள் சர்வசாதாரணமாக புழங்கப்படுகின்றன. பணப்பட்டுவாடாவைத் தடுத்த தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படையினரும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ததோடு, லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் தரப்பில் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அ.தி.மு.க-வுக்குப் போட்டியாகக் களமிறங்கிய தினகரன் தரப்பில், ஓட்டுக்கு அ.தி.மு.க-வினரைவிட கூடுதலாகப் பணம் கொடுத்ததாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுத்த சிலரை, எதிர்க்கட்சியினர் கையும் களவுமாகப் பிடித்து, தேர்தல் ஆணையம் மற்றும் போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். 

 தினகரன் பிரசாரம்

இதுகுறித்து அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகையில், “ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்காகத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்மூலம் தீவிர ஓட்டுவேட்டை நடந்துவருகிறது. தேர்தலில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்களைக் கச்சிதமாக முடித்துவிட்டோம். ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை தினகரன் தேர்தலில் நின்றபோது, தொகுதியில் 85 சதவிகித வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா நடந்தது. தற்போது, மதுசூதனனுக்கு 80 சதவிகித பணப் பட்டுவாடா செய்ய முடிவுசெய்யப்பட்டது. குறிப்பாக, தி.மு.க ஓட்டுகள் எனக் கருதப்படும் வாக்காளர்களைத் தவிர்த்துவிட்டோம். ஆனால், சில தேர்தல் பொறுப்பாளர்கள், வாக்காளர்களுக்குச் சரிவர பணம் பட்டுவாடா செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தகையவர்களிடம், கட்சித் தலைமை விசாரணை நடத்திவருகிறது. பணம் சரிவர பட்டுவாடா செய்யப்படவில்லை என்பதால், கூடுதலாக ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.

பண விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடியால், அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பணத்தை சரிவர பட்டுவாடா செய்யாதவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. விசாரணைக்குட்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், 'இப்போது சம்பாதிக்கவில்லை என்றால் இனி எப்போது சம்பாதிக்க முடியும்' என்று கூலாக சொல்லியிருக்கின்றனர். மேலும், 'இந்த ஆட்சியில் கட்சியினருக்கு ஆதாயம் தரக்கூடிய வகையில் எந்த வேலையும் நடக்கவில்லை. ஆட்சியை நடத்தவே கட்சித் தலைமையில் உள்ளவர்கள் திணறிவருகின்றனர். இதனால்தான் இந்த இடைத்தேர்தலை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்' என்று கூறியிருக்கின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரது தில்லாலங்கடி வேலையால், மதுசூதனனின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அறிந்த தினகரன் தரப்பு உற்சாகம் அடைந்ததோடு, ஓர் ஓட்டுக்கு 10 ஆயிரம் என்ற கணக்கில் செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகரில் குக்கர் சத்தம் கேட்டுவிடக் கூடாது என்பதில் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் கவனமாக இருக்கின்றனர். தினகரனுக்கு செக் வைக்கும் வகையில் சில வேலைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தினகரன் ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பழனிசாமி, பன்னீர்செல்வம் டீம், பணம் வாக்காளர்கள் கையில் கிடைக்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். அ.தி.மு.க உள்கட்சிப் பூசலால், தொகுதியில் உற்சாகமடைந்துள்ளார் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ். இதற்கிடையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட சிறப்புத் தேர்தல் அலுவலர் விக்ரம் பத்ரா டெல்லி விரைந்துள்ளார். இது, கட்சியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறைபோல இந்த முறையும் தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சத்தில் வேட்பாளர்கள் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!