வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (20/12/2017)

கடைசி தொடர்பு:09:40 (24/12/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவைப் பாதிக்குமா இரட்டை இலையின் 6,000 கணக்கு!

ஆர்.கே.நகர் தேர்தல் பிராச்சாரம்

“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி  தரப்பின் கடைசி  நேரக் கவனிப்பினால், தேர்தல் முடிவு ஆளுங்கட்சிக்குச் சாதகமாக வந்துவிடும்” என உளவுத்துறையினர் இறுதி ரிப்போர்ட் கொடுத்துள்ளார்கள். 

ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலின் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்துவிட்டது. தேர்தல் பணியாற்ற வெளியூர்களிலிருந்து வந்திருந்தவர்கள் நேற்று மாலையே தொகுதிகளை விட்டு வெளியேற தொடங்கிவிட்டனர். தொகுதிக்குள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து  ஒலித்துவந்த  மைக் சத்ததுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டது.  தி.மு.க வேட்பாளர் மருதுகேணஷ்சிற்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் மாலைவரை தீவிரமாகப் பிராசாரம் மேற்கொண்டார். 

சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் டி.டி.வி.தினகரனும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த முறை ஆளும்கட்சி வேட்பாளராக நின்றபோது பணத்தை தண்ணீராய் செலவு செய்தார் தினகரன். ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் வரை பணம் விநியோகம் செய்ததாகக்  குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறை டி.டி.வி.தினகரன் தேர்தல் களத்தில் நின்றபோதே ஆர்.கே.நகரின் வாக்காளர்கள் அவரிடம் எதிர்பார்த்த ஒரே விசயம் “எவ்வளவு கொடுக்க போகிறார்” என்பதைத்தான். இதையெல்லாம் ஆளும்கட்சியும் அறிந்துகொண்டுதான் ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன் எங்கெல்லாம் பிரசாரத்திற்கு செல்கிறாராரோ அங்கெல்லாம் போலீஸாரை வைத்து நெருக்கடியைக் கொடுத்தார்கள்.  இந்தக் கெடுபிடியால் ஒருகட்டத்தில் திணறிப்போனது தினகரன் தரப்பு.

தனது ஆதரவாளர்களின் செலவிற்கு கூட பணத்தை வெளியே எடுக்க முடியாத அளவுக்கு தினகரன் தரப்பு திணறியது. தினகரன் பிரசாரங்களுக்குச் செல்லும் இடங்களில் வாக்காளர்களோ பணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த இக்கட்டான நிலையில்தான் தினகரன் தரப்பு புதிய யுக்தியை இந்த இடைத்தேர்தலில் மேற்கொண்டது. வாக்காளர்கள் கையில் டோக்கனை கொடுத்து “தேர்தல் அன்று தினகரனுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்களியுங்கள், தேர்தல் முடிந்த பிறகு இந்த டோக்கனை கொடுத்து பணத்தை எங்களிடம் வாங்கிக்கொள்ளுங்கள். எங்களால் பணத்தை இப்போது கொடுக்க முடியவில்லை” என்று தினகரன் தரப்பில் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். ஆரம்பத்தில் தினகரனுக்கும், தி.மு.க வின் மருது கணேஷுக்கும்  இடையே கடுமையான போட்டியிருந்தது. இதை உணர்ந்த அ.தி.மு.க தரப்பு கரன்சியைக் கொண்டுதான் வாக்காளர்களைக் கவர முடியும் என்ற முடிவுக்கு வந்தனர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கரன்சிகளைக் களத்தில் இறக்க முடிவாகியது. அதன்படி, அ.தி.மு,க வின் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை வைத்து கணக்கெடுத்தனர். கணக்கெடுப்பு முடிந்தவுடன், பூத்துக்கு இத்தனை வாக்குகள் என்று பிரித்து பத்து ஓட்டுக்கு ஓர் ஆள் என்று நியமனம் செய்தார்கள். அவர் மூலம் பணத்தினை விநியோகம் செய்ய முடிவாகியது. ஆனால், தேர்தல் பார்வையாளர்களின்  கெடுபிடி அதிகமாக இருந்ததால், வீதிக்கு ஒருவரை தொகுதிக்கு வெளியே உள்ள பூங்கா போன்ற இடங்களுக்கு வரவழைத்த அ.தி.மு.க நிர்வாகிகள் அங்குவைத்து வீதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற பணத்தை மொத்தமாக ஒருவரிடம் கொடுத்தனர். அவர் மூலம் வீடுதோறும் சத்தமில்லாமல் பணவிநியோகம் நடைபெற்றுள்ளது. 

தினகரன்

கடந்த இரண்டு நாள்களாக அ.தி.மு.க தரப்பினர் பண விநியோகத்தில்தான் தீவிரமாக ஈடுபட்டனர். ஏற்கெனவே தினகரன் தரப்பு வாக்குக்கு  நான்காயிரம் ரூபாய் கொடுத்திருந்ததால், அதை விட அதிகதொகை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளும் தரப்பு ஆறாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்கள். தி.மு.க-தரப்பில்  வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்று முடிவாகிவிட்டது. தினகரன் தரப்போ பணம் கொடுக்க முடியாமல் திணறியது. இதனால், அ.தி.மு.க தரப்பு மட்டுமே பணத்தை வாரி இறைத்ததால் மதுசூதனனின் கிராஃப்  திடீர் என உயர்ந்தது. 

மத்திய அரசின் உளவுத்துறை கடந்த வாரம் தி.மு.க வெற்றி பெறும் என்றும், இரண்டாம் இடத்தில் தினகரன் வருவார் என மத்திய உள்துறைக்கு ரிப்போர்ட் செய்திருந்தார்கள். ஆனால், தேர்தல் பிரசாரம் முடிந்த இன்று மாலைக்குப் பிறகு அவர்கள் அளித்த ரிப்போர்ட்டில் மதுசூதனன் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று சொல்லியுள்ளார்கள். கடைசி நேரத்தில் அ.தி.மு.கவினர் கொடுத்த ஆறாயிரம் ரூபாய் மதுசூதனனின் வெற்றியை உறுதி செய்யும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால், தி.மு.க தரப்பிலோ, அ.தி.மு.கவின் வாக்குகளை தினகரன் பிரிப்பதால், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்கிறார்கள்.ஆர்.கே. நகர் தேர்தலை இறுதிக்கட்டத்தில் ஆறாயிரம் ரூபாய் பணம்தான் நிர்ணயம் செய்யப் போகிறது என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

RK Nagar Election Result


டிரெண்டிங் @ விகடன்