வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (24/12/2017)

கடைசி தொடர்பு:18:31 (24/12/2017)

வென்றார் தினகரன்... ஜெயலலிதாவை மிஞ்சிய வெற்றி!  டெபாசிட் இழந்த தி.மு.க... 6வது இடத்துக்கு தள்ளப்பட்ட பி.ஜே.பி. #RKNagarElectionResult

தினகரன்

டைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி தான் வெல்லும் எனச்சொல்லப்பட்டுவந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அதிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு, ஆளுங்கட்சியைத் தோற்கடித்திருப்பது இன்னுமொரு சாதனை. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வேட்பாளரை விட, 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றிருக்கிறார் சுயேச்சை வேட்பாளர் தினகரன்.

ஜெயலலிதாவை மிஞ்சிய தினகரன்

2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா, 39,545 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இந்த இடைத்தேர்தலில்,  40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார் தினகரன். கடந்த தேர்தலில் பதிவான 1 லட்சத்து 90 ஆயிரத்து 61  வாக்குகளில், 97 ஆயிரத்து 218 வாக்குகளை ஜெயலலிதா பெற்றிருந்தார். தற்போது நடந்த இடைத்தேர்தலில், பதிவான 1,76 ஆயிரத்து 890 வாக்குகளில், 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் தினகரன். சதவிகிதத்தில் 50.32 சதவிகித வாக்குகளை தினகரன் பெற்றார்.  தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 58 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்கு கிடைத்த ஒட்டு மொத்த வாக்குகளை விட 1,136 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் வென்றார். வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று துவங்கி, 19 சுற்றுகளிலும் முன்னிலை வகித்தார் சுயேச்சை வேட்பாளர் தினகரன். 

57 பேர் டெபாசிட் இழந்தனர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட 59 வேட்பாளர்களில் வெற்றி பெற்ற தினகரன், இரண்டாமிடம் பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் தவிர மற்ற 57 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்தத் தேர்தலில் தி.மு.க., கடும் சரிவைச் சந்தித்தது. கடந்த 2016 தேர்தலில் 57,673 வாக்குகளை தி.மு.க. பெற்றிருந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதில் பாதி வாக்குகளைக் கூட தி.மு.க. பெறவில்லை. 24,651 வாக்குகளை மட்டுமே தி.மு.க. பெற்றது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள் என பல கட்சி ஆதரவுடன் களமிறங்கிய போது, பெரும் சரிவை சந்தித்தது தி.மு.க.

நாம் தமிழருக்கு நான்காமிடம்

இந்த தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளி, நான்காம் இடத்தை தக்க வைத்துக்கொண்டது நாம் தமிழர் கட்சி. முதல் சுற்றில் இருந்தே பி.ஜே.பி.யை பின்னுக்குத் தள்ளிய நாம் தமிழர் கட்சி, கடைசி வரை நான்காம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. அக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 3,860 ஆகும். பதிவான மொத்த வாக்குகளில், நாம் தமிழர் பெற்ற வாக்கு சதவிகிதம் 2.18 சதவிகிதம் ஆகும்.

பி.ஜே.பி.யை பின்னுக்குத் தள்ளிய 'நோட்டா'

மத்தியில் ஆளும் கட்சியான பி.ஜே.பி.யை 6வது இடத்துக்குத் தள்ளி, ஐந்தாமிடம் பிடித்தது நோட்டா. யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவருக்கான நோட்டாவில், முதல் சுற்றில் இருந்தே அதிகளவில் வாக்குகள் பதிவானது. இறுதிச்சுற்று அடிப்படையில், 2,373 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. இது பி.ஜே.பி.க்கு பதிவான வாக்குகளை விட 956 வாக்குகள் அதிகமாகும். சதவிகிதத்தில் 1.34 சதவிகிதமாகும்.

ஒரு சதவிகித வாக்குகளை கூட பெறாத பி.ஜே.பி.

மத்தியில் ஆளும் கட்சியான பி.ஜே.பி. இந்த இடைத்தேர்தலில் ஒரு சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியாத நிலையில், 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. துவக்கத்தில் இருந்தே ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்ட பி.ஜே.பி. இறுதியில் 1,417 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. பதிவான மொத்த வாக்குகளில் இது 0.80 சதவிகிதமாகும். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆளும் பி.ஜே.பி. ஒரு சதவிகித வாக்குகளைக்கூட பெற முடியாமல் தோற்றுப்போனது பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

பயனளிக்காத தினகரன் பெயரும், 'தொப்பி' சின்னமும்...

டி.டி.வி. தினகரன் தவிர, தினகரன் பெயரில் 3 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டார்கள். நால்வரும் சுயேச்சை என்பதால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் நான்கு தினகரன் பெயர்களும் வரிசையாக இருந்தன. இதனால் வாக்குகள் சிதறும் என கணிக்கப்பட்டது. ஆனால் அப்படியேதும் நடக்கவில்லை. 3 பேரும் சேர்ந்து 298 வாக்குகளை மட்டுமே பெற்றனர். அதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரத்து செய்யப்பட்ட தேர்தலில், தினகரனுக்கு வழங்கப்பட்டிருந்த 'தொப்பி' சின்னத்துக்கும் இந்த தேர்தலில் கடும் மோதல் இருந்தது. தினகரனுக்கு மறுக்கப்பட்ட இந்த சின்னத்தில் மற்றொரு சுயேச்சை வேட்பாளர் போட்டியிட்டார். தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட ரமேஷ், 445 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதேபோல் மதுசூதனன் பெயரில் போட்டியிட்ட 2 பேர், 196 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க