தினகரனும் ஸ்டாலினும் சதி செய்து வெற்றிபெற்றுள்ளனர்..! ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கூட்டு அறிக்கை

தி.மு.கவும் டி.டி.வி.தினகரனும் கூட்டு சதி செய்து ஆர்.கே.நகர் தேர்தலைச் சந்தித்துள்ளனர். அதனால், டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். மாறாக தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் டெபாஸிட் இழந்துள்ளார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவு குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், 'தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க சந்தித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் அவர்களுக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளைக் கூட பெறமுடியாத நிலை தி.மு.கவுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை, தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். அதேவேளையில், அதற்கு பின்னணியாக தி.மு.கவும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டுச் சதியினை அறிந்து பதவி ஆசைக்காக இப்படியும் சதி செய்வார்களா என்று, தி.மு.கவினரை நோக்கி தமிழக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். எம்.ஜி.ஆரின் பெயருக்கும், ஜெயலலிதாவின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்திவிட வேண்டும் என்று தி.மு.கவும் டி.டி.வி.தினகரனும் திட்டமிட்டு செய்த கூட்டுச் சதியின் வெளிப்பாடாக இந்தத் தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது.

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, திருமங்கலம் பார்முலா என்ற புதிய சொல்லை தீயசக்தி தி.மு.க உருவாக்கியது. அதே வழியில் இப்பொழுது வாக்காளர்களுக்கு நூதனமுறையில் பணம் கொடுத்து தினகரன் பார்முலா என்று தீயசொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கியிருக்கிறார்கள். தீராத பழியை தன்மேல் கொண்டுள்ள தினகரனும், ஊழல் பழியை தனது தலைமேல் தாங்கிக்கொண்டிருக்கும் தி.மு.கவும் ரகசிய ஒப்பந்தம் செய்து பெற்ற இந்த வெற்றியை தமிழக மக்களின் ஒட்டுமொத்த எண்ண ஓட்டம் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தின் வேறு எந்த சட்டமன்றத் தொகுதிக்கும் பொருந்தாது. டி.டி.வி.தினகரனின் இந்த வெற்றி அ.தி.மு.கவுக்கு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது' என்று குறிப்பிட்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!