வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (29/12/2017)

கடைசி தொடர்பு:15:05 (29/12/2017)

'ஆர்.கே.நகர் முன்.. ஆர்.கே.நகர் பின்...' - இது, அ.தி.மு.க.வின் உண்மை நிலவரம்

 ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்குப்பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதாவது, தினகரன் ஆதரவாளர்களாகக் கருதப்படுவர்களின் பதவிகளைப் பறிப்பதோடு கட்சியிலிருந்து அவர்களை நீக்கும் படலம் தொடர்கிறது. இதுவரை மூன்று அறிவிப்புகளை அ.தி.மு.க. கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் பதவிகள் பறிப்பு, கட்சியிலிருந்து நீக்கம் செய்த அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. தினகரனின் ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதால் அதைப் பெற ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் தரப்பில் கடும் முயற்சிகள் நடக்கின்றன. 

குறிப்பாக, மாவட்டச் செயலாளர்கள் பதவிக்காக அ.தி.மு.க.வில் முட்டல், மோதல் நடந்துவருகிறது. அதை எப்படி சமாளிக்கலாம் என்ற ஆலோசனையில் கட்சித் தலைமை நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். 50 சதவிகிதம் பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் 50 சதவிகிதம் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் கொடுக்கலாம் என்று பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். 
கட்சிப்பதவியிலிருந்து ஜெயலலிதா ஒருவரை நீக்கினால் அதற்குப்பதிலாக இன்னொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் தினகரனின் ஆதரவாளர்களின் கட்சிப்பதவிகளை மட்டுமே பறித்துள்ளனர். புதிய நிர்வாகிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. யாரை நியமித்தாலும் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும் என்ற பயத்தால் கட்சித் தலைமை அமைதியாக இருக்கிறது. தினகரனின் ஆதரவாளர்களைக் கூண்டோலி காலி செய்துவிட்டு புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவிக்கும் முடிவில் கட்சித் தலைமை உள்ளது. பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் அணி இணைந்தபோது, பலர் கட்சிப்பதவிகளைக் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. ஆர்.கே.நகரின் தேர்தலின்போதே வெற்றிவேலின் வடசென்னை மாவட்டச் செயலாளர் பதவியை குறிவைத்து சிலர் காயை நகர்த்தினர். தேர்தலைக் காரணம் காட்டி அந்தப்பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது வெற்றிவேலின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டவுடன் அதைப் பெற எம்.பி.ஒருவர் தீவிரமாக முயற்சி செய்துவருகிறார். முன்னாள் மாவட்டச் செயலாளர் ஒருவரும் மாவட்டச் செயலாளர் பெறும் ரேஸில் இருக்கிறார். 
தினகரன் வெற்றிக்குப்பிறகு அ.தி.மு.க.வில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாக உளவுப்பிரிவு, மாநகர நுண்ணறிவுப் பிரிவு மூலம் முதல்வர் அலுவலகத்துக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு தினகரனுக்கு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதாவின் பாணியில் கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, தினகரனின் ஆதரவாளர்களை நீக்கும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

தினகரன்

 
இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக அ.தி.மு.க. நிர்வாகிகளின் உள்ளடி வேலையும் ஒருகாரணம். கட்சிக்குத் துரோகம் செய்ததோடு தினகரனின் வெற்றிக்காகவும் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட கட்சியினரை களையெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக கட்சித் தலைமையிலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு படிவம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாவட்டத்தில் உள்ள தினகரனின் ஆதரவாளர்கள் பெயர், அவர்களின் கட்சிப்பதவி, ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்களா போன்ற விவரங்கள் உள்ளன. அதை உடனடியாக நிரப்பி கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தினகரனின் ஆதரவாளர்களின் பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்பிவருகின்றனர். அதன்அடிப்படையில் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டுவருகின்றனர். 
 தினகரனின் ஆதரவாளர்களை முழுமையாக நீக்கியப்பிறகு அந்தப்பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர்களுக்கு இடையே சிக்கல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில் தினகரன் வெற்றி பெற்றதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் சிலர் வாழ்த்து தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. அதுதொடர்பாக ரகசிய விசாரணை நடந்துவருகிறது. நாங்கள் சந்தேகிக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் உளவுப்பிரிவு, மாநகர நுண்ணறிவுப்பிரிவு போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வாழ்த்து தெரிவித்தது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவர்களும் கட்சியிலிருந்து நீக்கும் முடிவில் கட்சித் தலைமை உள்ளது" என்றார்.  


டிரெண்டிங் @ விகடன்