Published:Updated:

"நோட்டுக்கே நோட்டு கொடுத்த தினகரன்" சிக்கிய 20 ரூபாய் தாள்கள்

நமது நிருபர்
"நோட்டுக்கே நோட்டு கொடுத்த தினகரன்" சிக்கிய 20 ரூபாய் தாள்கள்
"நோட்டுக்கே நோட்டு கொடுத்த தினகரன்" சிக்கிய 20 ரூபாய் தாள்கள்

 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்புவரை தினகரனின் ஆதரவாளர்கள் 20 ரூபாய் நோட்டுக்கள் மூலம் பணம் கொடுத்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 கடந்தமுறை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த புகாரில்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்தமுறை பணம் கொடுத்ததாகச் சிலர் கையும் களவுமாகச் சிக்கினாலும் தேர்தல் நடந்துவிட்டது. பிரசாரம் முடிந்தப்பிறகும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேலையில் தீவிரமாகச் சிலர் ஈடுபட்டனர். அவர்களில் சிலரைப் போலீஸார் பிடித்துள்ளனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 
 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தவர்களில் 15 பேரை நேற்றிரவு பிடித்துள்ளோம். அவர்களிடமிருந்து 20 ரூபாய் நோட்டுக்களும் தினகரனின் பிரசார நோட்டீஸ்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து பணம் கொடுத்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், 20 ரூபாய் நோட்டுகளில் வாக்காளர்களின் பாகம் எண், வரிசை எண், வார்டு ஆகியவற்றைக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுப்போம். அவர்கள் அந்த ரூபாய் நோட்டுக்களை நாங்கள் சொல்லும் நபர்களிடம் கொடுத்தால் அவர்களுக்கு பணம் கொடுக்கப்படும். இவ்வாறு ஓட்டுக்குப் பணம் கொடுக்க ரூபாய் நோட்டுக்களையே தினகரன் ஆதரவாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்" என்றனர். 

 ஆர்.கே.நகரில் இன்று (21.12.2017) வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வாக்குப்பதிவை பார்வையிடார் தினகரன். அப்போது, அவர், தன்னுடைய வெற்றி உறுதியாகிவிட்டது என்று சிரித்த முகத்துடன் தெரிவித்தார். அதோடு, 2 ஜி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ராசா, கனிமொழிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து அ.தி.மு.க-வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். ஆர்.கே.நகர். இடைத்தேர்தலின் முடிவுக்குப் பிறகு தினகரனின் அடுத்தகட்ட நடவடிக்கை அதிரடியாக இருக்கும் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர் அவரின் ஆதரவாளர்கள். இதற்கிடையில் தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ, ஆர்.கே.நகர் வாக்காளர்களிடையே எதிர்பார்த்த அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை என்ற தகவல் தினகரனின் ஆதரவாளர்களுக்கு கடும் வருத்தமாம்.