Published:Updated:

ஆம்னி பஸ்ஸில் அனாமத்தாகக் கிடந்த ரூ.10,000... யாருக்குச் சொந்தம்?

பணம்
News
பணம்

அவர் தொலைத்த பணம் பலருக்கு சிறியதாக இருக்கலாம். ஆனால், அவருக்கு அது வாழ்க்கை. எது கிடைத்தாலும் தனக்கென்று சொந்தம் கொண்டாடுபவர்கள்தாம் அதிகம். ஆனால், உரியவர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காக, இத்தனை முயற்சி செய்து, கடைசியில் கண்டுபிடித்தும் விட்டீர்கள்...

ஆம்னி பஸ்ஸில் அனாமத்தாகக் கிடந்த ரூ.10,000... யாருக்குச் சொந்தம்?

அவர் தொலைத்த பணம் பலருக்கு சிறியதாக இருக்கலாம். ஆனால், அவருக்கு அது வாழ்க்கை. எது கிடைத்தாலும் தனக்கென்று சொந்தம் கொண்டாடுபவர்கள்தாம் அதிகம். ஆனால், உரியவர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காக, இத்தனை முயற்சி செய்து, கடைசியில் கண்டுபிடித்தும் விட்டீர்கள்...

Published:Updated:
பணம்
News
பணம்

அந்த ஆம்னி பேருந்தில் கடந்த 2-ம் தேதியன்று கோயம்புத்தூர் செல்வதற்காக புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தில் ஏறினேன். அறந்தாங்கியில் உணவு பார்சல் வாங்கிக்கொண்டு மீண்டும் பேருந்தில் ஏறி, டிரைவர் இருக்கையைக் கடந்து சென்றபோது, காலில் ஏதோ தட்டுப்பட்டது. சற்றே வீங்கியிருந்த, சிறிய பழுப்பு நிற உறை. கையில் எடுத்துக்கொண்டு என் இருக்கையில் அமர்ந்தேன். பேருந்து உறுமிக்கொண்டு புறப்பட்ட நிலையில், பொறுமையாகப் பிரித்துப் பார்த்தபோது... உள்ளே ரூபாய் நோட்டுகள். மொத்தம் 10,950 ரூபாய். கூடவே, ஒரு தாளில் சில குறிப்புகள்.

ஆம்னி பஸ்ஸில் கிடந்த பண உறை
ஆம்னி பஸ்ஸில் கிடந்த பண உறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூகுள் உதவியுடன் அறந்தாங்கி மற்றும் கோயம்புத்தூரில் இருக்கும் அந்தப் பேருந்து நிறுவன அலுவலகங்களின் அலைபேசி எண்களைக் கண்டு பிடித்து தகவல் சொன்னேன். ``பேருந்தில் சின்னதாக ஒரு பார்சல் கீழே கிடந்தது. அதை நான் எடுத்து வைத்திருக்கிறேன்’’ என்றேன்.

உடனே, ``உள்ளே என்ன இருக்கிறது’’ என்று எதிர்முனைகளிலிருந்து கேள்வி.

``பணம்’’ என்று சொன்னால், உரியவர்களிடம் சென்று சேருமா என்கிற சந்தேகம் எட்டிப் பார்க்க, ``மருந்து இருக்கிறது. யாரும் தவறவிட்டதாகத் தேடி வந்தால், எனக்குத் தகவல் தெரிவியுங்கள். அவர்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்’’ என்றேன்.

``எதுவாக இருந்தாலும் கோயம்புத்தூர் பேருந்து அலுவலகத்தில் ஒப்படையுங்கள்’’ என்று பதில் கிடைத்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரி... சட்டப்படி என்ன செய்ய வேண்டும். அதாவது, இப்படி ஏதாவது பொருள்கள் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அந்த அவசரத்தில் சட்டம் பற்றி யாரிடம் கேட்பது?

உடனே, நமக்குத் தெரிந்தது விகடன்தான் அங்கே ஒப்படைத்து விடுவோம். சரியான நபரிடம் அவர்களே சேர்க்கட்டும் என்று முடிவு செய்தேன். வேலை விஷயமாக சென்னைக்குச் சென்ற நான், விகடன் அலுவலகம் சென்று, ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த செய்தியாளரிடம் ஒப்படைத்துவிட்டுப் பேசிக்கொண்டிருந்தேன்.

பணம்
பணம்

சரியாக அதே நேரம்... அறந்தாங்கி பேருந்து ஏஜென்ட் ரமேஷிடமிருந்து மீண்டும் அலைபேசி அழைப்பு. அந்த பார்சலில் இருந்த தொகை உள்ளிட்ட விவரங்களைத் தெளிவாகச் சொன்னார்.

``எல்லாம் சரி. அது உங்கள் பணம்தான். ஆனால், ஏன் ஏற்கெனவே நான் பேசியபோது இதையெல்லாம் சொல்லவில்லை?’’ என்று கேட்டேன்.

``வழக்கமா வசூல் தொகையை கவர்ல போட்டு, கணக்கெழுதி டிரைவர்கிட்ட கொடுத்து அனுப்புவேன். அன்னிக்கு அப்படித்தான் கவர்ல போட்டு டிரைவர் வினோத்குமார்கிட்ட கொடுத்தேன். அவர் கீழே போட்டிருக்கார்போல. உங்ககிட்ட இருந்து போன் வந்தப்ப எனக்கு எதுவும் தோணல. மருந்துனு வேற சொன்னதால, கோயம்புத்தூர் ஆபீஸ்ல கொடுத்தா, தொலைச்சவங்க வாங்கிப்பாங்கனு இருந்துட்டேன். ஆனா, கோயம்புத்தூர் ஆபீஸுக்குப் பணம் போய்ச்சேரலனு தெரிஞ்ச பிறகு, பக்குனு இருந்துச்சு. அப்பதான் நீங்க போன் செய்த விஷயத்தையும், நான் டிரைவர்கிட்ட கவர்ல போட்டு பணம் கொடுத்த விஷயத்தையும் நினைச்சுப் பார்த்தேன். நீங்க மறுபடி, மறுபடி மருந்துனு சொன்னதால, கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்துச்சு. ஆனாலும், கேட்டுடலாம்னுதான் இப்ப போன் செய்தேன்.

உண்மையிலயே உயிர் போய் உயிர் வந்திருக்கு. நான் உழைச்ச காசு... ஒருவேளை, அதே காசு திரும்பி வராட்டியும் ஏதாவது ஒருவகையில என் காசு என் கைக்குத் திரும்ப வந்துடும்னு நம்பினேன். எனக்கு அது மிகப் பெரிய தொகை. உங்க கையில கிடைச்சதால, நான் எதிர்பார்த்தபடியே உழைச்சவன் கைக்கே அந்தக் காசு திரும்பவும் கிடைச்சிருக்கு. ரொம்ப நன்றி சார்’’ என்று உணர்ச்சி வசப்பட்டவர்,

``என்கிட்ட இருந்து அந்தக் கவரை வாங்கவே இல்லைனு டிரைவர் மறுத்துட்டார். ஆனாலும், அவர்தான் பணத்தை தொலைச்சிருக்கார்ங்கிறத உறுதிப்படுத்திக்கிட்ட கம்பெனிக்காரங்க, அவரை வேலையில இருந்து நீக்கிட்டாங்க'' என்று வருத்தப்பட்டு சொன்னார்.

ஏ.ஏ.சத்தார்
ஏ.ஏ.சத்தார்

இதையெல்லாம் கேட்டுக்கொண்ட விகடன் செய்தியாளர்... ``சத்தார் சார், உங்கள் முயற்சியால் சரியான நபரைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். உங்கள் கையாலேயே அவரிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர் தொலைத்த தொகை பலருக்கு சிறியதாக இருக்கலாம். ஆனால், அவருக்கு அது வாழ்க்கை. எது கிடைத்தாலும் தனக்கென்று சொந்தம் கொண்டாடுபவர்கள்தான் அதிகம். ஆனால், உரியவர்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதற்காக, இத்தனை முயற்சி செய்து, கடைசியில் கண்டுபிடித்தும் விட்டீர்கள். சமூகத்தின் மீதான உங்கள் அக்கறைக்கு சமூக வலைதளம் உண்மையிலேயே உதவியிருக்கிறது'' என்றார்.

அடுத்த நிமிடமே, போன்பே மூலமாக அந்தத் தொகையை... ரமேஷுக்கு மாற்றிவிட்டேன். கூடவே, ``பணம் தொலைந்துபோய் திரும்பக் கிடைத்திருக்கிறது. எனவே, அந்த டிரைவருக்கு மீண்டும் வேலையை வாங்கிக் கொடுங்கள்’’ என்கிற வேண்டுகோளையும் வைத்தேன்.

``சரி, இதுபோல கீழே கிடந்து எடுக்கப்படும் பொருள்களை யாரிடம் ஒப்படைக்க வேண்டும். மீடியாக்கள் மூலமாகவே, நாமே தேடிக்கண்டுபிடித்து ஒப்படைக்கலாமா? காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்றால், உரியவருக்குப் போய்ச் சேருமா? அதை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?'' இதுபோன்ற கேள்விகளை அந்தச் செய்தியாளரிடம் எழுப்பினேன்.

அனைத்துக்கும் வழக்கறிஞரிடம் கேட்டு பதில் வாங்கிவிடுவோம் இந்தக் கட்டுரையிலேயே சேர்த்துவிடுவோம் என்று சொல்லி, எனக்கு விடை கொடுத்தார் செய்தியாளர்.

-ஏ.ஏ.சத்தார்

நம்மிடம் ஏ.ஏ.சத்தார் எழுப்பிய கேள்விகளை, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் முன் வைத்தபோது அவர் தந்த பதில் இதோ...

``கீழே அனாமத்தாகக் கிடக்கும் பணத்தையோ, பொருளையோ நீங்கள் எடுக்கிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் உரிமையாளரல்ல. அதன் பொறுப்பாளர் மட்டுமே. தொலைத்தவரிடம் அதை ஒப்படைக்க பத்திரிகை, சமூக ஊடகங்கள் வழியாக அறிவிப்பு கொடுத்து அதன் உடமையாளரை உங்களால் இயன்ற வழிகளில் தேடி நீங்கள் அதை ஒப்படைக்க முயற்சி செய்வதில் தவறில்லை. ஆனால், அது குறுகிய காலத்துக்குள்ளாகத்தான் இருக்க வேண்டும். நீண்ட காலம் வைத்திருந்தால் நீங்கள் அதைக் கையாடல் செய்துவிட்டதாக பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன்
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன்

கண்டெடுத்த பொருள்/பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதுதான் சட்டப்படி முறையானது. `இத்தனாம் தேதி இத்தனை மணிக்கு இந்த இடத்தில் நான் இந்தப் பணம்/ பொருளைக் கண்டெடுத்தேன். இதை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று மனு போல எழுதிக் கொடுத்தீர்கள் என்றால், உங்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படும். பொருளைத் தொலைத்தவர் வேறு ஏதேனும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தால், அவர் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் பணம்/ பொருள் மற்றும் தொலைத்த தேதி, இடம் ஆகியவை சரியாக இருக்கும் நிலையில் அவரிடம் நீங்கள் அளித்த பொருள்/ பணம் ஒப்படைக்கப்படும்.

சிறிய தொகையாக இருந்தால் காவல் துறையினரே உரியவரிடம் ஒப்படைத்துவிடுவர். பெரிய தொகையாக இருந்தால் அதை வருமான வரித்துறைக்கு அனுப்பிவிடுவார்கள். பணத்தின் உரிமையாளர் வருமான வரி கட்டிய விவரங்களைக் காண்பித்த பிறகே அந்தப் பணத்தைப் பெற முடியும். நீங்கள் கொடுத்த பணம்/பொருள் அதற்கு உரிமையானவரிடம்தான் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்’’ என்றார்.

- கே.எஸ்.திலீபன்