அமைச்சர் கந்தசாமியின் பி.ஏ. படுகொலை! புதுச்சேரியில் தொடரும் பயங்கரம் | Puducherry Minister’s Personal assistant brutally Murdered

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (03/04/2017)

கடைசி தொடர்பு:17:20 (03/04/2017)

அமைச்சர் கந்தசாமியின் பி.ஏ. படுகொலை! புதுச்சேரியில் தொடரும் பயங்கரம்

புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். முன்னாள் கவுன்சிலரான இவர், அமைச்சர் கந்தசாமியின் நெருங்கிய உறவினர் என்பதால் அவருக்கு உதவியாளராகவும் இருந்தார். 2016-ல் புதுச்சேரியில் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கந்தசாமிக்கு ஆதரவாக தேர்தலில் பணியாற்றியபோது எதிர்தரப்புக்கும், இவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை கிருமாம்பாக்கத்தில் இருக்கும் சட்டமன்றத்தொகுதி அலுவலகத்துக்கு வந்த வீரப்பன், கட்சி சம்பந்தப்பட்ட பணிகளைச் செய்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தார்.

ரெட்டிச்சாவடியை அடுத்த காட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்த மர்மக் கும்பல் வீரப்பனின் வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த வீரப்பனை, ஆறு பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் வீரப்பன் சரிந்ததும் அவர் இறந்துவிட்டார் என்று நினைத்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரப்பனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அமைச்சர் கந்தசாமி மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். இதற்குள் பதற்றத்தைத் தனிக்க போலீஸ் அதிகளவில் குவிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வீரப்பனை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே வீரப்பன் உயிரிழந்தார். இந்த தகவல் பரவியதும் கிருமாம்பாக்கம் மற்றும் பிள்ளையார்குப்பம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி கூறுகையில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்தப் படுகொலை நடந்துள்ளது. எனது அரசியல் எதிரிகள் திட்டமிட்டு இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்றனர்" என்றார்.
 
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ரெட்டிச்சாவடி போலீஸார், வீரப்பன் கொலைக்கு அரசியல் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.முருகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க