வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (22/04/2017)

கடைசி தொடர்பு:18:49 (22/04/2017)

"வேற வழி தெரியலை... அதான்...!" - சிறுநீர் குடிக்கும் போராட்டம் பற்றி அய்யாக்கண்ணு #VikatanExclusive

சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் அய்யாக்கண்ணு

டெல்லி, ஜந்தர்மந்தர் பகுதி ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழக விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 100-க்கும் மேற்பட்ட கடந்த 40 நாட்களாக பல்வேறு விவசாய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகிறார்கள். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான விவசாயிகள், தமிழக விவசாயிகள் நடத்தும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தந்தனர். "இந்தக் காட்சி எங்கள் கண்ணில் படவே இல்லை. தமிழக விவசாயிகளின் குரல்கள் எங்கள் காதுகளில் விழவில்லை" என்பதுபோல மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கும் மக்களின் ஓட்டுக்கள் மட்டும் வேண்டும், ஆனால் விவசாயிகள் கஷ்டத்தை கேட்க எங்களுக்கு நேரமில்லை எனக் காலில் 'இறக்கை' கட்டிக்கொண்டு பறக்கும் பிரதமரும் இதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார். இந்த ஆண்டு மிகப்பெரும் வறட்சியைத் தமிழகம் சந்தித்துள்ளது. அதற்கு விவசாயிகள் அரசிடம் தங்கள் கோரிக்கைகளை வைப்பது நியாயம்தானே... நீங்கள்(மத்திய அரசு) கேட்கலாம், "உங்கள் பிரச்னைகளை தமிழ்நாட்டில் இருந்தோ அல்லது தமிழகத்திலோ கேட்கக்கூடாதா?..." எனக் கேட்கலாம்.

போராட்டத்தில் தமிழக விவசாயிகள்

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு தமிழகத்தில் முறையாக ஆட்சி நடக்கவில்லை என்பது நாட்டின் பிரதமராகிய உங்களுக்குத் தெரியாதா...மத்தியிலிருந்து 'தமிழ்நாடு' உட்பட மொத்த மாநிலத்தையும் ஆண்டு கொண்டிருக்கும் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். தமிழ்நாட்டில் சட்டசபை என்பது போர்க்களமாகவும், அரசியல்வாதிகள் என்பவர்கள் குரங்கு, மரத்துக்கு மரம் தாவி விளையாடுவதைப் போல, அரசியல் காட்சிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இத்தானைக்கும் நடுவில் விவசாயிகள் எப்படி தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுபோக முடியும். மீறி அணையில் தண்ணீர் இல்லை என்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைக்கிறார்கள். அதற்கு அரசியல்வாதிகள் பல லட்சம் செலவு செய்து 'தெர்மாகோல்' அட்டையைத் தண்ணீர் மீது பரப்பி மூடிவிடலாம் என்ற செயலில் இறங்குகின்றனர். இவர்களை நம்பி எப்படி விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன்வைக்க முடியும். இறுதியாக வேறு வழியின்றித்தான் மத்திய அரசாகிய உங்களிடம் முன்வைக்கின்றனர், தமிழக விவசாயிகள். ஒவ்வொரு மேடையிலும் விவசாயத்தைப் பற்றி பேசும் பிரதமரும் விவசாயிகளைச் சந்திக்க மறுப்பதுதான் விவசாயிகளுக்கு வேதனை தருகிறது.

போலீஸாருடன் பேச்சுவார்த்தை

எலிக்கறி, பாம்புகறி, நிர்வாணப் போராட்டம் என விவசாயி தன்னுடைய மானத்தையும் இழந்து கடைசியாக சிறுநீர் குடிக்கும் போராட்டம் என அறிவித்துள்ளனர். இதுவரை எந்த ஒரு நாட்டிலும் விவசாயிகள் இந்த அளவுக்கு நூதன போராட்டத்தால் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்ததில்லை. சிறுநீர் குடிக்கும் போராட்டத்தை அறிவித்த அய்யாக்கண்ணுவிடம் பேசினோம். "எங்கள் கோரிக்கையை ஏற்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. நாங்களும் தன்மானத்தை விட்டு போராட்டம் நடத்திப் பார்த்து விட்டோம். ஆனால், எங்களுக்குப் பதில் சொல்லவோ, கோரிக்கைகளை ஏற்கவோ யாரும் வரவில்லை. வாய்மொழியாகக் கொடுத்தால் மட்டும் போதாது, எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க வேண்டும். இது இத்துடன் நின்றுவிடாது... இறுதியாக எங்களை மத்திய, மாநில அரசு சந்திக்கும் உயிர் இருக்கும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

சிறுநீர் குடிக்கும் விவசாயி

நன்றி - ANI

தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி டெல்லியில் போராடும் அய்யாக்கண்ணு அவர்களே உங்களிடம் மன்றாடிக் கேட்கிறோம். இந்தியாவில் பல்வேறு தரப்பு விவசாயிகளும், பொதுமக்களும் உங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மனித மாண்புகளை இழக்கச்செய்யும் வகையில் போராட்டங்களை தொடர்வது நிலையான வெற்றியைத் தருமா?... தயவு செய்து சிறுநீர், மலம் எனப் போராட்டம் நடத்துவதைக் கைவிட வேண்டும். அகிம்சையான வழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள். சிறுநீர் குடிக்கும் செயல் நீங்கள் மேற்கொண்டிருக்கும் போராட்டத்தின் உண்மைத்தன்மையை மாற்றி விடும். எதற்கும் செவிசாய்க்காத மத்திய அரசு நீங்கள் நடத்தும் இந்த போராட்டத்துக்கும் செவி சாய்க்குமா என்றால் நிச்சயமாகச் செவிசாய்க்காது. மறுபடியும் கேட்கிறோம், போராட்டம் அறவழியில் தொடரட்டும், மத்திய அரசு இறங்கி வரட்டும். தலைநிமிர்ந்து வாழவேண்டிய விவசாயி தன்னுடைய மானத்தை இழந்து போராடிக் கொண்டிருக்கிறான். அங்கே காற்றில் பறந்து கொண்டிருப்பது விவசாயிகளின் மானம் அல்ல, நம் நாட்டின் மானம்தான் என்பதை அரசாங்கம் உணருமா?..

-துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்