Published:Updated:

ஷேர்லக்: பொறுமை காக்கவேண்டிய நேரம்!

ஷேர்லக்: பொறுமை காக்கவேண்டிய நேரம்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: பொறுமை காக்கவேண்டிய நேரம்!

ஓவியம்: அரஸ்

ஷேர்லக்: பொறுமை காக்கவேண்டிய நேரம்!

ஓவியம்: அரஸ்

Published:Updated:
ஷேர்லக்: பொறுமை காக்கவேண்டிய நேரம்!
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்: பொறுமை காக்கவேண்டிய நேரம்!

வாரம் முழுக்க பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டதால், அடுத்த வாரம் எப்படி இருக்குமோ என்பதை அறிய ஷேர்லக்கின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியபடி சரியாக மாலை ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தார் ஷேர்லக். வெங்காய பஜ்ஜியும், ஏலக்காய் டீயும் அவருக்கு முதலில் தந்தோம். அதை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே நம் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் சொன்னார் அவர்.

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி சாதகமான கருத்து வெளியிட்டுள்ளதே?

“நடப்பு 2018-19-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள ஆசிய வளர்ச்சி வங்கி,  2019-20-ல் இது 7.6 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது. இந்தக் கணிப்பு, கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஃபிட்ச் உள்ளிட்ட சில மதிப்பீட்டு நிறுவனங்களின் கணிப்பிலிருந்து சிறிது மாறுபடுகிறது. நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.8 சதவிகிதமாக இருக்கும் என ஃபிட்ச் கூறியிருந்தது.  ஆனால், ரிசர்வ் வங்கி 7.4 சதவிகிதமாக மட்டுமே  மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.”

ஷேர்லக்: பொறுமை காக்கவேண்டிய நேரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.எல்&எஃப்.எஸ்  செலுத்தவேண்டிய கடன் தொகை மேலும் அதிகரித்துள்ளதே?

‘‘ஐ.எல்&எஃப்.எஸ்-ன் மொத்தக் கடன் ரூ.35,000 கோடியாக உள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் உயர்மட்ட பங்குதாரர்களின் கூட்டம் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்றது.  இந்த நிலையில், வங்கிக் கடன், குறுகிய கால டெபாசிட் உள்பட மேலும் ரூ.395 கோடியைச் செலுத்தத் தவறிவிட்டதாக பங்குச் சந்தைக்கு  ஐ.எல்&எஃப்.எஸ் தெரிவித்துள்ளது. ஐ.எல்&எஃப்.எஸ் பிரச்னை இன்னும் பெரிய அளவில் வெடித்து, பல நிறுவனங்களின் பெயரைக் கெடுத்துவிட்டுத்தான் ஓயும்போல.’’

பணப்புழக்கத்துக்கான தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளதே?

‘‘பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரூ.2 லட்சம் கோடியை விடுவித்துள்ள ரிசர்வ் வங்கி, வங்கிகள் கூடுதல் பணத்தை எடுக்க அனுமதித்து உள்ளது. இதன்மூலம் வங்கிகள், அவற்றின் மொத்த டெபாசிட் பணத்திலிருந்து 13 சதவிகி தத்துக்குப் பதிலாக 15 சதவிகிதமாக எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் நிதிச் சந்தையில் பண விநியோகம் அதிகரித்து, பணப்புழக்கத் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.’’

அவாஸ் ஃபைனான்ஸியர்ஸ் ஐ.பி.ஓ-வுக்கான வரவேற்பு எப்படி?

‘‘அவாஸ் ஃபைனான்ஸியர்ஸ் ஐ.பி.ஓ மூலம் ரூ.1,734 கோடி திரட்ட முடிவு செய்தது. பங்கு விலைப்பட்டை ரூ.818-821-ஆக நிர்ணயிக்கப் பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 25-ம் தேதியன்று ஐ.பி.ஓ தொடங்கியது. இரண்டாம் நாள் வரை 43,17,174 பங்குகளுக்கு அதாவது, 29% அளவுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இறுதி நாளன்று, 0.97 மடங்கு வரை கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தன.’’

வங்கிப் பங்குகள் சரிவடைவது இன்னும் நிற்கவில்லையே?

‘‘இந்திய வங்கிகளின் பங்குகள் சரிவடைவது இன்னும் சில நாள்களுக்குத் தொடரும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். வியாழக்கிழமையன்று  பேங்க்கெக்ஸ் குறியீடு 1.6% சரிந்தது. செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து கணக்கிட்டால், ஏறக்குறைய 11% சரிந்துள்ளது. இந்த மாதம் யெஸ் பேங்க், சென்ட்ரல் பேங்க், இந்தியன் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகளின் பங்குகளின் மதிப்பு 30 சதவிகிதத்திலிருந்து 40% வரை சரிந்துள்ளன. அதேபோல, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளின் பங்கு மதிப்பு 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.’’ 

விலை இறக்கம்கண்ட பங்குகள்மீது புரமோட்டர்கள் தொடந்து நம்பிக்கை வைத்துள்ளனரே?

‘‘பங்குகளின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவைத் தொடர்ந்து, செப்டம்பர் 8-ம் தேதி யிலிருந்து 50 இந்திய கம்பெனிகளின் புரமோட்டர் களும், இயக்குநர்களும், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் அந்த நிறுவனங்களின் பங்குகளின் - முக்கியமாக, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் - கையிருப்பை அதிகரித்து வருகின்றனர்.

குறிப்பாக, பஜாஜ் ஹோல்டிங்ஸ், சோழ மண்டலம் இன்வெஸ்ட்மென்ட்ஸ், மணப்புரம் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டீஸ், யு.பி.எல்,  இந்தியா புல்ஸ்  ஹவுஸிங் ஃபைனான்ஸ், எவரெடி இண்டஸ்ட்ரீஸ், அப்போலோ டயர்ஸ் மற்றும் எம்.ஆர்.எஃப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சரிவடைந்த பங்குகளை வாங்குவதில், கடந்த இரண்டு வாரங்களாக புரமோட்டர்களும், அந்த நிறுவன உயரதிகாரிகளும் ஆர்வம் காட்டி வந்ததைப் பார்க்க முடிந்தது. 

குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை அவற்றின் புரமோட்டர்களும், இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளே வாங்குவது அந்தப் பங்குகளின் விலை குறைவாக மதிப்பிடப்பட்டதாகவே கருதப்படும்.’’

ஷேர்லக்: பொறுமை காக்கவேண்டிய நேரம்!

யெஸ் பேங்க் பங்கின் விலை குறைந்துகொண்டே வருகிறதே?

‘‘இந்த வங்கியின் தலைவராக ராணா கபூர் இன்னும்  ஓராண்டு காலத்துக்காகவாவது இருக்க இன்னும் அனுமதிக்க வேண்டும் என ஆர்.பி.ஐ-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கும்  நிலையில், இந்த வங்கி வாராக் கடன் தொடர்பான தகவல்களை மறைத்ததாகவும், பங்கு விலை ஏற்ற, இறக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்திருக்கிறது. இந்த விஷயத்தில் செபியின் நடைமுறைகள் அனைத்தையும் சரியாகப் பின்பற்றுவதாகச் சொன்னபிறகு இந்தப் பங்கின் விலை குறைந்துகொண்டே இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் 50% குறைந்துள்ளது.’’

டைட்டன் நிறுவனப் பங்கு விலை உயர்ந்துள்ளதே?

‘‘சர்வதேச நிதி நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி, டைட்டன் பங்கின் இலக்கு விலையை ரூ.1,120-லிருந்து ரூ.1,250-ஆக உயர்த்தியதைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ம் தேதியன்று டைட்டன் நிறுவனப் பங்கின் விலை 2.9% உயர்ந்து ரூ.820 ரூபாயாகக் காணப்பட்டது. ரொக்கப் பணப் பரிவர்த்தனைகள் மூலம் அல்லாமல் தங்க நகைகளை வாங்குவதை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான கொள்கைகள் வரலாம் என எதிர்பார்ப்பதால், அது டைட்டனின் தங்க நகை விற்பனை பிரிவுக்கு பயனளிப்பதாக இருக்கும். மேலும், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களால் மூன்றாவது காலாண்டில் லாபம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலும் இதன் இலக்கு விலையை உயர்த்தி இருப்பதாக மார்கன் ஸ்டேன்லி தெரிவித்துள்ளது.’’

மிண்டா இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை உயர்ந்துள்ளதே?

‘‘வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான மிண்டா இண்டஸ்ட்ரீஸ், மகாராஷ்ட்ராவில் இரு சக்கர வாகன அலாய் வீல் தயாரிப்புக்கான இரண்டு உற்பத்தி ஆலைகளை நிறுவ உள்ளது. சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும் இந்த ஆலையில், வருகிற நவம்பர் மாதம் முதல் உற்பத்தி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ம் தேதியன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 8.40% உயர்ந்து, 372 ரூபாயாகக் காணப்பட்டது. இது, கடந்த ஜூலை 11-ம் தேதிக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய உயர்வாகும்.’’

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதே?

‘‘அமெரிக்க ஃபெடரல் வங்கி, செப்டம்பர் 27-ம் தேதியன்று வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியதுடன்,  வரும் டிசம்பர் மாதமும் இன்னொரு உயர்வு இருக்கலாம் எனச் சூசகமாக தெரிவித்துள்ளது. 2019-ல் மூன்று உயர்வும், 2020-ம் ஆண்டு இன்னொரு வட்டி விகித உயர்வும் இருக்கலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

இதுவரை இருந்துவந்த இணக்க மான நிதிக்கொள்கை முடிவுக்கு வந்துவிட்டதை உணர்த்தும் விதமாக, ஒரே நாள் இரவில் ஃபெடரல் வங்கியின் கொள்கை வகுப்பாளர்கள், வட்டி விகிதத்தை 2 சதவிகிதத்தி லிருந்து 2.25 சதவிகிதமாக உயர்த்தியி ருக்கிறார்கள். 2020-ல் அமெரிக்காவில் வட்டி 3.4 சதவிகிதமாக இருக்கக் கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டிருக் கிறார்கள்.’’

ஓராண்டு ஃபார்வேர்ட் பி/இ விகிதம் 18-ஐ  தாண்டும்போது முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார்களே?

“உண்மைதான். முதலீட்டாளர்களுக்குப் பங்குகளின் சரியான மதிப்பை அறிய ஒரு வலுவான உத்திதான் இந்த பி/இ விகிதம். சந்தை எப்போதெல்லாம் உச்சத்தை எட்டியது என்பதைக் கண்டறிவதற்கான ஒரு முறைதான் பிஇ விகிதம். எப்போதெல்லாம் எம்.எஸ்.சி.ஐ இந்தியா இண்டெக்ஸின் ஓராண்டு ஃபார்வேர்டு பி/இ விகிதம் 18-ஐ தாண்டுகிறதோ, அப்போது சந்தை பெரிதாகச் சரியும் என்பதால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உதாரணமாக, ஓராண்டு ஃபார்வேர்டு பி/இ 18-ஐ தாண்டியபின், எம்.எஸ்.சி.ஐ இந்தியா இண்டெக்ஸ் 9% சரிவடைந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், நிஃப்டி மற்றும்   எம்.எஸ்.சி.ஐ இண்டெக்ஸ்களின்  12 மாத ஃபார் வேர்டு பி/இ  20-ல் வர்த்தகமாகிக் கொண்டிருந்தன. இது  மூன்றாண்டு சராசரியைவிட 15% அதிகமாகும். கடந்த ஏழு வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 4% இறங்கியுள்ளன.

பி/இ விகிதம் உயர்கிறது என்றால் இண்டெக்ஸ் அல்லது பங்குகளின் மதிப்பீடு அதிகரிக்கிறது என்று அர்த்தம். இந்த நிலையில், இன்னும் 6 - 9 மாதங்களுக்குத் தேர்தல் குறித்த பரபரப்புகள் இருக்கும் என்பதால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், அரசியல் காரணங்களால் விலையை உயர்த்த முடியாத நிலை ஏற்படும். இதனால், ஹெச்.பி.சி.எல், பி.பி.சி.எல் மற்றும் ஐ.ஓ.சி ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்து, அவற்றின் பி/இ விகிதம் மேலும் குறையும். இந்த ஆண்டு தொடக்கத் திலிருந்து இதுவரை இந்த நிறுவனங்களின் பங்குகள் விலை 22 - 41% வரை சரிந்துள்ளது. அதேசமயம், இதே காலகட்டத்தில் நிஃப்டி இண்டெக்ஸ் 4% அதிகரித்துள்ளது.’’

இறக்குமதி வரி உயர்வால் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா?

‘‘நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்க, விமான எரிபொருள், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர், ஸ்பீக்கர்கள், காலணி, சூட்கேஸ், டிராவல் பேக் உள்ளிட்ட நுகர்வோர் பொருள்கள் உள்பட 19 பொருள்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதனால், பங்குச் சந்தையில் பட்டியலியப்பட்ட நிறுவனங்களுக்கு இலேசான பாதிப்பு இருக்குமே தவிர, பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்றே அனலிஸ்ட்கள் சொல்கின்றனர். குறிப்பாக, ஏர் கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள், ஃபிரிட்ஜ்கள் போன்றவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன அல்லது அசெம்பிள் செய்யப்படுகின்றன என்பதால், இந்த வரி உயர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே அனலிஸ்ட்களின் கருத்தாக உள்ளது.’’

ஜெட் ஏர்வேஸ்  மீண்டும் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்கத் திணறுகிறதே?

‘‘ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணி புரியும் விமானிகள், நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் முழுமையாகத் தரப்படவில்லை. முதல் தவணையாக ஆகஸ்ட் மாத சம்பளம் கொடுக்கப்பட வேண்டிய நேரத்தில் 50 சதவிகித சம்பளத்தை மட்டுமே செப்டம்பர் 11-ம் தேதியன்று கொடுத்தது ஜெட் ஏர்வேஸ். மீதத் தொகையை செப்டம்பர் 26-ம் தேதியன்று கொடுப்பதாகச் சொல்லியிருந்த ஜெட் ஏர்வேஸ், அன்றைய தினம் 25 சதவிகிதத்தை மட்டுமே கொடுத்தது.

இது பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியபோதிலும், மீதத் தொகையை அக்டோபர் 9-ம் தேதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு ஊழியர்கள் சமாதான மடைந்து, தொடர்ந்து நிறுவனத்துக்கு ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்ததாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில் ரூ.1,323 கோடி இழப்பு ஏற்பட்டதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.”

இந்தியப் பங்குச் சந்தை தொடர் இறக்கத்தில் இருக்கிறதே?

‘‘அண்மைக் காலத்தில் சாண் ஏறினால், முழம் இறங்குவதாக இந்தியப் பங்குச் சந்தை இருக்கிறது.  ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை ஏற்றம், வர்த்தகப் போர்  போன்ற மேக்ரோ பிரச்னை களால் சந்தை சரிவை சந்தித்து வந்த நிலையில் இப்போது வங்கிகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களால் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

ஆர்.பி.ஐ மற்றும் செபி இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும், புதுப்புது பிரச்னைகள் வரவே, சந்தை அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த பங்குகள் அதிக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

செப்டம்பர் மாதத்தில் 27-ம் தேதி வரைக்கும் முதலீட்டாளர்களின் நிதி சுமார் ரூ.12.5 லட்சம் கோடி காணாமல் போயிருக்கிறது. பி.எஸ்.இ-யில் பட்டியலிடப் பட்டிருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு ஆகஸ்ட் 31-ம் தேதி ரூ.159.35 லட்சம் கோடியாக இருந்தது. இது செப்டம்பர் 27-ம் தேதி ரூ.146.86 லட்சமாகக் குறைந்துள்ளது. எனவே, சிறு முதலீட்டாளர்களுக்கு இது பொறுமை காக்கவேண்டிய நேரம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

அதேசமயம், நல்ல நிறுவனப் பங்குகள் மலிவான விலைக்குக் கிடைத்தால், முதலீட்டை 4-5 ஐந்தாகப்ச் பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது லாபமாக இருக்கும்.”

இந்த இறக்கத்திலும் சில லார்ஜ்கேப் பங்குகளின் விலை அதிகரித்து வருகின்றனவே?
 
‘‘வேதாந்தா, விப்ரோ, டி.சி.எஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் விலை ஏற்றம் கண்டு வருகின்றன. இவற்றில் சில நிறுவனங்களுக்கு மேலே குறிப்பிட்ட மேக்ரோ பிரச்னைகள் சாதகமாக இருக்கின்றன. சில நிறுவனங்களுக்கு அவற்றின் வருமான வளர்ச்சி சாதகமாக இருக்கிறது.”

சந்தையின் தற்போதைய சூழலில் எந்த வகையான பங்குகள் முதலீட்டாளர்கள் வாங்கச் சிறந்தவை என்று சொல்லுங்களேன்!

‘‘கடந்த மூன்று முதல் ஐந்தாண்டுகள் வரையிலான பங்குச் சந்தையின் போக்கைப் பார்த்தோமானால், ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் நிச்சயம் லாபம் தருவதாக உள்ளன. இந்தியாவில் ஏராளமான துறைகளைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்கள் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், எஸ்.ஐ.பி முறையில், அதுவும் ஐந்தாண்டு காலத்துக்கு முதலீடு செய்ய விரும்புவர் களுக்கு ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் சிறந்த தேர்வு என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அதிலும் இந்த இரு வகைப் பங்குகளின் கலவையைக்கொண்ட மல்டிகேப் பங்குகள் இன்னும் சிறப்பானவை என்கிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘சந்தை இன்னும்கூட குறையும் அபாயம் உண்டு. எனவே, பொறுமை காப்பது அவசியம்’’ என்றார்.

கடைசி செய்தி: பந்தன் வங்கி புதிய கிளைகளைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்த நடவடிக்கையினால் இந்தப் பங்கின் விலையில் சில பாதிப்புகளை அடுத்த வாரத்தில் எதிர்பார்க்கலாம், உஷார்!

கடன் ஃபண்டுகளிலிருந்து ரூ.52,000 கோடி வெளியேற்றம்!

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனம், இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கியிடம் வாங்கிய குறுகிய காலக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக இந்த மாத தொடக்கத்தில் செய்தி வெளியான நிலையில், கமர்ஷியல் பேப்பருக்கான வட்டியைக் கட்டத் தவறியதாக மீண்டும் நெருக்கடியில் சிக்கியதுதான் டெஃப்ட் ஃபண்ட் திட்டங்களிலிருந்து முதலீடுகள் அதிகம் வெளியேறியதற்கு உந்துதலாக அமைந்தது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.13.73 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து களை நிர்வகித்து வருகின்றன. இதில் ரூ.1.59 லட்சம் கோடி வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்களின் கமர்ஷியல் பேப்பர்களிலும், ரூ.72,582 கோடி வங்கிசாராத நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கடன்களிலிருந்து சுமார் 52,000 கோடி ரூபாய் வரை வெளியேறியுள்ளது.

இர்கான் இன்டர்நேஷனல்... முதல் நாளிலேயே இறக்கம்!

இர்கான் இன்டர்நேஷனல் பங்கு வெள்ளிக்கிழமை பட்டியலிடப் பட்ட போதே 11% இறங்கியது. வர்த்தக முடிவில் 13% இறங்கிக் காணப்பட்டது. இவ்வளவுக்கும் இந்த நிறுவனப் பங்குகளை வேண்டி 10 மடங்கு அளவுக்கு விண்ணப்பம்ங்கள் வந்தன. ஒட்டு மொத்த பங்குச் சந்தையின் சென்டிமென்ட் நெகட்டிவ்வாக காணப் படுவதே இதற்குக் காரணம். ஐ.பி.ஓ-வில் இந்தப் பங்கினை வாங்கத் தவறியவர்கள், இனி இந்தப் பங்கினை ஃபாலோ செய்யலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism