Published:Updated:

யெஸ் பேங்க் மர்மங்கள்... திரை விலகுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
யெஸ் பேங்க் மர்மங்கள்... திரை விலகுமா?
யெஸ் பேங்க் மர்மங்கள்... திரை விலகுமா?

சர்ச்சை

பிரீமியம் ஸ்டோரி

திர்ச்சி வைத்தியங்களுக்குக் குறைவில்லாத ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில், இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கியான யெஸ் பேங்கின் பங்கு விலை சுமார் 50% வரை சரிந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகி வரும் ராணா கபூர், யெஸ் பேங்கின் தலைவராக நீடிப்பார் என்று அந்த வங்கியின் நிர்வாகக் குழு முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட சரிபாதியான ரூ.45,000 கோடியைப் பங்கு முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.

இந்த நிலையில், ராணா கபூர் பதவி நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று யெஸ் பேங்கின் இரண்டாவது மிகப் பெரிய முதலீட்டாளரும், மறைந்த முன்னாள் நிறுவனர் அசோக் கபூரின் மனைவியுமான மது கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மற்றொரு திருப்பமாக, ரேட்டிங் ஏஜென்சியான கேர் நிறுவனம், இதுவரை யெஸ் பேங்க் விநியோகித்துள்ள சுமார் ரூ.21,000 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை ‘கிரெடிட் வாட்ச்’ எனப்படும் ‘கவனிக்கப்பட வேண்டிய’ பட்டியலில் இணைத்துள்ளது. 

யெஸ் பேங்க் மர்மங்கள்... திரை விலகுமா?

என்னதான் நடக்கிறது யெஸ் பேங்கில், ஏன் இந்த நிறுவனத்தின் பங்கு விலை விழுந்தது என்கிற கேள்விகள் முக்கியமானவை. அது குறித்து கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

தோற்றமும், வளர்ச்சியும்

அறிவார்ந்த வங்கி என்ற கோஷத்துடன் அசோக் கபூர் மற்றும் ராணா கபூர் ஆகிய இருவரால் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப் பட்ட யெஸ் பேங்க், மிகக் குறுகிய காலத்தில் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்றதுடன், இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கி என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் போன்ற மற்ற புதிய தலைமுறை தனியார் வங்கிகள் தனிநபர் கடன் களை வழங்குவதில் அதிக கவனம் செலுத்திவந்த அதே வேளையில்,  வளர்ந்துவரும் நிறுவனங்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப துணையுடன் கூடிய அதிநவீன வங்கித் தீர்வுகளை வழங்குவதில் யெஸ் பேங்க் அதிக முனைப்புக் காட்டியது.

கார்ப்பரேட் பேங்கிங் அல்லது ஹோல்சேல் பேங்கிங் எனப்படும் இந்தத் தனித்துவமான வங்கிச் சேவைகளை வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டுவந்த யெஸ் பேங்கின் வியாபாரம் வெகுவாக வளர்ந்ததுடன் அதன் சந்தை மதிப்பும் வேகமாக வளர்ந்தது. யெஸ் பேங்கின் பங்குகள் நிஃப்டி இண்டெக்ஸிலும்கூட இடம்பிடிக்க முடிந்தது. 2008-ல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், நிறுவனர்களில் ஒருவரான அசோக் கபூர் துரதிர்ஷ்டவிதமாக உயிரிழக்க, ராணா கபூர் தலைமையில் யெஸ் பேங்க் தொடர்ந்து வீறுநடை போட்டு வந்தது.

வாராக் கடன் சிக்கல்கள்

இந்திய வங்கிகள், வாராக் கடன் உருவாவதைத் தவிர்ப்பதற்காக நொடிந்துப்போன நிறுவனங் களுக்கு அதிகப்படியான கடன்களை வழங்குவ தாகவும், வாராக் கடன் அளவினைக் குறைத்து வெளியிடுவதாகவும் வெளிவந்த குற்றச் சாட்டு களைத் தொடர்ந்து கடன் களின் தரத்தினை மறுபரி சீலனை செய்யும் புதிய தணிக்கை நடைமுறையை (Asset Quality Review) 2015-ல் இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. யெஸ் பேங்கினால்  வெளியிடப் பட்ட வாராக் கடன் அளவினைவிட மத்திய வங்கி தணிக்கை நடவடிக்கை யில் கண்டறியப் பட்ட  வாராக் கடன் அளவு பல மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், 2016 மற்றும் 2017 ஆண்டுகளிலும் இந்தப் போக்கே தொடர்ந்தது. சமீபத்தில் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் தணிக்கையில், யெஸ் பேங்க் கடன் வழங்கும் நடைமுறைகளின்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, யெஸ் பேங்க் தலைவர் ராணா கபூருக்கு மூன்றாண்டு பணி நீட்டிப்பு செய்யும் யெஸ் பேங்க் நிர்வாகக் குழுவின் முடிவை இந்திய ரிசர்வ் வங்கி நிராகரித்தது. ஜனவரி 2019 வரை மட்டுமே ராணா கபூர் தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யெஸ் பேங்க் மர்மங்கள்... திரை விலகுமா?

குவிந்த குற்றச்சாட்டுக்கள்

யெஸ் பேங்கின் கடன் நிர்வாகத்தில் ராணா கபூர் குடும்பத்தினரது தலையீடு இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ராணா கபூரின் மூன்று மகள்களான ராக்கி கபூர், ராதா கபூர் மற்றும் ரோஹினி கபூர் ஆகியோரால் நிர்வகிக்கப்படும் ‘த்ரீ சிஸ்டர்ஸ்’ என்ற நிறுவனம் யெஸ் பேங்கினால் வழங்கப்படும் கடன்கள் அதுவும் குறிப்பாக, ரியல் எஸ்டேட் கடன்களில் தலையிடுவதாகவும், அந்தக் கடன் பெறுபவர் களிடமிருந்து முறையற்ற வகையில் வருவாய் ஈட்டுவதாகவும், தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.இ-யிடம் குற்றச்சாட்டுக்கள் அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, என்.எஸ்.இ கடந்த செப்டம்பர் 24 அன்று யெஸ் பேங்கிடம் உரிய விளக்கம் கோரியது.

மேலும், ராணா கபூர் குடும்பத்தினரால்  நடத்தப்படும் கடன்/முதலீடு சம்பந்தப்பட்ட தொழில்கள், யெஸ் பேங்க்கின் நலன் களுக்குப் பாதிப்பாக அமைவதாகவும், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தையில் யெஸ் பேங்க் பங்குகளின் வர்த்தகத்தில் முறையற்ற தலையீடுகள் உள்ளதாகவும் குற்றச்சாட்டு கள் எழுந்தன. நிர்மா, பினானி மற்றும் மொன்னெட் போன்ற நிறுவனங்களுக்கு விதிமுறைகளைத் தாண்டி  கடன் வசதிகள் அளிக்கப் பட்டுள்ளதாகவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளை யெஸ் பேங்க் முழுமையாக மறுத்தாலும், பங்குச் சந்தைகள் யெஸ் பேங்க் வழங்கிய விளக்கங்களை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளதா என்பது கேள்விக்குறிதான். 

அடுத்த தலைவர் யார்?

மத்திய வங்கியின் கண்டிப்பான அணுகுமுறை மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலையை ஒரு வழியாகப் புரிந்துகொண்ட யெஸ் பேங்கின் நிர்வாகக் குழு, புதிய தலைவரைக் கண்டறிவதற் கான ‘நிறுவனம் சாரா நிபுணர்கள்’ இருவரை உள்ளடக்கிய தேடுதல் கமிட்டியினை அக்டோபர் 7-ம் தேதிக்குள் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது. ஜனவரி 2019-க்குப்பிறகு ராணா கபூர் தலைவராக நிச்சயமாக நீடிக்க மாட்டார் என்று யெஸ் வங்கி தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 2019-க்குப் பின்னரே, ராணா குடும்பத்தினரது தலையீடுகள் குறித்த முழு விவரங்கள் வெளிவர வாய்ப்புக்கள் இருக்கும் நிலையில், யெஸ் பேங்கில் ராஜத் மொங்கா, பிரளய் மோண்டல் ஆகியோர் செயல் இயக்குநர் களாகப் புதிதாகத் தேர்வாகியிருப்பது குறித்து யெஸ் பேங்க்கின் இரண்டாவது பெரிய முதலீட்டாளரும், மறைந்த முன்னாள் நிறுவனர் அசோக் கபூரின் மனைவியுமான மது கபூர் கேள்வி எழுப்பியுள்ளதாக பத்திரிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், யெஸ் பேங்கின் நலன் களைப் பேணிக் காக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார். 

சமீபத்தில் ஐ.எல்&எஃப்.எஸ் குழுமத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைக் கூண்டோடு நீக்கிய மத்திய அரசின் அதிரடி முடிவு காலம் கடந்தது என்றாலும், அதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல, யெஸ் பேங்கின் நிர்வாகக் குழுவினையும் கூண்டோடு மாற்றம் செய்து புதிய நிபுணர் குழுவினை அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

பொதுமக்களின் முதலீடு மற்றும் சேமிப்புத் தொகையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு, செபி மற்றும் மத்திய வங்கி, தனியார் வங்கிகளின் நிர்வாகத் தலைமையின் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்துவதுடன் அவற்றின் மீதான தணிக்கைகளின் முடிவுகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே இரண்டு பெரிய தனியார் வங்கிகள், தலைமை குறித்த சிக்கல்களில் தவித்து வரும் இன்றைய சூழ்நிலையில், இந்தியாவின் நான்காவது பெரிய வங்கியான யெஸ் பேங்கின் திரைமறைவு மர்மங்கள் அதிக காலம் நீடிப்பது இந்திய பொருளாதாரத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல. இந்த நிறுவனத்தில் நடக்கும் விஷயங்களை முதலீட்டாளர்கள் கவனமாகக் கண்காணிப்பது அவசியம்!

 - சுமதி மோகனப் பிரபு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு