Published:Updated:

ஷேர்லக்: கரடியின் பிடியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: கரடியின் பிடியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்!
ஷேர்லக்: கரடியின் பிடியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்!

ஷேர்லக்: கரடியின் பிடியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்!

பிரீமியம் ஸ்டோரி

ரெட் அலெர்ட் எச்சரிக்கையால், வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்ற ஷேர்லக், கேள்விகளை வாட்ஸ்அப் செய்யச் சொன்னார். அவரிடமிருந்து மாலை ஐந்து மணிக்கு வாட்ஸ்அப்பில் பதில் வந்து சேர்ந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஓ பதவியிலிருந்து சாந்தா கோச்சர் ஒருவழியாக விலகிவிட்டாரே?

‘‘வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய விவகாரத்தில்,   ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் சி.இ.ஓ-வான சாந்தா கோச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில், அவர் நீண்ட விடுப்பில் சென்றார்.

இந்த நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஓ பொறுப்பிலிருந்து  சாந்தா கோச்சர் ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கடிதத்தை இயக்குநர் குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து வியாழக்கிழமை இந்தப் பங்கின் விலை 4% ஏற்றம் கண்டது.

சாந்தா கோச்சருக்குப் பதிலாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஓ-ஆக சந்தீப் பக் ஷி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தப் பொறுப்பில் ஐந்தாண்டுக் காலம் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் சி.இ.ஓ பிரச்னை முடிவுக்கு வந்ததையடுத்து அதன் பங்கின் விலை கவர்ச்சிகரமாக மாறியிருப்பதாக அனலிஸ்ட்கள் கருத்து வெளியிட்டு உள்ளனர். மேக்ரோ காரணங்கள், இதர காரணங்களால் இந்தப் பங்கின் விலை இறக்கம் காணும்போது கொஞ்சமாக வாங்கி, போர்ட்ஃபோலியோவில் சேர்ந்தால் நீண்ட காலத்தில் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார்கள்  அனலிஸ்ட்டுகள்.’’

ஷேர்லக்: கரடியின் பிடியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்!

பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்துடன் உள்ள நிலையிலும், புதிய ஃபண்ட் வெளியீடுகள் அணிவகுந்துள்ளதே?

‘‘பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கரெக்‌ஷனுக்குப் பின்னரும்,  சந்தையில் புதிய மியூச்சுவல் ஃபண்டுகள் வெளியீடு (என்.எஃப்.ஓ)  அதிகரித்துள்ளது. ஆறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஃபண்டுகளை வெளியிடத் தயாராக இருக்கின்றன.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை வகைப்படுத்தி முறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை செபி அமல்படுத்தியதைத் தொடர்ந்து, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது போர்ட்ஃபோலியோவில் ஸ்மால்கேப் பங்குகளைக் கொண்டு நிரப்ப இதுதான் சரியான சமயம் எனக் கருதுகின்றன. இதன் காரணமாகத் தான் ஆக்ஸிஸ் குரோத் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட், டாடா ஸ்மால்கேப் ஃபண்ட், லார்சன் அண்டு டூப்ரோ ஃபோக்கஸ்டு ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் மஹிந்திரா ரூரல் பாரத் மற்றும் கன்ஸம்சன் யோஜனா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மாதத்தில் புதிய ஃபண்டுகளை வெளியிடத் தயாராகி வருகின்றன. இதன்மூலம் சுமார் 30,000 கோடி திரட்டப்பட இருக்கிறது.’’

பந்தன் வங்கி பங்கு விலை சரிந்துள்ளதே?

‘‘பந்தன் வங்கியின் புரமோட்டரான பந்தன் ஃபைனான்ஷியல் ஹோல்டிங்ஸ் லிமிடெட்,  தொழில் தொடங்கிய மூன்று ஆண்டுகளில் அந்த வங்கியில் தனது பங்குகளை 82 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகக் குறைத்தது மற்றும் ரிசர்வ் வங்கியின் வங்கிக்கான லைசென்ஸ் விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட காரணங்களுக் காக, பந்தன் வங்கி, மேலும் புதிதாகக் கிளைகளைத் திறக்க தடை விதித்தும், அதன் சி.இ.ஓ சந்திர சேகர் கோஷின் சம்பளத்தை முடக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்த வங்கிப் பங்கின் விலை ஒரே நாளில் 20% சரிந்தது. இந்த வாரம் முழுக்க விலை உயராமலே இருக்கிறது.’’ 

தனியார் வங்கிகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கியின் கெடுபிடி அதிகரித்துள்ளதே?

‘நிர்வாக அமைப்பைச் சரியாக வைத்துக் கொள்ளாவிட்டால், கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும்’’ என ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாகத் தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ்  வங்கி எச்சரிக்கை விடுத்து வருகிறது. 

கடந்த ஏப்ரல் மாதம், ஆக்ஸிஸ் வங்கியின் சி.இ.ஓ ஷிக்கா ஷர்மாவின் பதவிக் காலத்தை நான்காவது முறையாக நீட்டிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு அந்த வங்கியின் இயக்குநர்கள் குழுவை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டதை அடுத்து, ஷர்மா 2018 டிசம்பர் மாதத்துடன் தனது பதவியில் தொடர்வதில்லை என்ற முடிவை எடுத்தார். இதனையடுத்து புதிய சி.இ.ஓ நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில், யெஸ் பேங்கின் சி.இ.ஓ ரானா கபூரின் பதவிக்காலத்தை 2019, ஜனவரி மாதத்துக்குப் பின்னர் நீட்டிக்க மறுத்துவிட்டது ரிசர்வ் வங்கி. அதற்குமேல் அவரது  பதவிக் காலத்தை நீட்டிக்க முடியாது என்றும் சொல்லிவிட்டது.

தற்போது வங்கி லைசென்ஸ் விதிமுறைகளை மீறியதாக பந்தன் வங்கியின் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கிகள்தான்  பொருளாதாரத்தின் அடிப்படை. அதில் பிரச்னை வரக்கூடாது என்பதற்காகத்தான் ஆர்.பி.ஐ இப்படி நடவடிக்கை எடுக்கிறது.’’

மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள் கரடியின் பிடியில் சிக்கி இருக்கின்றனவே? 

‘‘இந்தியப் பங்குச் சந்தையில் தற்போது காணப்படும் இறக்கதினால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள்தான். இந்தப் பங்குகளில் பெரும்பாலானவை மிக அதிக அளவில் விற்கப் பட்டு, கரடியின் ஆதிக்கத்துக்குள் சென்றிருக் கின்றன. பி.எஸ்.இ மிட்கேப் இண்டெக்ஸில் இடம்பெற்றுள்ள 105 பங்குகளில் 82 பங்குகள் அதன் உச்ச விலையிலிருந்து குறைந்தது 20% அளவுக்காவது சரிவைச் சந்தித்துள்ளன.

அதேபோல, பி.எஸ்.இ ஸ்மால்கேப் இண்டெக்ஸும் 20% சரிவைச் சந்தித்துள்ளன. 869 பங்குகளில் 825 பங்குகளின் விலை அதிகம்  வீழ்ச்சியடைந்துள்ளன. அதில் 352 பங்குகள், அவற்றின் மதிப்பில் 50 சதவிகிதத்தை இழந்து உள்ளன. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகளின் விலை 60 சதவிகிதத்துக்கும் அதிகமாக இறங்கின. பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி) அறிமுகம் போன்றவற்றால் மிட் அண்டு ஸ்மால்கேப் நிறுவனங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக் கின்றன. இந்த நிலையில், அடிப்படையில் வலுவான மற்றும் நல்ல நிர்வாகத்திறன் கொண்ட மிட் அண்டு ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள் கவர்ச்சிகரமான விலையில் கிடைத்தால் வாங்கத் தவறாதீர்கள் என்கிறார்கள் முன்னணி அனலிஸ்டுகள்.

உள்நாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து வந்த அதிகமான முதலீடுகளால் 2013-ம் ஆண்டின் இறுதியிலிருந்து, சிறப்பாகச் செயல்பட்ட மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் தற்போது சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.’’

சந்தை வீழ்ச்சிகண்டுள்ள இந்த சூழ்நிலையிலும் சில பங்குகள் ஏற்றம் கண்டுள்ளனவே?

‘‘இந்தியப் பங்குச் சந்தை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7% சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஐந்து மாதங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும். அதேசமயம், இந்தச் சரிவினால் பெரும்பாலான பங்குகள் ஆட்டம் கண்டபோதிலும், டி.சி.எஸ், தீபக் நைட்ரேட், ஜென்சார் டெக்னாலஜீஸ், சையன்ட், ஏ.ஐ.ஏ இன்ஜினீயரிங், எல் அண்டு டி டெக்னாலஜீஸ், டிவிஸ் லேப், பயோகான்  உள்ளிட்ட சில பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

குறிப்பாக, சையன்ட் பங்குகளின் விலை, ஜனவரி 1 முதல் செப்டம்பர் 15 வரையிலான காலகட்டத்தில் 30% ஏற்றமடைந்த நிலையில், அதற்குப்பின்னர் 4% உயர்வை எட்டியுள்ளன. ஏறக்குறைய அனைத்து மிட்கேப் பங்குகளும் சரிவைச் சந்தித்தபோதிலும், சையன்ட் மட்டும் தாக்குப் பிடித்துள்ளது.’’

பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட மூன்று பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு வரவேற்பு எப்படி?

‘‘பேங்க் ஆஃப் பரோடா, விஜயா பேங்க் மற்றும் தேனா வங்கி ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளின் இணைப்புக்குத் தொழில் துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம், வரும் நாள்களில் கடும் சவால் காத்திருக்கிறது என்பதையே இது பிரதிபலிக்கிறது. இந்த இணைப்பு நடவடிக்கையின் வெற்றி அல்லது தோல்விதான், வங்கித் துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

வங்கிகளை இணைக்கும் திட்டம் உலக அளவில் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுவரும் விஷயம்தான் என்றாலும், தேனா வங்கியின் வாராக்கடன் உள்ளிட்ட அதன் மோசமான செயல்பாடுகள்,  பேங்க் ஆஃப் பரோடா மற்றும் விஜயா வங்கியின் வளர்ச்சியைப் பாதித்து விடுமோ என்ற அச்சமும், இணைப்புக்குப் பின்னர் உருவாகும் ஒரே வங்கியால்  மூலதனத்தைத் திரட்ட முடியுமா என்ற சந்தேகமும் முதலீட்டாளர் களிடையே காணப்பட்டது. ஆனாலும், இந்த இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியான மறுதினமே, பேங்க் ஆஃப் பரோடாவின் பங்கு விலை, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 16% ஏற்றமடைந்தது.

இருப்பினும் கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ், இந்த மூன்று வங்கிகளின் முதல் காலாண்டு அறிக்கையைப் பார்க்கும்போது, இந்த இணைப்பினால் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் லாப விகிதம்தான் குறையும் எனத் தெரிவித்துள்ளது.’’ 

ஷேர்லக்: கரடியின் பிடியில் மிட் & ஸ்மால்கேப் பங்குகள்!

எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளனவே?

‘‘நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு வர உள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே சென்று கொண்டிருப்பது மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை சுமார் ரூ.1.50 குறைத்துள்ளது. அதேபோல், எண்ணெய் நிறுவனங்களின் சார்பில் ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த மாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.2.50  குறைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த விலைக் குறைப்பினால் ஐ.ஓ.சி, பி.பி.சி.எல் மற்றும் ஹெச்.பி.சி.எல் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் விற்பனை லாபத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதால், 2018-19-ம் நிதியாண்டில் இந்த நிறுவனங்கள் சுமார் ரூ.4,500 கோடி லாப இழப்பைச் சந்திக்கும் எனச் செய்திகள் வெளியாகின. மேலும், பெட்ரோல், டீசல் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மீண்டும் அரசு வசம் சென்றுவிடுமோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது.  இதன் எதிரொலி யாக, விலைக் குறைப்பு அறிவிப்பு வெளியான மறுதினமான வெள்ளிக்கிழமையன்று,  எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் சுமார் 20% அளவுக்கு விலை இறக்கத்தைச் சந்தித்தன.’’

நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளின் இழப்பு  குறையும் எனச் சொல்லப்படுகிறதே?

‘‘வாராக் கடன்களின் அளவு குறைந்துள்ளதால், 2018-19-ம் நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளின் இழப்பு, முந்தைய நிதியாண்டில் காணப்பட்ட 85,000 கோடி ரூபாயிலிருந்து 50,000 கோடி ரூபாயாகக் குறையும் எனத்  தரச் சான்று நிறுவனமான கிரைஸில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இழப்புத் தொகை குறைந்தாலும், 20 பொதுத்துறை வங்கிகளின் நஷ்டக் கணக்கு, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கும். இருப்பினும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து இந்தப் பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலானவை லாபம் ஈட்டத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.’’ 

வாராக் கடன் பிரச்னையால் பாதிக்கப் பட்டுள்ள ஐ.டி.பி.ஐ வங்கியின் 26% பங்குகளை எடுத்துக்கொள்ள எல்.ஐ.சி முன்வந்துள்ளதே?

‘‘மத்திய அரசிடம் ஐ.டி.பி.ஐ வங்கியின் 86 சதவிகிதப் பங்குகள் உள்ளன. முதலில், இவற்றை தனியார்வசம் ஒப்படைக்கும் யோசனையில் மத்திய அரசு இருந்தது. ஆனால், அந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு வந்ததால், எல்.ஐ.சி நிறுவனத்துக்கு 43 சதவிகிதப் பங்குகளை விற்க முடிவெடுத்தது. ஏற்கெனவே, எல்.ஐ.சி-யின் வசம் ஐ.டி.பி.ஐ வங்கியின் 8 சதவிகிதப் பங்கு இருப்பதால், கூடுதலாக 43 சதவிகிதப் பங்குகளை வாங்குவதன்மூலம் மொத்தம் 51 சதவிகிதப் பங்குகளை எல்.ஐ.சி கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எல்.ஐ.சி-க்கு முன்னுரிமை அடிப்படையில்     ஐ.டி.பி.ஐ வங்கியின் 51% பங்குகளை ஒதுக்குவதற்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழு வியாழனன்று ஒப்புதல் அளித்த நிலையில்,  அன்றைய தினமே அதன் 26% பங்குகளை, பங்கு ஒன்று ரூ.61.73 என்ற விலையில் ஓப்பன் ஆஃபர் மூலம் வாங்க எல்.ஐ.சி முன்வந்துள்ளது. இதன்மூலம்     ஐ.டி.பி.ஐ வங்கிக்குத் தோராயமாக ரூ.12,602 கோடி வரை முதலீடு கிடைக்க வாய்ப்புள்ளது.’’

கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியிருக்கிறதே?

‘‘ஈரான் மீது அமெரிக்கா, கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் விதித்த பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து, சர்வதேச சந்தைக்கு அந்த நாட்டிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், ஈரானுக்கு மாற்றாகக் குறிப்பிடத்தக்க அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன்மிக்க இன்னொரு நாடாக விளங்கும் சவுதி அரேபியா, வரும் நாள்களில் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளது.

இதன் எதிரொலியாக வியாழக்கிழமையன்று, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, கடந்த நான்கு ஆண்டு உச்சத்திலிருந்து சரிந்தது. அதாவது, வியாழக்கிழமை மதியம், பேரல் ஒன்றுக்கு 1.17 டாலர் சரிந்து, 85.12 டாலராகக் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணி வாக்கில் 84.47-க்குக் குறைந்தது.”

ஆர்.பி.ஐ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லையே?

“பங்குச் சந்தை ஏற்கெனவே கடும் வீழ்ச்சியில் இருக்கிறது. இப்போது வட்டி விகிதத்தை ஏற்றினால், அது இன்னும் நெகட்டிவ்வாக மாறிவிடும் என்பதால், ஆர்.பி.ஐ ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சில்லறைப் பணவீக்க விகிதம் ஜூன் மாதத்தில் 4.9 சதவிகிதமாக இருந்தது, கடந்த ஆகஸ்டில் 3.7 சதவிகிதமாக இறக்கம் கண்டுள்ளது. இந்த
நிலையில், வட்டியை அதிகரிப்பது நல்லதல்ல என ஆர்.பி.ஐ யோசித்ததும் மாற்றம் இல்லாததற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.”

- ஷேர்லக்

ஓவியம்: அரஸ்

தினேஷ் இன்ஜினீயர்ஸ்... ஐ.பி.ஓ வாபஸ்!

தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனமான, ‘தினேஷ் இன்ஜினீயர்ஸ்’ நிறுவனம், வணிகத்தை விரிவாக்கம் செய்யவும், நிர்வாக செலவுகளுக்காகவும் 250 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டு, ஐ.பி.ஓ மூலம் பங்குகளை வெளியிட முடிவு செய்திருந்தது. பங்கு ஒன்றின் விலை ரூ.183 - 185 வரை  நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தப் புதிய பங்கு வெளியீடு, செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 3-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், வெளியிடப்பட்ட 1 கோடி பங்குகளுக்கு, 16.5 லட்சம் பங்குகளுக்கு மட்டுமே விண்ணப்பம் வந்ததால், ஐ.பி.ஓ வெளியீடு தோல்வியடைந்தது. இதன் காரணமாக, தனது ஐ.பி.ஓ வெளியீட்டைத் திரும்ப பெற்றுக்கொள்வதாக, பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம் தினேஷ் இன்ஜினீயர்ஸ் தெரிவித்துள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு