Published:Updated:

குழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்!

குழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
குழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்!

கவர் ஸ்டோரி

ங்கு முதலீட்டாளர்களுக்கு இது ஒரு கடினமான காலம். பங்குச் சந்தை இரண்டு நாள்கள் ஏறுவதும், இரண்டு நாள்கள் இறங்குவதுமாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. சந்தையின் உச்சத்தின்போது முதலீடு செய்திருப்பவர்கள் பற்றி இப்போது கேட்கவே வேண்டாம். கண்முன்னே, தமது முதலீடுகளின் சந்தை மதிப்பு சடசடவென்று சரிவது முதலீட்டாளர்களிடையே பெரியதொரு மனச்சோர்வை ஏற்படுத்தும்.
 
இன்னும் எத்தனை புள்ளிகள் சரியுமோ என்கிற கவலை ஒருபக்கம், குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளைப் புதிதாக வாங்கலாமா, வாங்கினால் இன்னும் நஷ்டம் அடைய வேண்டியிருக்குமா என்கிற அச்சத்துடன்கூடிய ஆர்வம் மறுபக்கம்.

இதுபோன்ற குழப்பமான தருணங்களில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான வழிமுறை கள் என்ன என்று பார்ப்போம்.

முதலீடு செய்யத் தொடங்குவோம்

இந்தியா ஆக்கமும், ஊக்கமும் கொண்ட இளைஞர்கள் மிகுந்த ஒரு நாடு. இந்தியப் பொருளாதாரம் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து வளரக்கூடியது.  ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந் தாலும், உலகப் பொருளாதாரச் சூழல் பெருமளவு மாறினாலும், இந்தியப் பொருளாதாரத்தின் குறைந்தபட்ச வளர்ச்சியான 5-7 சதவிகிதத்தைத் தடுப்பது கடினம்.

குழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்திய நிறுவனங்களின் கார்ப்பரேட் கவர்னன்ஸ் குறித்துப் பல கேள்விகள் இருந்தாலும், அவர்களது திறமையையும், உத்வேகத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. பங்குச் சந்தை இன்னும் பெருமளவுக்கு வீழ்ச்சியடையும் என்று முழுமை யாக நம்புபவர்கள்கூட இந்தியா வின் ஏற்றம் மற்றும் இந்திய நிறுவனங் களின் வளர்ச்சி குறித்த சாத்தியக் கூறுகளை மறுக்க மாட்டார்கள். நம் நாடும், நம் நாட்டு நிறுவனங்களும் எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி காணும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருந்து, கொஞ்சம் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யத் துணிபவர்கள், தங்களது சேமிப்பில் ஒருபகுதியை தாராள மாக முதலீடு செய்யத் தொடங்க லாம். அப்படியான நம்பிக்கை ஏதும் இல்லையென்றால் பங்கு சந்தையைவிட்டு விலகி, முதலீட்டுக்கு உத்தரவாதம் தரும் திட்டங்களை மட்டுமே நாடலாம். 

சந்தையைத் தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும்...

பங்குச் சந்தைக்குப் புதியவர் களும், ஏற்கெனவே முதலீடு செய்துவிட்டு, ஒதுங்கி இருந்த வர்களும் மீண்டும் சந்தையில் நுழைந்து, முதலீடு செய்வதற்கு இது அருமையான வாய்ப்பு என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம், எந்தத் துறையில் எந்தப் பங்கில் மேலும் எந்த விலையில் முதலீடு செய்வது என்ற குழப்பம் சாதாரணமாக அனைத்து முதலீட்டாளர் களுக்கும் உண்டு.

சந்தையைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கலாம். ஓரளவுக்கு மட்டுமே அறிந்தவர்கள் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறித்து யோசிக்கலாம். மற்றவர்கள் நிஃப்டி அல்லது சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டு களைப் பரிசீலிக்கலாம்.

விலையுடன் தரமும் அவசியம்

பண்டிகைத் தள்ளுபடி விற்பனை முடிந்துவிட்டாலும், பங்குச் சந்தையில் தள்ளுபடி விற்பனைக் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சென்செக்ஸ் 10% அளவுக்குக் குறைந்துள்ளது பி.எஸ்.இ மிட் கேப் குறியீடு 15 சதவிகிதத்துக்கு மேல் வீழ்ந்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தரப் பங்குகளோ ஜனவரி 2018 மாதத்திலிருந்தே சரிவைச் சந்தித்து வருகின்றன.  தனிப்பட்ட முறையில் பல பங்குகள் 50 சதவிகிதத்துக்கும் மேல் மதிப்பை இழந்துள்ளன.

குழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்!

ஆனால், விலை குறைவு என்பதற்காக மட்டுமே தரம் குறைந்த பங்குகளை வாங்க இயலாது. இன்ஃபிபீம் போன்ற பங்குகள் தமது உச்சத்திலிருந்து பல மடங்கு வீழ்ந்திருக்கும்போது, இயல்பாகவே ஒருவித ஈர்ப்பு ஏற்படும். மீண்டும் அந்த உச்சத்தின் பாதியைத் தொட்டால்கூட நமக்குப் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்ற ஆசையும் தோன்றும்.

ஆனால், கி.பி 2001-ல் நிகழ்ந்த இணையதளப் பங்குகளின் வீழ்ச்சி மற்றும் 2008-ல் ஏற்பட்ட கட்டுமானப் பங்குகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி, நமக்கு ஒரு முக்கியப் பாடத்தை உணர்த்துகிறது. அதாவது, ஒரு பங்கானது விலை வீழ்ச்சியடைந்த அதே அளவிற்கு உயர வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

உதாரணத்திற்கு, 2008 தொடக்கத்தில்            ரூ.450-க்கும் மேல் சென்ற சுஸ்லான் பங்கின் விலை சில வாரங்களிலேயே ரூ.220 வரை சரிந்தது. ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது என்ற நம்பிக்கையில் வாங்கிய பல முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. கிட்டத்தட்ட பத்தாண்டு கள் கடந்தபின்னரும் அந்தப் பங்கும் மேலும் சரிந்து, தற்போது ரூ.6 அளவிலேயே வர்த்தகமாகி வருகிறது.

அடிப்படையில் வலுவில்லாத நிறுவனங்கள் பொருளாதாரச் சுழற்சியில் பாதிக்கப்படும்போது, மீண்டுஎழுவது சாத்தியமில்லாமல் போய்விடுகிறது. இதற்கு யூனிடெக், ஜி.எம்.ஆர் என்று உதாரணங் களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதேசமயம், தற்போதைய வங்கிசாரா நிதித் துறை தேக்கத்தின் காரணமாக சுந்தரம் ஃபைனான்ஸ், மாருதி போன்ற அடிப்படையில் வலுவான நிறுவனங்களின் பங்குகள் பாதிக்கப்பட்டாலும், அவை கண்டிப்பாக மீண்டெழும். அதற்கு மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். பொறுமை அதிகம் தேவைப்படும்.

பொருளாதார சுழற்சி்

வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதையப் பொருளாதாரச் சூழ்நிலை குறித்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு சில தொழில் துறைகள் ஏற்றம் பெறுகின்றன அல்லது வீழ்ச்சி அடைகின்றன. உதாரணமாக, 2000-களின் ஆரம்பத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வளர்ந்தபோது இணையதளம் சார்ந்த பங்குகள் ஏற்றம் அடைந்தன.

2000-களின் மத்தியிலோ, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பணவீக்கம் வெகுவேகமாக வளரும் என்ற அதீத நம்பிக்கையின் காரணமாக கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் வேகமாக வளர்ச்சி பெற்றன. அந்த நம்பிக்கைகள் பொய்த்தபோது குறிப்பிட்ட நிறுவனங்களின் வளர்ச்சி தடைபட்டதுடன், பங்குகளின் வீழ்ச்சியும் பெரிதாக இருந்தது.
சமீப காலமாக மிதமான பணவீக்கமும், மிகக் குறைவான வட்டி விகிதங்களும் வங்கிசாரா நிறுவனங்கள் ஒட்டுமொத்த கடன் சந்தையில் குறைந்த வட்டியில் கடன் வாங்கி நுகர்வோருக்கு எளிய முறையில் கடன் வழங்க உதவின.

இந்தியாவில் நுகர்வோர் கலாசாரம் அதிகரித்துடன், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யினால் கடனும் எளிதில் கிடைத்ததால், ஆட்டோ வாகனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் போன்ற அத்தியாவசம் இல்லாத நுகர்பொருள் களின் விற்பனை பலமடங்கு அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ வாகனங்கள் போன்ற அத்தியாவசம் இல்லாத நுகர்பொருள் உற்பத்தியாளர்களின் பங்குகள் வேகமாக வளர்ச்சியடைந்தன.

குழப்பும் சந்தையில் லாபம் பெறும் வழிகள்!

ஆனால், தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் வீழ்ச்சி ஆகியவற்றால் வட்டி விகிதம் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐ.எல்&எஃப்.எஸ் மற்றும் டி.ஹெச்.எஃப்.எல் போன்ற நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் ஏற்பட்ட சிக்கல்களினால் ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகிய ஒழுங்குமுறை ஆணையங்கள் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்துடன் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு மற்றும் வட்டிவிகித உயர்வும் சேர்ந்துகொள்ளும் பட்சத்தில் வாகன விற்பனை பெருமளவு பாதிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது. இதனால் மாருதி உள்ளிட்ட வாகனத் துறை பங்குகள் தமது உச்சத்திலிருந்து பெருமளவு வீழ்ந்துள்ளன.

கச்சா எண்ணெய் உயர்வு மற்றும் பெட்ரோல்/டீசல் விலை நிர்ணயத்தில் அரசின் தலையீடு ஆகியவற்றால் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் சரிந்துள்ளன. ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் ரியல் எஸ்டேட் துறைப் பங்குகளையும் விட்டுவைக்க வில்லை.

பங்குச் சந்தையின் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால், பொருளாதார மாற்றத்தின் ஊடாக ‘பங்கு வருவாய் குறைவு’டன் ‘வருவாய் வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு குறைவு’ம் (EPS Correction & P/E Correction) ஒருங்கே இணைந்து கொள்ளும்போது, பங்குகள் அதல பாதாளத்தில் வீழ்கின்றன. தற்போதைய பொருளாதார சுழற்சியில் ஒருவித தெளிவு பிறக்கும் வரை மேற்சொன்ன துறை சார்ந்த பங்குகள் பழைய உச்சத்திற்குச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவே.

எனவே, இந்தப் பொருளாதார சுழற்சியில் பயன் பெறக்கூடிய அல்லது அதிகம் பாதிக்கப்படாத பங்குகள் எது என்று கவனிப்பது நலம். உதாரணமாக, ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் போன்ற அத்தியாவசியமான நுகர்பொருள் உற்பத்தியாளர்களுக்கு வட்டி விகித வளர்ச்சியினால் பெருமளவு பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கலாம். 

‘காசா’ எனப்படும் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளைப் பெருமளவு கொண்ட வங்கிகளுக்கும் வட்டி விகித உயர்வினால் பெருமளவு பாதிப்பு இருக்காது. இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் படுவதால், புளூஸ்டார் போன்ற உள்நாட்டு அப்ளையன்ஸ் உற்பத்தியாளர்கள் பயன் பெற வாய்ப்புள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் ராணுவத் தளவாடங்களின் தேவை பெருமளவு அதிகரித் திருப்பதால், லார்சன் & டூப்ரோ மற்றும் பாரத்  எலெக்ட்ரானிக்ஸ் போன்ற உற்பத்தி நிறுவனங்கள் பலன் பெறலாம்.
மேலும், ரூபாய் வீழ்ச்சி ஏற்றுமதியாளர்களுக்குக் குறிப்பாக மருந்து, ஜவுளி மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை பங்குகளுக்கு உதவும்.

   முதலீட்டுக்கான முன்யோசனைகள் சில

* பலவகைப்பட்ட பங்குகளில் முதலீட்டு விரிவாக்கம் செய்தல் வேண்டும். அதேசமயம், மிக அதிக எண்ணிக்கையிலான பங்குகளில் முதலீடு செய்தால், நிறுவனத்தின் செயல்பாடு களில் போதுமான கவனம் செலுத்த முடியாது.

* ஒரு தனிநபர் தனது போர்ட்ஃபோலியோவில் 15-25 பங்குகள் வரை வைத்திருக்கலாம். தரமான நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வதுடன், நிறுவனங்களின் வருவாயில் ரொக்கத்தின் சதவிகிதம், செயல்பாட்டுத் திறன், வலுவான பேலன்ஸ் ஷீட், குறைவான கடன் சுமை, தொழிற்துறை வளர்ச்சிக்கான வாய்ப்புகள், பங்கின் மீதான வருவாய் விகிதம், தலைமையின் நம்பகத் தன்மை ஆகியவற்றை மனதில்கொள்வது நலம்.

* தரமான பங்குகளைக்கூட நிறைவான விலையிலேயே வாங்க வேண்டும். தற்போதைய தீபாவளித் தள்ளுபடி விற்பனையைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. அதிகப்படியான டிவிடெண்ட் வழங்கும் பங்குகள் ஏற்றத் தாழ்வான காலங்களில் சிறப்பாகச் செயலாற்றிய வரலாறு உண்டு. சிறு, குறு (Micro & Penny stocks) பங்குகளைக் கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. நீண்ட கால நோக்கில் மட்டுமே சிறிய அளவில் முதலீடு செய்யலாம்.

* பங்குச் சந்தையில் தினசரி வர்த்தகம் என்பது முதலீட்டாளர்களுக்கு அதிகம் பயன் தராது. நீண்ட காலத்துக்கு வாங்கி வைத்துள்ள பங்குகளின் விலையை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தால், தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும். பங்கின் விலையைவிட நிறுவனங்களின் செயல்பாடு முக்கியம். குறிப்பிட்ட கால இடை வெளிகளில் நிறுவனத்தின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வது நலம்.

* நிறுவனங்களை மதிப்பாய்வு செய்ய போதிய நேரமில்லாதவர்கள், பங்குச் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளை உபயோகப்படுத்திக்கொள்வது நல்லது. மாதாந்திர முதலீட்டுத் திட்டங்களை நிறுத்த வேண்டாம். புதியதாக லார்ஜ்கேப்/மல்டிகேப் திட்டங்களைத் தொடங்கலாம்.

* முதலீடு செய்ய விரும்பும் தொகையை ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சரிசமமாகப் பிரித்து, குறிப்பிட்ட இடைவெளியில் படிப்படியாகப் பங்குகளை வாங்குவது அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தையின் அதிரடி ஏற்றத் தாழ்வுகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

* பங்குகள் விலை குறைந்து, சகாயமான விலையில் கிடைத் தாலும், கடன் வாங்கி முதலீடு செய்வது கூடவே  கூடாது. பலரும் ஒரு பங்கைத் துரத்தித் துரத்தி வாங்குகிறார்கள் என்பதற்காக நாமும் அதை வாங்கத் தேவையில்லை. கும்பலோடு எப்போதும் சேர வேண்டாம். பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

* முதலீடுகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களை விட்டு விலக வேண்டாம். சந்தையில் ஏற்றத் தாழ்வுகள் இயல்பானது என்பதையும் முதலீடுகள் நீண்ட கால நோக்கிலானவை என்பதையும் ஏற்றுக்கொள்ளும் பொறுமை வேண்டும். குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வூதியம் என நம்முடைய இலக்குகளில் ஒருவித தெளிவு இருப்பது நலம். 

* நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்வதுபோல, சில நல்ல பங்குகளில் மாதத்துக்கு இவ்வளவு என்று தொடர்ந்து முதலீடு செய்யலாம். இப்படிச் செய்வது ஒரு பங்கின் ஏற்ற, இறக்கத்தைத் தொடர்ந்து கவனிக்க உதவுவதுடன், எதிர்காலத்தில் நல்ல லாபத்தைச் சம்பாதிக்கவும் ஓர் எளிய வழியாகும்.

* சந்தையில் உச்சக் கட்டத்தில் விற்க முடிவதும், அடிமட்டத்தில் வாங்க முடிவதும் தற்செயலானவையே தவிர, திட்டம் போட்டு செயல்படுத்தக்கூடியவை அல்ல. போதுமென்ற மனமே பொன்னானது என்ற பொன்மொழி பங்குச் சந்தைக்கும் பொருந்தும்.

ஆக மொத்தத்தில், கற்பனையான எதிர்பார்ப்புகளோ, தேவையில்லாத பரபரப்புகளோ இல்லாமல் இருப்பது அவசியம். சிறப்பான முதலீடு என்பது ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையாக இருந்து அமைதியான தூக்கத்துக்கு நமக்கு வழி செய்து கொடுப்பதாக இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தூக்கத்தைக் கெடுப்பதாக இருக்கக் கூடாது!

டிஸ்க்ளெய்மர்:   இந்த கட்டுரையில் மேற்கோள்  காட்டப்பட்டுள்ள பங்குகள் யாவும் சந்தை மாற்றங்களைப் பற்றி புரிந்துகொள்வதற்காக உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளதே தவிர, முதலீடு செய்து வாங்கவோ அல்லது விற்பதற்கான பரிந்துரைகள் அல்ல.

- சுமதி மோகனப் பிரபு