பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் முடிவுகள் இனி்..

மஹிந்திரா & மஹிந்திரா
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 26% உயர்ந்து ரூ.1,779 கோடியாக உள்ளது. இதே காலத்தில், வருவாய் 6% உயர்ந்து ரூ.12,790 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வாகன விற்பனை 9% அதிகரித்து, 1.41 லட்சமாக உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனினும் டிராக்டர் விற்பனை 5% குறைந்து 73,012- ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி 14% அதிகரித்து 13,377 வாகனங்களாக உள்ளது. எபிட்டா 4% குறைந்து ரூ.1,849 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு 16 சதவிகிதத்திலிருந்து 14.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
டாடா ஸ்டீல்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் ரூ.975.87 கோடியிலிருந்து, ரூ.3,604.2 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் 34% உயர்ந்து ரூ.43,544.1 கோடியாக உள்ளது.

எபிட்டா 89% உயர்ந்து ரூ.8,919.5 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு 14.5 சதவிகிதத்திலிருந்து 20.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

சன் ஃபார்மா
சன் ஃபார்மா நிறுவனம் நிகர இழப்பு ரூ.218 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இதன் நிகர லாபம் ரூ.912 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒரு முறை இழப்பு ரூ.1,214.38 கோடியாக உள்ளது.
வருவாய் 4 சதவிகிதம் உயர்ந்து ரூ.6,937.63 கோடியாக உள்ளது. எபிட்டா 11% உயர்ந்து ரூ.1,531.1 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு 20.7 சதவிகிதத்திலிருந்து 22.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

ஐ.டி.பி.ஐ பேங்க்
ஐ.டி.பி.ஐ பேங்கின் நிகர இழப்பு செப்டம்பர் காலாண்டில் ரூ.3602.49 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் நிகர இழப்பு ரூ.197.84 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருமானம் 21.5% குறைந்து ரூ.1300.9 கோடியாக உள்ளது. மொத்த வாராக் கடன்களின் விகிதம் 30.78 சதவிகிதத்திலிருந்து 31.78 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வாராக் கடன் தொகை, ரூ.57,807 கோடியிலிருந்து ரூ.60,875.49 கோடியாக உயர்ந்துள்ளது. வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு, முதலாம் காலாண்டில் ரூ.4602.55 கோடியிலிருந்து ரூ.5481.64 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 18.76 சதவிகிதத்திலிருந்து 17.30 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.389 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.105 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் 4% அதிகரித்து ரூ.1,880.86 கோடியாக உள்ளது.
செயல்பாட்டு இழப்பு ரூ.321.5 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் செயல்பாட்டு லாபம் ரூ.139.5 கோடியாக இருந்தது. விமான எரி பொருளுக்கான செலவு 55.8% அதிகரித்து ரூ.845 கோடியாக உள்ளது.
இந்தியா சிமென்ட்ஸ்
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 94% வீழ்ச்சிக் கண்டு ரூ.1.43 கோடியாக உள்ளது. இருந்த போதிலும் நிதி நிலை முடிவு வெளியான அன்று அதன் பங்கு விலை 3% அதிகரித்துள்ளது.

நிகர விற்பனை 8.8% அதிகரித்து ரூ.1,387.05 கோடியாக உள்ளது. எபிட்டா 15.69% குறைந்து ரூ.158.56 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு 3.10% குறைந்து 11.2 சதவிகிதமாக உள்ளது.

கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ்
ஆதித்ய பிர்லா குரூப் நிறுவனமான கிராஸிம் இண்டஸ்ட்ரீஸின் ஒட்டுமொத்த நிகர இழப்பு ரூ.1,299.86 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.799.03 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருவாய் 23.76% அதிகரித்து ரூ.16,795 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் மொத்த செலவு ரூ.15,460.72 கோடியாக உள்ளது. சிமென்ட் வணிகத்தில் வருவாய் ரூ.6,791.18 கோடியிலிருந்து ரூ.8,151.46 கோடியாக அதிகரித்துள்ளது. விஸ்கோஸ் ஸ்டேபில் ஃபைபர் பிரிவின் வருவாய் ரூ.2,119.94 கோடியிலிருந்து ரூ.2,605.82 கோடியாக அதிகரித்துள்ளது.

அப்போலோ டயர்ஸ்
அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் 4.19% அதிகரித்து ரூ.146 கோடியாக உள்ளது. மொத்த வருவாய் ரூ.3,496.3 கோடி யிலிருந்து ரூ.4,269.68 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் விற்பனை 23% அதிகரித்து ரூ.4,192 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 74% அதிகரித்து ரூ.398 கோடியாக உள்ளது.

- தெ.சு.கவுதமன்