Published:Updated:

ஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது?
ஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

ஓவியம்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி

நான் அவசர வேலையாக மும்பை செல்கிறேன். கேள்விகளை அனுப்புங்கள்” என வியாழக் கிழமை மாலையே நமக்கு தகவல் அனுப்பி விட்டுச் சென்றார் ஷேர்லக். நாம் கேள்வி களை அனுப்பிவிட்டுக் காத்திருக்கவே, சரியாக மாலை நான்கு மணிக்குப் பதில்களை மெயில் அனுப்பி வைத்தார் அவர்.

வாகன நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்துள்ளதே?

‘‘நவம்பர் மாதத்தில் பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் கனரக வாகன விற்பனை, அமெரிக்காவில் 36% அளவுக்குச் சரிவடைந்துள் ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 15% சரிவாகும். அதே சமயம், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இதன் வர்த்தக வாகன விற்பனை வருவாய் 33% உயர்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் விற்பனை யில் ஏற்பட்ட சரிவு குறித்த தகவல் வெளி யானதைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 10% அளவுக்குச் சரிந்து, பங்கு ஒன்றின் விலை ரூ.531.95 ஆகக் காணப்பட்டது.  இதன் போட்டி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலாண்ட் ஆகியவற்றின் விற்பனையும் குறைந்த நிலையில், அவற்றின் பங்கு விலை சரிவைச்  சந்தித்துள்ளது.’’

ஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

பல பங்குகளின் இலக்கு விலை குறைக்கப்பட்டு உள்ளதே?

‘‘தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி இண்டெக்ஸ் இரண்டு மாதமாக இழப்பில் இருந்தது. அது நவம்பரில்  சுமார் நன்கு ஏற்றம் பெற்றது. மேலும், நவம்பரில், அந்நிய முதலீட் டாளர்கள் 891 மில்லியன் டாலரை இந்நிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.  மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இது அதிகமாகும். கச்சா எண்ணெயின் விலை 20%  இறங்கிய நிலையில் ரூபாயின் மதிப்பு 4.4% உயர்ந்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டுள்ளது. இருந்தபோதிலும் அனலிஸ்ட்கள், மூன்றில் இரண்டு பங்குகளின் இலக்கு விலையைக் குறைத்து மதிப்பீடு செய்துள்ளார்கள். கடந்த நவம்பரில், 407 நிறுவனப் பங்குகளின் இலக்கு விலையை 67.6% வரை குறைத்துள்ளார்கள்.’’

பொதுத்துறை வங்கிகள் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்கு விதிக்கப்பட்ட கெடுபிடி ரிசர்வ் வங்கி தளர்த்தப் போவதாகச் சொல்லப்படுகிறதே?

‘‘வாராக்கடன் உள்ளிட்ட பல்வேறு நிதி பிரச்னைகளில் சிக்கியதைத் தொடர்ந்து, ‘பிசிஏ’ எனும் பிராம்ப்ட் கரெக்டிவ் ஆக ஷன்’படி, பொதுத்துறை வங்கிகளுக்குச் சென்றாண்டு, சில கடுமையான விதிமுறை களை அறிவித்தது ரிசர்வ் வங்கி.

இந்தப் பட்டியலில் தேனா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, யுகோ வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி, ஓ.பி.சி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, அலாகாபாத் வங்கி மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 11 வங்கிகள் இடம்பெற்றுள்ளன. 

இந்த நிலையில், அண்மையில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, பி.சி.ஏ விதிமுறைகளைத் தளர்த்த இருதரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கண்காணிப்புக் குழு, வியாழக்கிழமையன்று கூடி, கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட  கட்டுப்பாடுகளில் ஓரளவுக்குத் தளர்த்த முடியுமா என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இதனிடையே நலிவடைந்துள்ள வங்கிகளைக் காப்பாற்ற மத்திய அரசு மூலதனம் அளிக்கவும் உள்ளது.’’

சன் பார்மா பங்கு விலை தொடர்ந்து குறைந்து வருகிறதே?

‘‘இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா நிறுவனர் திலீப் சங்வி, தங்களது வணிக நடைமுறையை மாற்றிக்கொள்வதாக உறுதியளித்தார். எனினும் சன் ஃபார்மாவின் செயல் பாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும், புரோக்கரேஜ் நிறுவனங்களுக்கும் திருப்தி ஏற்படவில்லை.

நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.2,200 கோடி வங்கிக் கடன்கள் குறித்தும், பயனாளிகள் குறித்தும் போதுமான விளக்கம் அளிக்காதது முதலீட்டாளர்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிச்சயமற்ற தன்மை காரணமாகவே சன் ஃபார்மா நிறுவனப் பங்குகள் இரண்டே வர்த்தக நாளில் 11% சரிவை சந்தித்தன.

நிறுவனத்தின் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையை இழந்துள்ள சில முதலீட்டாளர்களும் சன் ஃபார்மா மீதான புகார்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். சங்வி மற்றும் அவரது உறவினர்களின் சொந்த ஃபார்மா விநியோக நிறுவனமான ஆதித்யா மெடிசேல்ஸின் செயல்பாடு களும் கண்காணிக்கப்படுகிறது.’’

பங்குகளை டீமேட்டுக்கு மாற்ற செபி  காலகெடுவை நீடித்துள்ளதே?

‘‘காகித வடிவில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளை டீமேட் கணக்குக்கு மாற்றுவதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு 2019 ஏப்ரல் 1 வரை செபி நீட்டித்துள்ளது. 2018 டிசம்பர் 5 என்றிருந்த காலக்கெடுவை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. நிறுவனப் பங்குகளை டீமேட்டில்தான் வெளிப்படைத் தன்மையோடு பராமரிக்க இயலும் என செபி அமைப்பு நினைக்கிறது. இதன்படி, காகித வடிவில் இருக்கும் பங்குகளை எலெக்ட்ரானிக் வடிவில் அதாவது, டீமேட்டாக மாற்றினால் மட்டுமே அதனை விற்க முடியும் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.’’
 
யெஸ் பேங்க் விலை ஒரே நாளில் 5% அதிகரித்துள்ளதே?

‘‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பின் சேர்மனாக இருந்த டி.எஸ்.விஜயன், யெஸ் பேங்கின் தனிப் பட்ட கூடுதல் இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பாரென்றும், அடுத்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அதற்கு ஒப்புதல் கிடைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் வெளியானதுமே யெஸ் வங்கியின் பங்கு விலை 5% உயர்ந்துவிட்டது. டி.எஸ்.விஜயன் ஐ.ஆர்.டி.ஏ.ஐ அமைப்பின் சேர்மனாகும்முன் எல்.ஐ.சி நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2006-ல் எல்.ஐ.சி-யின் சேர்மனாக இருந்தார். இவரது நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே யெஸ் பேங்கின் பங்கு விலை 5% அதிகரித்தது.’’

ஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்ற வில்லையே!

‘‘புதன்கிழமையன்று நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வுக் கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என முடிவு எடுக்கப்பட்டது. எனவே, ரெப்போ விகிதம் 6.50 சதவிதமாகவும் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6.25 சதவிதமாகவும் தொடரும். அதேசமயம், வரும் நாள்களில் எதிர்பார்த்த பலன்கள் இல்லை என்றால், கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு வட்டி விகிதம் குறைக்கப்பட லாம் என்பதை ரிசர்வ் வங்கி சூசகமாக வெளிப்படுத்தி உள்ளது. 

அதேசமயம், 2019-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 3.9-4.5 சதவிகிதம் என்ற நிலையில் உள்ள பணவீக்கத்தை,  2.7-3.2 சதவிகிதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2020-ம் நிதியாண்டின் முதல் பாதிக்கான பணவீக்கம்  3.8 - 4.2 சதவிகிதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019 - 2020-ம் நிதியாண்டில் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகித மாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத் தில் ஊழியர்களுக்கான அறக் கட்டளையில் நடந்த கடன் மோசடியை எஸ்.எஃப்.ஐ.ஓ கண்டுபிடித்துள்ளதே?

‘‘நிதிச் சிக்கலில் சிக்கியுள்ள ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தில், ஊழியர்களுக்கான அறக் கட்டளை ஒன்று ஏற்படுத்தப்   பட்டிருந்தது. இதில் அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள்தான் அதிகம் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், இந்த அறக்கட்டளை மூலம் கடன் வழங்கியதில்  400 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதை மத்திய பெருநகர விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீவிர மோசடி தடுப்புப் பிரிவு (எஸ்.எஃப்.ஐ.ஓ) கண்டுபிடித்துள்ளது. கடன் வாங்குபவர்களால், அதைத் திரும்பக் கட்ட முடியாது என்று தெரிந்தே அந்தக் கடன் தரப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.’’

சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

‘‘இந்திய பங்குச் சந்தை சாண் ஏறினால் முழம் இறங்குவதாக இருக்கிறது. அதுவும் மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் அதிக இறக்கம் கண்டுள்ளன. இந்தியத் தேர்தல்கள், அமெரிக்க - சீன வர்த்தகப் போர் போன்ற வற்றால் சந்தை இன்னும் இறக்கம்காண வாய்ப்பு இருக்கிறது. அதிக ரிஸ்க்கைத் தாங்கக்கூடிய முதலீட்டாளர் கள் நன்கு இறங்கியிருக்கும் நல்ல நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். மற்றவர்கள் விலகி நின்று வேடிக்கைப் பார்க்கலாம் என்கிறார்கள் முன்னணி அனலிஸ்ட்கள். 

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குறித்த கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்று வதில்லை என முடிவெடுக்கப் பட்டது. சந்தை ஒருபுறம் தொடர்ந்து ஏற்ற இறக்க போக்கையே கொண்டி ருக்கிறது. இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் குறுகிய கால மற்றும் நடுத்தர கால  கடன்  ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே நிதி ஆலோசகர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது. இவை தவிர,  தற்போதைய சூழலில் டைனமிக் பாண்ட் ஃபண்டுகள் மற்றும் எஃப்.எம்.பி-களில் முதலீடு செய்துவிட்டு, பின்னர் சந்தை இறக்கம் கட்டுக்குள் வந்தபிறகு பங்குச் சந்தை, ஈக்விட்டி ஃபண்டுகள் பக்கம் சிறு முதலீட்டாளர்கள் வரலாம் என்பதே நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.”

ஹெச்.சி.எல் டெக் பங்கின் விலை வெள்ளிக் கிழமை ஒரே நாளில் 5% வீழ்ச்சி கண்டிருக்கிறதே?

‘‘ஐ.பி.எம் நிறுவனத்தின் ஏழு தயாரிப்புகளை 180 கோடி டாலருக்கு ஹெச்.சி.எல் டெக் வாங்க முடிவெடுத்துள்ளது. இதில், ஐந்து தயாரிப்புகள் ஏற்கெனவே இரு நிறுவனங்களின் கூட்டுத் திட்டத்தில் இருப்பதால், முதலீட்டாளர்கள் இடையே இந்த டீல் அதிக ஆதரவைப் பெறவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை மட்டும் பங்கின் விலை சுமார் 5% இறக்கம் கண்டது.’’

ஷேர்லக்: சந்தை அதிக ஏற்ற இறக்கம்... சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

ஃபைனான்ஸ் கான்க்ளேவுக்கு வாங்க!

நாணயம் விகடன் நடத்தும் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்  சென்னையில் நடக்கிறது.

இது டிசம்பர் 15, 16 -ம் தேதி நடக்கிறது. பங்குச் சந்தை நிபுணர்கள் சௌரப் முகர்ஜி, ஏ.கே.பிரபாகர், டாக்டர் எஸ்.கார்த்திகேயன், ஜி.மாறன் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்கள் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் ஆர்.ஸ்ரீனிவாசன், யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் வெற்றி சுப்பிரமணியம் ஆகியோர் பேசுகிறார்கள்.

இந்தக் கருத்தரங்கிற்கு முன்பதிவு செய்ய: http://bit.ly/nvconclave

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு