மென்தா ஆயில்
மென்தா ஆயில், ஏப்ரல் 2019 எக்ஸ்பைரி முடிந்தபின், கணிசமான விலைச் சரிவில் தொடங்கியுள்ளது.

பொதுவாக, ஃபியூச்சர்ஸ் வகை வியாபாரத்தைப் பற்றி சொல்லும்போது, அது அடுத்தடுத்த மாதங்களில் என்ன விலையில் வியாபாரம் ஆகலாம் என்பதை அறிய உதவும் ஒரு கருவியாகவும் பார்க்கப்படுகிறது.
ஃபியூச்சர்ஸ் வகை விலை நிர்ணயம் என்பது ‘காஸ்ட் ஆஃப் கேரி’ என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதாவது, ஒரு கான்ட்ராக்ட்டை எவ்வளவு காலம் நாம் அதை வைத்திருக்கப்போகிறோம் என்பதன் அடிப்படையில், ஸ்பாட் விலையுடன் கூடுதல் தொகையானது சேர்க்கப்படும். இந்தக் கூடுதல் தொகையை பிரீமியம் என்று அழைப்போம்.
இது பொதுவான கணக்கீட்டு முறை. சிலசமயம் ஸ்பாட் விலையைவிடக் குறைவாக வியாபாரமானால், அதை டிஸ்கவுன்ட்டில் வியாபாரம் ஆகிறது என்று சொல்வோம். இதை பேக்வேர்டேஷன் என்றும் அழைப்போம். அதுதான் மென்தா ஆயிலில் நடந்து வருகிறது.
ஏப்ரல் கான்ட்ராக்ட் முடியும்போது 1594 என்ற விலையில் வியாபாரமான மென்தா ஆயில் மே மாத கான்ட்ராக்ட் தொடக்கத்தில் 1352 என்ற விலையில தொடங்கியுள்ளது. ஆனாலும், டிரெண்ட் என்று சொல்லும்போது இறங்குமுகமாக இருந்தாலும் ஒரு புல்பேக் ரேலியில் உள்ளது என்று சொல்லலாம்.
சென்ற வாரம் சொன்னது… “மே மாத கான்ட்ராக்ட் மென்தா ஆயில் தற்போது 1406-ஐ உடனடித் தடைநிலையாகவும், அடுத்து 1454-ஐ மிக முக்கியத் தடைநிலை யாகவும் கொண்டுள்ளது. கீழே 1356 உடனடி ஆதரவு ஆகும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மென்தா ஆயிலுக்கு நாம் கொடுத்திருந்த தடை எல்லையான 1454-ஐ தக்கவைத்துக்கொண்டது. புதிய கான்ட்ராக்ட் ஆரம்பிக்கும்போது, 1352 என்ற விலையில் ஆரம்பித்தாலும், பிறகு படிப்படியாக ஏற ஆரம்பித்துள்ளது.
இந்த ஏற்றம் தொடர்ந்து உச்சமாக 1433 என்ற புள்ளியைத் தொடவைத்துள்ளது. இந்த புல்பேக் ரேலி தற்போது வலிமையான தடைநிலைக்கு அருகில் உள்ளது. இனி என்ன செய்யலாம்?
மென்தா ஆயில் தற்போது தொடர்ந்து வலிமையாக ஏறிக்கொண்டிருந்தாலும் அது அடுத்த 1450 என்ற வலிமையான தடைநிலைக்கு அருகில் உள்ளது. இதுவே தடையாக மாறலாம். கீழே 1375 என்பது மிக முக்கிய ஆதரவு ஆகும்.
காட்டன்
காட்டன் விலை வலிமையான தொடர் ஏற்றத்தில் இருந்துவந்து, கடைசியில் 08.04.19 அன்று உச்சமாக 22540 என்ற எல்லையைத் தொட்டபிறகு தொடர்ந்து ஏற முடியவில்லை. கீழே 21890 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டு இயங்கிவந்தது. சென்ற வாரம் சொன்னது..
“காட்டன் ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்தாலும், ஒரு முக்கோண வடிவ உருவ அமைப்பை தோற்றுவித்துள் ளது. இதன் முக்கிய ஆதரவாக 21980-யையும், மேலே 22260-ஐ தடை நிலையாகவும் கொண்டுள்ளது.”
நாம் கொடுத்திருந்த 22260 என்ற தடைநிலையை உடைத்து கொஞ்சம் ஏறி, உச்சமாக 22470-ஐ தொட்டது. அது ஒரு ஸ்பின்னிங் டாப்பாக மாறியதால், ஏற்றம் தடுக்கப்பட்டது.
அதன்பின் கீழே இறங்க ஆரம்பித்து நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 21980 -ஐ மிகப் பலமாக உடைத்து, வேகமான இறக்கத்தைக் காட்டியது. இந்த இறக்கம், குறைந்தபட்ச புள்ளியாக 21520-ஐ தொடவைத்தது. இனி என்ன செய்யலாம்..?
காட்டன் தற்போது இறங்குமுகமாக மாறி உள்ளது. இனி 21350 என்ற எல்லை உடனடி ஆதரவாகவும், மேலே 21850 உடனடித் தடைநிலையாகவும இயங்க வாய்ப்புள்ளது.

சென்னா
சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.
சென்ற வாரம் சொன்னது… “சென்னாவின் வலிமையான இறக்கத்திற்குப் பிறகு, 4330 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 4405 என்ற எல்லையை உடனடித் தடை நிலையாகவும் கொண்டுள்ளது.
சென்னா, நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4330-ஐ உடைத்து 4276 வரை இறங்கியது. அதன்பின் சிறிய ஸ்பின்னிங் டாப்புகளை உருவாக்கி பக்கவாட்டு நகர்வுக்கு மாறியது.
ஆனால், சென்ற வாரம் வியாழனன்று மிக பலமான ஏற்றத்தைக் கொடுத்து தடையான 4330-ஐ உடைத்து ஏறி, உச்சமாக 4460-ஐ தொட்டது. இனி என்ன செய்யலாம்?
சென்னா வலிமையாக ஏறிய நிலையில் 4395 உடனடி ஆதரவாகவும், மேலே 4500 உடனடித் தடைநிலையாகவும் உள்ளது.
தி.ரா.அருள்ராஜன்