கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்காக ‘சுயச்சார்பு இந்தியா’ (Atmanirbhar Bharat) என்ற பெயரில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கொரோனாவுக்காக அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் விவரங்கள் கீழே...

அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்குவிப்புத் தொகை...
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் - ரூ.1,92,800 கோடி.
ரிசர்வ் வங்கியின் பணப்புழக்க அறிவிப்புகள் - ரூ.8,01,603 கோடி.
முதற்கட்டம் (எம்.எஸ்.எம்.இ + வங்கிசாரா நிதி நிறுவனங்கள் + எரிசக்தி) - ரூ.5,94,550 கோடி.
இரண்டாவது கட்டம் (புலம்பெயர் தொழிலாளர்கள், கே.சி.சி., நபார்டு, முத்ரா உள்ளிட்டவை) - ரூ.3,10,000 கோடி.
மூன்றாவது கட்டம் (விவசாயம்) - ரூ.1,50,000 கோடி.
நான்காவது, ஐந்தாவது கட்டம் - ரூ.48,100 கோடி.
மொத்தம் - ரூ.20,97,053 கோடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரூ.20 லட்சம் கோடி என பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டாலும், அரசாங்கத்தால் இந்த ஆண்டு செலவிடப்படவிருக்கும் தொகை மிக மிகக் குறைவே. அரசாங்கம் அறிவித்திருக்கும் திட்டங்களில் பெரும்பாலானவை கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்குக் கடன் வழங்குவது குறித்தும், பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவது தொடர்பாகவுமே இருக்கின்றன. இவற்றில் சில திட்டங்களில் செலவிடப்படும் தொகை முழுவதும் வங்கிகளின் மூலமாகவோ அல்லது நிதி நிறுவனங்களின் மூலமாகவோதான் சென்றடையப் போகிறது. எனவே, மத்திய அரசின் கையிலிருந்து எந்த நிதியும் செல்லாது என்பதால், பெரிய அளவில் நிதிப் பற்றாக்குறை ஏற்படாது.
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் கிட்டத்தட்ட 50 நாள்களுக்கும் மேலாக நம் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊக்குவிப்புத் திட்டங்களால் பொருளாதாரம் மீண்டும் முடுக்கிவிடப்படும் என்று நாம் நினைத்தாலும், பங்குச் சந்தைக்கு இது சாதகமானதல்ல என்றே தோன்றுகிறது. பங்குச் சந்தை ஒரு தூண்டுதலை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, இந்த அறிவிப்புகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தத் தவறிவிட்டன. நிதியமைச்சரின் அறிவிப்புகள் வரத் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தை புள்ளிகள் குறைந்தனவே தவிர, உயரவில்லை. இதற்கு என்ன காரணம்?

இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வெளியிடப் பட்டனவே தவிர, பங்குச் சந்தைகளை மனதில் கொண்டு உருவாக்கப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்புகள் பங்குச் சந்தையை ஈர்க்கவில்லை. என்றாலும், மத்திய அரசின் இந்த அறிவிப்புகளால் நீண்டகாலத்தில் பொருளாதாரத்தில் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த மாற்றத்தின் விளைவாக என்னென்ன துறைகள் நன்மையடைய வாய்ப்பிருக்கிறது, அந்தத் துறைகள் சார்ந்த பங்குகள் எவற்றையெல்லாம் நாம் முதலீடு செய்யப் பரிசீலிக்கலாம் என்று பார்க்கலாம்.
முதற்கட்டம்: எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்/ விநியோக நிறுவனங்கள்/வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/ எரிசக்தி - சிறிய அளவிலான தாக்கம்.
இரண்டாம் கட்டம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்/சிறு விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள்/ முத்ரா/ வாங்கத் தகுந்த விலையிலான வீடுகள் -குறிப்பிட்ட வரம்பிலான தாக்கம்.
மூன்றாம் கட்டம்: உணவு பதப்படுத்துதல்/ விவசாயம்/விநியோகச் சங்கிலி - குறிப்பிட்ட வரம்பிலான தாக்கம்.
நான்காம் கட்டம்: சுரங்கத்துறை/பாதுகாப்புத்துறை/ அணுசக்தித்துறை/விண்வெளி ஆராய்ச்சித் துறை/விமானப் போக்குவரத்துத்துறை - சாதகமான தாக்கம்.
ஐந்தாம் கட்டம்: ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்/ உடல்நலம்/ கல்வி/ பட்டியலிடும் விதிமுறைகள் - சிறிய அளவிலான தாக்கம்.
இப்போதிருக்கும் நிலையில், மத்திய அரசின் அறிவிப்பால் பலனடையப்போகும் நிறுவனப் பங்குகளைக் கண்டறிவது சவால் மிகுந்த காரியம். எனினும், குறுகிய மற்றும் நீண்டகால நோக்கில் பலன் தர வாய்ப்புள்ள ஐந்து பங்குகளை நாம் கண்டறிய முயல்வோம்.
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு நிதி உதவி
சிட்டி யூனியன் பேங்க், ஃபெடரல் பேங்க், டி.சி.பி பேங்க்.
வேலை வாய்ப்பளித்தல் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் இந்தத் துறையின் முக்கியத்துவம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இருக்கிறது. சிட்டி யூனியன் பேங்க், ஃபெடரல் பேங்க், டி.சி.சி பேங்க் போன்றவை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தத் துறையிலேயே சிட்டி யூனியன் பேங்க் நல்ல முறையில் சீராகச் செயல்பட்டுவருகிறது. லாப வரம்பு, வளர்ச்சிகரமான செயல்பாடு அனைத்தும் தொடர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு 175 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. இது, குறுகிய மற்றும் நீண்டகால நோக்கிலான முதலீட்டுக்கேற்ற நல்ல மதிப்பு. எனினும், கடன் தவணைகளைச் செலுத்துவதில் தரப்பட்டிருக்கும் சலுகைகள், குறுகியகாலத்தில் கவலையளிக்கக்கூடும்.
வங்கிசாரா நிதி நிறுவனங்கள்
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ்.
நிதிப் பற்றாக்குறையால் தவிக்கும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு, அதிக அளவிலான நிதி உதவியை ரிசர்வ் வங்கியின் டி.எல்.டி.ஆர்.ஓ (TLTRO-Targeted Long Term Repo Operations) மூலம் அளிக்கும் சிறப்பு நிதித் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, `வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கு முழுமையான உத்தரவாதமுள்ள நிதியுதவி வழங்கப்படும். மேலும், AA ரேட்டிங் மற்றும் அதற்குக் குறைவாக உள்ள கடன் பத்திரங்கள், கமர்ஷியல் பேப்பர்கள் (CPS) உள்ளிட்டவற்றுக்கு 20% உத்தரவாத நிதிக்கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட், எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்குகளுக்குப் பயனளிக்கக்கூடும்.
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பங்கு விலை ரூ.580. எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்கு விலை ரூ.220. இந்த இரண்டு பங்குகளிலும் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யலாம்.
பாதுகாப்புத்துறை
ஆஸ்ட்ரா மைக்ரோவேவ் (Astra Microwave), சீகா இன்டர்ப்ளான்ட் (SIKA Interplant).
பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உற்பத்தியில், அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக உயர்த்தியிருப்பது இந்தத் துறைக்கு அதிக அளவிலான முதலீட்டை ஈர்க்கக்கூடும்.
உலக அளவில் பாதுகாப்பு உபகரணங்களை அதிக அளவில் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நேரடி அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்தியிருப்பது நம் நாட்டின் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்புக்கு அதிக உந்துதலை அளிக்கக்கூடும். இறக்குமதி செய்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ள போர்க்கருவிகள் மற்றும் தளவாடங்களின் உற்பத்தியை உள்நாட்டிலேயே தொடங்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. இந்த உந்துதல், இந்தத் துறையின் வளர்ச்சிக்குச் சாதகமாகவே இருக்கும். ஆஸ்ட்ரா மைக்ரோவேவ் நிறுவனப் பங்கின் தற்போதைய விலை ரூ.66.95. சீகா இன்டர் ப்ளான்ட் நிறுவனப் பங்கின் தற்போதைய விலை ரூ.178. இவற்றை நீண்டகால நோக்கில் வாங்கலாம்.
இவை தவிர, சுரங்கம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவதற்காக 500 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படவிருப்பதை கவனிக்க வேண்டும். விமான நிலையங்களை அதிகரிப்பதன் மூலம், பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை மேலும் விரிவடைய வாய்ப்பிருப்பதால் இது சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் மீதும் கவனம் செலுத்தலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள், பொருளாதார மந்தமான நிலையைப் போக்க உதவுவதுடன், உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருப்பதற்கான பாய்ச்சலை ஏற்படுத்த உதவும். இந்த வழிமுறையைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்வோம் என நம்புவோம்.