
முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!
முடிந்த வாரத்தில் இந்தியப் பங்குச் சந்தை சிறிது இழப்போடு நிறைவடைந்திருக்கிறது. நான்கு நாள்கள் இறக்கத்தால் அதிக பங்குகள் ஸ்டாப்லாஸ்களைத் தாண்டியதால், பாதுகாப்புக்காக வர்த்தகர்கள் விற்று வெளியேறினார்கள். இதனால் சந்தையின் போக்கு தலைகீழாக மாறியது. சீனாவில் வைரஸ் தாக்குதல், நிறுவனங்களின் ரேட்டிங் குறைப்பு, பணவீக்கம் அதிகரிப்பு, தொழில்துறை உற்பத்தி குறைந்தது எனப் பல்வேறு பாதகமான விஷயங்கள் இதற்குக் காரணமாக அமைந்தன.

மேலும், மூன்றாவது காலாண்டில் நிறுவனங்களின் வருமானமும் சுமாராகவே இருந்தது. பங்குச் சந்தையின் போக்கை இறக்கத்துக்குக் கொண்டுவர இந்தக் காரணங்களே போதுமானவையாக உள்ளன. எனவே, பங்குச் சந்தை இறங்க ஆரம்பித்ததும் நீண்டகால முதலீட்டாளர்கள் வெளியேறினார்கள். குறிப்பாக, மோசமான காலாண்டு நிதிநிலை முடிவுகளைக் கொடுத்த, வருமான அதிகரிப்பு இல்லாத மற்றும் இழப்பைச் சந்தித்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் வெளியேறினார்கள். சில நிறுவனங்கள் நல்ல நிதிநிலை முடிவுகளைத் தந்ததால், இந்த இறக்கம் சந்தை முதலீட்டாளர்களின் மனநிலையைப் பெரிதாக பாதிக்கவில்லை.

வங்கிப் பங்குகள் தொடர்ந்து மோசமாகச் செயல்பட்டன. அது சந்தையின் போக்கில் மந்தநிலையை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்திகள் குறையவும், சந்தையில் தேவை அதிகரிக்கத் தொடங்கியது. ஒருவேளை உலக அளவிலான சந்தையின் ஏற்றப்போக்குடன் சேர்ந்து, இந்தியச் சந்தையும் ஏற்றத்தின் போக்குக்கு மாற்றியிருக்கலாம்.
நிஃப்டி 12000 புள்ளிகள் வரம்புக்குக் கீழே சென்றதுமே சுதாரித்துக்கொண்டு மேலேறத் தொடங்கியிருக்கிறது. இது, ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளையும் உள்ளடக்கிய பரந்த அளவிலான செயல்பாடாக இருந்ததால் சந்தையின் சென்டிமென்ட் சற்று சரியாகியிருக்கிறது. இனிவரும் வாரங்களில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் விலை, செய்தி அல்லது சந்தையின் நகர்வு காரணமாக உயர வாய்ப்பிருக்கிறது.
மருந்து விலை அதிகரிப்பால், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் லாபமடைந்து வருகின்றன.

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் (AARTIIND)
தற்போதைய விலை ரூ.1,040.55
வாங்கலாம்.
ரசாயன வணிகத்திலுள்ள இந்த நிறுவனம், சீனாவின் கொரானா வைரஸ் பிரச்னையால் லாபம் அடைவதாக இருக்கிறது. டிசம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததை அடுத்து பங்கின் விலை ஏற ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில், இந்தப் பங்கை புதிய முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். பங்கின் விலை பிரேக்அவுட் ஆகியிருக்கிறது.
தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,010 வைத்துக்கொள்ளவும். பங்கின் விலை குறுகியகாலத்தில் ரூ. 1,100-க்கு உயர வாய்ப்பிருக்கிறது.

ஐ.பி.சி.ஏ லெபாரட்டரீஸ் (IPCALAB)
தற்போதைய விலை ரூ.1,454.70
வாங்கலாம்.
இந்தியாவைச் சேர்ந்த மருந்து தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனப் பங்குகளுக்கு அண்மைக் காலத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் ஒன்று ஐ.பி.சி.ஏ லெபாரட்டரீஸ் நிறுவனப் பங்கு. இந்தப் பங்கின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. பங்கின் விலை சார்ட், பங்கின் விலை இன்னும் ஏற்றம் காணும் என்பதைக் குறிப்பிடுகிறது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.1,400 வைத்துக்கொள்ளவும். பங்கின் விலை குறுகியகாலத்தில் ரூ. 1,600-க்கு உயர வாய்ப்பிருக்கிறது.
ஐ.ஓ.எல் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் (IOLCP)
தற்போதைய விலை ரூ.235.70
வாங்கலாம்.
மருந்து விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால், பெரும்பாலான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் லாபமடைந்து வருகின்றன. அவற்றில் அதிகம் லாபம் அடைந்திருப்பது ஐ.ஓ.எல் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம். இதைத் தொடர்ந்து பங்கின் விலை சார்ட்டில் சிறப்பான பிரேக்அவுட் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பங்கை நீண்டகால முதலீட்டுக்காக தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.210 வைத்துக்கொள்ளவும்.
டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.