Published:Updated:

பங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

முதலீடு

பிரீமியம் ஸ்டோரி

ந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு பங்கின் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி என்பது சாதாரண சாதனையல்ல. கடந்த 42 ஆண்டுக்காலத்தில் இப்படிப்பட்ட ஓர் இலக்கை எட்டியிருப்பது பிரமாண்ட சாதனை. ஒரு நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையை, விற்பனையிலிருக்கும் அந்த நிறுவனப் பங்குகளின் மொத்த எண்ணிக்கையால் பெருக்கிக் கிடைக்கும் தொகைதான் அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு. ரிலையன்ஸ் நிறுவனத்தால் இந்தச் சாதனை எப்படி நிகழ்த்த முடிந்தது என்று பார்ப்போம்.

பங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

பாலியஸ்டர் டு தொலைத்தொடர்பு

1966-ம் ஆண்டு, ஒரே ஒரு பணியாளருடன் வெறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டதுதான் ரிலையன்ஸ். அதன் அப்போதைய மதிப்பு 130 அமெரிக்க டாலர். அதன் புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ) 1977-ம் ஆண்டு நடந்தது. அன்று சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வோர் இரண்டரை ஆண்டுக்காலத்துக்கும் அந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு இரட்டிப்பாகிக்கொண்டே வந்திருக்கிறது. அதன் பங்கு மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்வதால், அதில் முதலீடு செய்தவர்களின் தொகையும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.

ரிலையன்ஸின் வளர்ச்சியைக் காணச் சற்று பின்னோக்கிச் செல்வோம். முதலில், ஓர் ஆலையாகத் தொடங்கிய நிறுவனம், 18 மாதங்களில் பெரிய பாலியஸ்டர் உற்பத்தித் தொழிற்கூடமாக விரிவடைந்தது. தொடர்ந்து வளர்ந்து 1991-ம் ஆண்டில், ஹஸிராவில் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பாலியஸ்டர் உற்பத்திக்கூடமாக ரிலையன்ஸ் நிறுவனம் உயர்ந்தது.

இந்த நிறுவனத்தின் முக்கிய மைல்கல்லான 2000-ம் ஆண்டை எட்டிய பிறகு, அந்த நிறுவனத்தின் செயல்பாட்டுத்திறனுக்கு இன்னொரு வெற்றி, மூன்றாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய சுத்திக்கரிப்பு ஆலை. அடுத்ததாக, 2002-ம் ஆண்டில் தொலைத் தொடர்புத்துறைக்குள் கால்பதித்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் இன்னொரு முக்கியமான ஆண்டாக 2004 அமைந்தது. அந்த ஆண்டில்தான் `ஃபார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு மற்றும் முதல் இந்திய தனியார் நிறுவனம்’ என்ற பெருமையை ரிலையன்ஸ் பெற்றது. மேலும், சர்வதேச ரேட்டிங் நிறுவனங்களான மூடிஸ் (Moody’s), ஸ்டாண்டர்டு அண்ட் புவர்’ஸ் ஆகியவற்றால் ரேட்டிங் செய்யப்பட்ட முதல் தனியார் நிறுவனம் ரிலையன்ஸ்தான். 2005-ம் ஆண்டில் ரிலையன்ஸ், தன் வணிகத்தை எரிசக்தி விநியோகம், நிதிச் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்புத்துறை என வெவ்வேறு நிறுவனங்களாகப் பிரித்து நடத்தத் தொடங்கியது.

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

ரிலையன்ஸை அதிவேகமாக வளரவைத்த முகேஷ்

2002-ம் ஆண்டு திருபாய் அம்பானி காலமான பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் முகேஷ் - அனில் அம்பானி சகோதர்களின் கைகளுக்கு வந்தது. சகோதர்களுக்கிடையே சில பல சச்சரவுகள் எழுந்தாலும், ரிலையன்ஸ் நிறுவனம் ஜெட் வேகத்தில் முன்னேறவே செய்தது. அதற்குக் காரணம், முகேஷின் அதிசயிக்கத்தக்க நிர்வாகம்.

ஜியோவின் அறிமுகம், மொபைல்போன் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அதிகரித்துவரும் மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிவேக இணைப்பு மற்றும் மலிவான திட்டங்களின் மூலம் கவர்ந்திழுப்பதுதான் இதன் குறிக்கோளாக இருந்தது.

2009-ம் ஆண்டில் ரிலையன்ஸ் எரிசக்தித் துறையில் நுழைந்தது. கிருஷ்ணா கோதாவரி திருபாய்-6 (KGD-6) தளத்தில், ஹைட்ரோகார்பன் தயாரிப்பில் மிகச் சிறப்பாக ஈடுபட்டது. ஆழ்கடலிலிருந்து எரிபொருள்கள் எடுக்கும் புராஜெக்டை முழுக்க முழுக்க சுயமாகக் கட்டமைத்து, மிகத் துரிதமாகச் செயல்பட்டது. உலகிலேயே இதுவரை யாரும் கண்டிராத வகையில், சப்ளையர்களுடன் இணைந்து வணிக உத்தியில் சாதனை படைத்தது.

சுத்திகரிப்பு டு சில்லறை வணிகம்

`ஒவ்வோர் இந்தியரின் அன்றாட வாழ்விலும் ஒரு பங்களிப்பைத் தர வேண்டும்’ என்ற துடிப்பே ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சில்லறை வணிகத்திலும் ஈடுபடத் தூண்டியது. 2014-ம் ஆண்டில் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகத்தில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. ரிலையன்ஸ் ஃப்ரெஷ், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலையன்ஸ் ஃபுட்வேர், ரிலையன்ஸ் ஹைப்பர் போன்றவற்றை இந்திய வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகக்கூடிய விதத்தில் அமைத்தது. இத்துடன் ரிலையன்ஸின் சில்லறை வர்த்தகப் பயணம் முடிந்து விடவில்லை. `வாங்கக்கூடிய விலை; அதிவேக இணையத் தொடர்பு’ என்பதே இந்திய மொபைல்போன் பயனாளர்களை மொத்தமாக அறுவடை செய்வதற்கான வாய்ப்பு என்பதை உணர்ந்துகொண்டது ரிலையன்ஸ். ஜியோ (வாழ்க்கையை வாழ்) மூலமாக அதைச் சாத்தியமாக்கி, டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தியது.

அனில் அம்பானி
அனில் அம்பானி

2017-ம் ஆண்டு 40-வது ஆண்டைத் தொட்டது ரிலையன்ஸ். ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம்போலத் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ், உலகிலேயே மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது. 2019-ம் ஆண்டில் தனது பன்முகத் தன்மைவாய்ந்த தொழில் செயல்பாடுகள் காரணமாக, `ரூ.9 லட்சம் கோடி பங்குச் சந்தை மூலதன மதிப்புடைய முதல் இந்திய நிறுவனம்’ என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பலம்

`பாலியஸ்டர் புராஜெக்ட்’ ரிலையன்ஸின் திறமையை நிரூபிக்கிறது என்றால், `ஹைட்ரோ கார்பன் புராஜெக்ட்’ அதன் வெற்றி மகுடத்தில் முக்கியமான ஓர் அங்கம். மேம்பட்ட செயல்திறன் மற்றும் சிக்கனமான செலவை எதிர்பார்க்கும் நிறுவனங்கள், சப்ளையுடன் ஒருங்கிணைந்த வணிக உத்தியைத் தொடர்கின்றன. அதுபற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

பொதுவாக, மூலப்பொருள்கள் உற்பத்தி, அதிலிருந்து பொருள்களைத் தயாரித்தல், இறுதியாகப் பொருள்களை விநியோகித்தல் என்பதே வணிக உத்தி. ஆனால், ரிலையன்ஸில் இந்த உத்தி சப்ளையர்களுடன் இணைந்திருந்தது. இதில், பொருள் விற்பனைச் சங்கிலியின் மையப்புள்ளியாக விநியோகத்தை எடுத்துக் கொண்டால், பொருள்களை உற்பத்தி செய்தல், மூலப்பொருள்களை விநியோகம் செய்தல் ஆகியவை இவற்றுக்குப் பிறகு ஒருங்கிணைந்து நடக்கும். இதுதான், `ஒருங்கிணைந்த பின்னோக்கிய வணிக உத்தி’ (Backward Integration).

இதில் மூலப்பொருள்கள் விநியோகம், இந்தச் சங்கிலியின் இறுதியில் மிகச்சிறிய பகுதியாக இருக்கும். ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரை, பாலியஸ்டர் மற்றும் ஹைட்ரோகார்பன் புராஜெக்ட்டில் பின்னோக்கிய வணிக உத்தி சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் பொருள்களின் விநியோகத்தில் இறங்கியது. பிறகு, தேவைக்கேற்ப மூலப்பொருள்களையும் சப்ளை செய்தது. இதனால் ரிலைன்ஸின் செலவு குறைந்து, வருமானம் அதிகரித்தது.

சில்லறை விற்பனையில் அதிரடி

ஏறக்குறைய 130 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு தேசத்தில் உடைகள், வீட்டுப் பயன்பாட்டுக்கான உள்நாட்டு நுகர்வுப் பொருள்கள், காலணிகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்களுக்கான தேவை மகத்தான விற்பனை வாய்ப்பை வழங்குகிறது. எனவே, `சில்லறை விற்பனை’ என்பது ரிலையன்ஸ் போன்ற ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இயல்பான ஒன்றாகவே இருந்தது. இதை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என நம்புகிறது ரிலையன்ஸ்.

பெட்ரோ கெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு வணிகத்திலிருந்து சில்லறை விற்பனைத்துறை மிகவும் வேறுபட்டதாகத் தெரிந்தாலும், தேவையின் அளவைப் பொறுத்து வருவாய் அதிகரிப்பதாக இல்லாவிட்டாலும்கூட இது ஒரு நிலையான வணிகத்தளமாக இருக்கிறது. இதன் வெற்றியின் காரணமாக, பொம்மைகள் விற்பனையில் உலகின் மிகப் பழைமையான `ஹம்லேஸ்’ சில்லறை வர்த்தக நிறுவனத்தை ரொக்கப் பணம் கொடுத்துக் கையகப்படுத்தவும் குழந்தைகளுக்கான பொருள்களை விற்பனைத் துறைக்குள் நுழைக்கவும் ரிலையன்ஸால் முடிந்தது. இது அதிக வருவாயைத் தந்து, நிறுவன மூலதனத்தை அதிகரிக்கிறது; நிறுவனத்தின் மதிப்பீட்டையும் உயர்த்துகிறது.

தகவல்தொடர்புத்துறை

ஜியோவின் அறிமுகம், மொபைல்போன் உலகில் புரட்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அதிகரித்துவரும் மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிவேக இணைப்பு மற்றும் மலிவான திட்டங்களின் மூலம் கவர்ந்திழுப்பதுதான் இதன் குறிக்கோளாக இருந்தது. இந்தத் துறையில் தாமதமாகக் கால்பதித்த ஜியோ, மிகக் குறுகிய காலத்தில் ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் போன்ற நன்கு வேரூன்றிய நிறுவனங்களுக்கே சவால்விடுமளவுக்கு வளர்ந்தது. விரைவிலேயே, `லாபகரமான மொபைல் சேவை வழங்கும் இந்திய நிறுவனம்’ என்ற பெயரைச் சம்பாதித்தது. அறிமுகப்படுத்தப்பட்ட மூன்றாண்டு காலத்துக்குள்ளேயே 33.1 கோடி சந்தாதாரர்களைப் பெறுமளவுக்கு வளர்ந்து நிற்கிறது. சவாலானதாகத் தோன்றினாலும், சொல்வதற்கு இதிலும் சுவாரஸ்யமான சாதனை இருக்கிறது.

பங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா?

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தத் துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 45.4% வளர்ச்சியையும், செயல்பாட்டு வருவாய் 33.7% வளர்ச்சியையும் எட்டியிருக்கிறது. இந்த நெட்வொர்க்கில் நிறைய சந்தாதாரர்கள் இணைந்துள்ளபோதிலும், ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU-Average Revenue Per User) தொடர்ந்து ஏழாவது காலாண்டாக இறக்கத்தில் உள்ளது. இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், குறைந்த வருவாய் தரக்கூடிய சந்தாதாரர்களின் எண்ணிக்கைதான் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. இது, முன்னேற்றப் பாதையில் நடைபோடும் இந்த நிறுவனத்துக்குச் சரியானதாக இருக்காது. சந்தாதாரர்களுக்கான திட்டங்களை இந்த நிறுவனம் மாற்றிவருவது இது போன்ற சந்தாதாரர்களைக் களையெடுப்பதற்காகவும் இருக்கலாம். இதன் மூலம் குறைந்த செலவுள்ள சந்தாத் திட்டங்களுக்கான கடும் போட்டி குறைந்து, முதலிடத்தை நோக்கிய வளர்ச்சி வேகமாகத் தூண்டப்படும். அடுத்ததாக, 5ஜி அலைக்கற்றைச் சேவைகள் வரவிருப்பதால், வளர்ச்சி மற்றும் லாபத்துக்கான சவால்கள் ஓரளவு குறையக்கூடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெட்ரோகெமிக்கல் வணிகத்தில் இறக்கம்

`ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டிருக் கிறது’ என்பதற்கு பெட்ரோ கெமிக்கல் பொருள்களுக்கான தேவை குறைந்திருப்பதே சாட்சி. இரண்டாம் காலாண்டு முடிவில் இந்தத் துறையில் 11.9% வருமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோ கெமிக்கல் பொருள்களின் விலை குறைந்திருப்பதுடன், தேவையும் குறைந்ததால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ரிலையன்ஸின் மொத்தச் சுத்திகரிப்பு லாப வரம்பு (GRM) ஒரு பீப்பாய்க்கு 9.4 டாலராக இருக்கிறது. இது, சிங்கப்பூர் ஜி.ஆர்.எம்-உடன் ஒப்பிடுகையில் அதிகம்.

`ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது’ என்பதற்கு பெட்ரோ கெமிக்கல் பொருள்களுக்கான தேவை குறைந்திருப்பதே சாட்சி. இரண்டாம் காலாண்டு முடிவில் இந்தத் துறையில் 11.9% வருமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

நுகர்வு குறைந்தபோதிலும் இரண்டாம் காலாண்டில் சில்லறை வர்த்தக வருவாய் 27% அதிகரித்துள்ளது. நிகர லாபம் 55.8% அதிகரித்திருக்கிறது. சில்லறை வர்த்தகத்தில் இரண்டாம் காலாண்டில் மட்டும் 337 விற்பனையகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த நிறுவனத்துக்கு வளர்ச்சிமீது இருக்கும் உந்துதலையும், தீவிர கவனத்தையும் காட்டுகிறது.

எதிர்பார்ப்பு

இவை அனைத்திலுமிருந்து ரிலையன்ஸ் பங்கு முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்வது என்ன..? ரிலையன்ஸ் நிறுவனம், தனித்தனி நிறுவனங்களாகப் பன்முகப்படுத்தப்பட்டிருப்பது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்ல பலன் தந்்திருப்பதை அறிந்துகொள்ளலாம். தொலைத் தொடர்புத்துறை லாபகரமான முயற்சியாக இருக்கலாம். ஆனால், ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) குறைந்திருப்பது கவலைக்குரிய ஒன்று. ஆனால், தொலைபேசியில் பேசுவது குறைந்து, இணையப் பயன்பாடு அதிகரிப்பதென்பது தொழில் துறை மட்டத்திலேயே சவாலை ஏற்படுத்துவது. பெட்ரோ கெமிக்கலைப் பொறுத்தவரை, மொத்தச் சுத்திகரிப்பு லாப வரம்பு வலுவாக இருக்கிறது. ஆனால், விலையிலிருக்கும் ஏற்ற இறக்கம், குறைவான தேவை போன்ற காரணிகள் இன்னும் சில காலத்துக்கு வளர்ச்சி வாய்ப்பைக் குறைக்கக்கூடும்.

ஒரு நல்ல முதலீட்டாளர் சாதகமான கார்ப்பரேட் செயல்பாடு மற்றும் பங்கு விலை ஏற்றம் குறித்து மட்டுமே கவலைப்பட வேண்டும். பங்கு விலை ஏற்றமானது, பங்குச் சந்தை மூலதனம் அதிகரிப்பதை வரையறுக்கிறது. நிறுவனத்தின் பங்குக்கு முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுக்க விரும்புவதைக் குறிக்கிறது. இதன் காரணமாக பங்கு விலை 10%-15% வரை அதிகரிக்க வாய்ப்பி ருக்கிறது. எனவே, இந்த நிறுவனப் பங்குகளை குறுகியகால இலக்காக வாங்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு