இந்தியப் பங்குச் சந்தையை சமீபத்தில் உலுக்கிய என்.எஸ்.இ முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் இருவர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.
தேசியப் பங்குச் சந்தை என்ற என்.எஸ்.இ-யில் 2013 - 2016 காலகட்டத்தில் சி.இ.ஓ-வாகப் பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமானதும். அது தொடர்பாக வழக்குப் பதிவு விசாரணை தொடங்கப்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
விசாரணையில் ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை விதிமுறைகளுக்கு மாறாக நிறுவனத்தின் ஸ்ட்ராட்டஜிக் ஆலோசகராக நியமித்தது மட்டுமல்லாமல், அவருக்கு அதிகமான ஊதியமும், தொடர்ந்து தலைமை செயல்பாட்டு அதிகாரியாகப் பதவி உயர்வும் வழங்கியிருக்கிறார். இதோடு நிற்காமல் பங்குச் சந்தையில் ஈடுபடும் தரகர்களில் ஒரு தரப்பினருக்கு முன்கூட்டியே தகவல்களைப் பகிரும் விதமாக கோ-லொகேஷன் என்ற முறையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
இதனால் அவரும் ஆதாயம் அடைந்ததுடன், ஒருதரப்பினர் மட்டும் பங்குச் சந்தையில் லாபம் பார்த்தனர். இந்த முறைகேடு தொடர்பான விசாரணையில் அனைத்து முடிவுகளையும் இமயமலையில் தான் சந்தித்த சாமியார் சொல்லிதான் எடுத்தேன் என்றும் சித்ரா ராமகிருஷ்ணா கூறியிருந்தார்.

என்.எஸ்.இ முறைகேடு தொடர்பாக ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணனும், ஆனந்த் சுப்ரமணியனும் கைது செய்யப்பட்டனர். தற்போது நீதிமன்றக் காவலில் இருவரும் உள்ள நிலையில் இவர்கள் மீது சி.பி.ஐ குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
இன்னும் இந்த விவகாரத்தில் யார் அந்த இமயமலை சாமியார் என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.