தங்கம், வெள்ளி, காப்பர், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் போக்கு குறித்துப் பார்ப்போம்.
தங்கம் (மினி)
உலகப் பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவைச் சந்திக்கவிருக்கிறது. ஐ.எம்.எஃப் எனும் பன்னாட்டு நிதி நிறுவனம், உலகப் பொருளாதாரம் பூஜ்ஜியத்துக்குக் கீழாகவே இருக்கும் என்று ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் முக்கியப் பொருளாதாரத்தை அடக்கிய நாடுகளில் அமெரிக்கா -7% அளவுக்கும், மற்ற ஐரோப்பிய நாடுகள் -6% அளவுக்கும் பின்னுக்கு வரக்கூடும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளது. இவ்வாறு பொருளாதாரம் பின்தங்கிப் போகும்போது, தங்கத்தில் முதலீடு முன்னுக்கு வருகிறது. எனவே, தங்கம் இன்னும் வலிமை காட்டியே வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சென்ற வாரம் சொன்னது... “தங்கம் உச்சத்திலிருந்து இறங்க ஆரம்பித்தநிலையில், உடனடி ஆதரவு 45600. தடைநிலை 46140.’’
தங்கம் சென்ற வாரம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 45600-ஐ கொஞ்சம் அசைத்துப் பார்த்து, 45100 வரை இறங்கியது. அதன்பிறகு மீண்டும் ஒரு வலிமையான ஏற்றத்துக்குத் தயாரானது. சென்ற திங்கள் மற்றும் செவ்வாய் அன்று கொஞ்சம் தடுமாற்றத்துடனேயே நகர்ந்தாலும், புதன் அன்று வலிமையான ஏற்றத்துக்கு மாறியது. இந்த ஏற்றம் உச்சமாக 46290 என்ற புள்ளியைத் தொடவைத்தது. பிறகு மீண்டும் ஏற ஆரம்பித்து வியாழன் அன்று 46680 என்ற உச்சத்தைத் தொடவைத்தது. இன்னும் அடுத்தகட்ட ஏற்றத்துக்கு முயன்று வருகிறது. தங்கம் தொடர்ந்து ஏறும் நிலையில், அடுத்து 47250-ல் வலிமையாகத் தடுக்கப்பட வாய்ப்புள்ளது. கீழே 46400 என்ற எல்லை உடனடி ஆதரவாக உள்ளது.
Also Read
வெள்ளி (மினி)
வெள்ளி, தற்போது தங்கத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்குச் சற்றே பின்தங்கியுள்ளது. தங்கம் ஏறிக்கொண்டிருந்த வேளையில் ஒரு பக்கவாட்டு நகர்விலேயே உள்ளது.

சென்ற வாரம் திங்கள் மற்றும் செவ்வாய் அன்று தங்கம் இறங்கியதைப்போலவேதான் வெள்ளியும் இறங்கியது. இந்த இறக்கம் 43187 என்ற புள்ளியில் ஆரம்பித்து, தினமும் இறங்குமுகமாகவே இருந்துவந்தது. ஆனால், செவ்வாய் அன்று மிக பலமாக இறங்கி 41519 என்ற புள்ளியைத் தொட்டது. அடுத்து புதன் அன்றும் மிக பலமான இறக்கத்தின் மூலமாக 40760-ஐ தொட்டாலும், முடிவில் ஒரு டோஜி அமைப்பைத் தோற்றுவித்துள்ளது. அதன் பிறகு ஏறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டாலும், இன்னும் சிரமப்பட்டுக்கொண்டுதான் உள்ளது.
வெள்ளி ஏப்ரல் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி ஜூன் கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்வோம். வெள்ளி தற்போது 42120 என்ற ஆதரவையும், மேலே 44040 என்ற தடைநிலையையும் கொண்டிருக்கிறது.
கச்சா எண்ணெய் (மெகா லாட்)
கடந்த ஏப்ரல் எக்ஸ்பைரியில், கச்சா எண்ணெய் -37 டாலர்வரை இறங்கி புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. இன்னும் வலிமை குன்றியே காணப்படுகிறது.

கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 2230-ஐ தக்கவைத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தது. கச்சா எண்ணெய் உலக வரலாற்றில் இப்படி தேவை குறைந்து, விற்பவரே காசும் கொடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த இறக்கத்தால் கீழே 848 என்ற எல்லையைத் தொட்டு தற்போது மீண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் மிகப்பெரிய இறக்கத்துக்குப் பிறகு தடைநிலையாக 1450-ஐயும், கீழே ஆதரவாக 1100-ஐயும் கொண்டுள்ளது.

காப்பர்
(மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும்.)
சென்ற வாரம் சொன்னது... ‘‘காப்பர் தற்போது 405.50 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 397-ஐ ஆதரவாகவும் கொண்டுள்ளது.’’
ஏப்ரல் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி மே மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்ளலாம். தற்போது ஆதரவாக 398-ஐயும், தடைநிலையாக 403-ஐயும் கொண்டுள்ளது.