தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர், மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.
தங்கம் (மினி)
தங்கம் வார வரைபடத்தின் அடிப்படையில் தொடர்ந்து ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. 2019 செப்டம்பர் முதல் தற்போது டிசம்பர் வரை ஒரு குறுகிய எல்லைக்குள் தங்கம் சுழன்றுவருகிறது. மெழுகுவத்தி அமைப்பில் சொல்வதாக இருந்தால், ஒவ்வொரு வாரமும் ஒரு ஸ்பின்னிங் டாப் வகை மெழுகுவத்தியை உருவாக்கிவருகிறது. ஆனால், தினசரி வரைபடத்தில் பார்க்கும்போது, தங்கத்தின் விலை நகர்வு கீழே 37400-ஆகவும், மேலே 38600-ஆகவும் உள்ளது. உலகச் சந்தையில் அரசியல் நிலவரம் தற்போது எதிர்மறையாகவே இருந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவி நீக்கத்துக்கான முயற்சி என்பது ஓர் எதிர்மறையான சூழல்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதங்கம் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 37380-ஐ தக்கவைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாளும் மெள்ள மெள்ள மேல்நோக்கி நகர்ந்தது. தொடர்ந்து திங்கள் முதல் வியாழன் வரை ஏற்றம் தொடர்ந்தது. வியாழன் அன்று நாம் கொடுத்திருந்த தடைநிலையான 37880 என்பது உடைக்கப்பட்டு 38140 வரை ஏறியது.

தற்போது தங்கம் 37780 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டிருக்கிறது. உடைத்தால் கீழ் எல்லையை நோக்கி நகரலாம். மேலே 38250 என்பது வலிமையான தடைநிலை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வெள்ளி (மினி)
சென்ற வாரம் வெள்ளி, தங்கம் நகர்ந்த அதே பாதையிலேயே நகர்ந்து வந்திருக்கிறது.
வெள்ளி நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 43650 என்ற புள்ளியைத் தக்க வைத்துக்கொண்டது. ஆனால், தடைநிலையான 44720-ஐ உடைத்து ஏற ஆரம்பித்தாலும், 37805-ல் தடுக்கப்பட்டிருக்கிறது. வெள்ளி நன்கு ஏறி, பிறகு 44950-ஐ உடனடித் தடைநிலையாகவும், அதற்குமேல் 45250-ஐ மிக வலிமையான தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது. கீழே 44300 என்பது ஆதரவு நிலை.
கச்சா எண்ணெய், நாம் கொடுத்த தடைநிலையான 4270ஐ மிக வலிமையாக உடைத்து, 4374 என்ற உச்சத்தைத் தொட்டது.
கச்சா எண்ணெய்
(மெகா லாட்)
கச்சா எண்ணெய் மினி 18.12.19 தேதியுடன் முடிவுபெற்றுவிட்டது. மேலும், மினி லாட் வியாபாரம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இனி ஜனவரி மெகா லாட் கான்ட்ராக்ட்டுக்கு மாறுகிறோம். லாட் அளவு 100 பேரல்கள். சிறு வியாபாரிகள் இதில் அதிக ரிஸ்க் இருப்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

சென்ற வாரம் கச்சா எண்ணெய், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 4150-ஐ தக்கவைத்துக்கொண்டது. இதுவரை குறுகிய எல்லைக்குள் வியாபாரம் ஆன கச்சா எண்ணெய், நாம் கொடுத்த தடைநிலையான 4270ஐ மிக வலிமையாக உடைத்து, 4374 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன் பின் தற்போது பக்கவாட்டு நகர்வில் உள்ளது.
கச்சா எண்ணெய் நன்கு ஏறிய நிலையில், 4290 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 4440 என்ற எல்லையைத் தடைநிலையாகவும் கொண்டிருக்கிறது.
காப்பர்
மெகா – லாட் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, கவனமாக வியாபாரம் செய்யவும். காப்பர், நாம் கொடுத்த ஆதரவுநிலையான 440-ஐ தக்கவைத்துக்கொண்டு, மேல்நோக்கி நகர ஆரம்பித்தது. இந்த ஏற்றம் 446.50 வரை தொடர்ந்தது. ஆனால், நாம் கொடுத்த தடைநிலையான 447-ல் தடுக்கப்பட்டிருக்கிறது.
காப்பர், இன்னமும் 447 என்ற வலிமையான தடைநிலையைக் கொண்டிருக்கிறது. கீழே 440.50 ஆதரவாக உள்ளது.
மென்தா ஆயில்
மென்தா ஆயில் மேலே தடைநிலைகளைச் சமமாகக்கொண்டிருப்பதால், ஒரு முக்கோண வடிவ உருவமைப்பு உருவானதைப் பார்த்தோம். இந்த அமைப்பு வரும் நாள்களில் மிக வலிமையான நகர்வுக்குத் தயாராகிறது என்றும் சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தோம். கடந்த இரண்டு மாதங்களில் மென்தா ஆயில் மூன்று முறை குறிப்பிட்ட உச்சத்தைத் தொட்டுவிட்டு திரும்பியிருக்கிறது. அதாவது, 13.11.19 அன்று 1317 என்ற எல்லையையும், 03.12.19 அன்று 1320 என்ற எல்லையையும், அதற்கு அடுத்து 17.12.19 அன்று 1321 என்ற எல்லையையும் தொட்டிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளிலும் மென்தா ஆயில் 1320 என்ற எல்லைக்கு அருகில் வலிமையாகத் தடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம். அந்த மூன்று புள்ளிகள்தான் முக்கோண வடிவத்தின் மேல்பகுதியை உருவாக்கி, வலிமையான தடைநிலையையும் உருவாக்கியிருக்கின்றன.
சென்ற வாரம் மென்தா ஆயில், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1315-ஐ உடைத்து ஏறி 1321 வரை சென்றாலும், முடிவு விலையின் அடிப்படையில் 1315-க்கு கீழே முடிந்துள்ளது. இதனால் 1315 என்ற எல்லையை வலிமையான தடைநிலையாக மாற்றியுள்ளது. சென்ற வாரம் மென்தா ஆயில் தடைநிலையில் வலிமையாகத் தடுக்கப்பட்டதால், ஒவ்வொரு நாளும் மெள்ள இறங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த இறக்கத்தால், ஒவ்வொரு நாளின் குறைந்தபட்சப் புள்ளிகள் குறைந்துகொண்டே வந்தது. சென்ற வாரத்தின் கடைசி நாள் அன்று நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 1290-ஐயும் உடைத்து, 1286 என்ற புள்ளியில் முடிந்திருக்கிறது.

மென்தா ஆயில், டிசம்பர் மாதம் டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி ஜனவரி கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். மென்தா ஆயில், தற்போது 1285 என்ற எல்லையை ஆதரவாகவும், மேலே 1315 என்ற எல்லையை வலுவான தடை நிலையாகவும் கொண்டிருக்கிறது.
காட்டன்
தொடர்ந்து மூன்றாவது வாரமாக காட்டன் பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. சென்ற வாரத்தின் நகர்வு என்பது பக்கவாட்டு நகர்வின் மேல் எல்லையிலிருந்து கீழ் எல்லையை நோக்கி நகர்ந்திருக்கிறது.

சென்ற வாரம் காட்டன் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 19350-ஐ தக்கவைத்துக் கொண்டு, மேல் எல்லையிலிருந்து ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக கீழ் எல்லையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. சென்ற வாரம் திங்கள் அன்று 19260 என்ற புள்ளியிலிருந்து இறங்க ஆரம்பித்து, பிறகு புதன் அன்று நாம் கொடுத்த ஆதரவு எல்லையான 19120-ஐ உடைத்து 19000 என்ற புள்ளியைத் தொட்டது. அதன் பிறகு வியாழன் மற்றும் வெள்ளி அன்று மிகக் குறுகிய நகர்விலேயே இருந்து ஸ்பின்னிங்டாப் உருவ அமைப்பைத் தோற்றுவித்திருக்கிறது.
காட்டன், டிசம்பர் கான்ட்ராக்ட் டெலிவரி பீரியடுக்குள் நுழைவதால், இனி ஜனவரி கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். காட்டன் தற்போது 19470 என்ற எல்லையைத் தடைநிலையாகவும், கீழே 19180 என்ற எல்லையை ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.
சென்னா
சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. சென்னா, தொடர்ந்து இறங்குமுகமாக உள்ள நிலையில் ஒரு புல்பேக் ரேலி வரலாம் என்று சென்ற வாரம் எழுதி இருந்தோம்; அந்த புல்பேக் ரேலியும் வந்தது. சென்ற வாரம் சென்னா, திங்கள் அன்று 4334 என்ற எல்லையிலிருந்து ஏற ஆரம்பித்து, வெள்ளி அன்று 4467 என்ற புள்ளியில் முடிந்துள்ளது.
சென்னா, வலிமையாக ஏறிய நிலையில் 4490-ல் தடுக்கப்படுகிறது. கீழே 4360 உடனடி ஆதரவாக உள்ளது.