தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர், மென்தா ஆயில், காட்டன், சென்னா போன்ற கமாடிட்டிகள் இந்த வாரம் எப்படி இருக்கும் எனப் பார்ப்போம்.
தங்கம் (மினி)
தங்கம், உச்சமாக 44881-ஐ 16.03.20 அன்று தொட்டது. அதன் பின் தொடர் இறக்கமாக இருந்து கடும் வீழ்ச்சியை அடைந்தது. இந்த இறக்கம் 16.03.20 வரை தொடர்ந்து, குறைந்தபட்சப் புள்ளியாக 38419-ஐ தொட்டது. இந்த இறக்கம் என்பது 14% வீழ்ச்சி. இந்த பலமான வீழ்ச்சிக்குப் பிறகு, 20.03.20 வரை ஒரு பக்கவாட்டு நகர்வில் இருந்துவந்தது. இந்தப் பக்கவாட்டு நகர்வின் உடனடி தடைநிலையாக 40800 இருந்தது. தங்கம் சென்ற வாரம் திங்கள் அன்று இந்த பக்கவாட்டு நகர்வின் தடைநிலையை உடைத்து மிக வலிமையான ஓர் ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தங்கம் சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 39800-ஐ மிகச் சிறப்பாக தக்கவைத்துக்கொண்டு, பிறகு ஏற ஆரம்பித்தது.
அதாவது, சென்ற வாரம் திங்கள் அன்று தங்கம் 40668 என்ற விலையில் ஆரம்பித்து பின் மள மளவென்று இறங்கியது. இந்த இறக்கம் 39820 வரை வந்து, நாம் கொடுத்திருந்த ஆதரவுநிலையைத் தக்கவைத்து, அதன் பிறகு வலிமையாக ஏறி உச்சமாக 41500-ஐ தொட்டது. சென்ற வாரம் திங்கள் அன்று தொடங்கிய இந்த ஏற்றம், செவ்வாய் அன்றும் தொடர்ந்தது. ஆனால், செவ்வாய் அன்று தங்கம் ஒரு ரோலர் கோஸ்டர் நகர்வைக் கொண்டிருந்தது. அதாவது, 41451-ல் ஆரம்பித்து கீழே பலமாக இறங்கி 40115-ஐ தொட்டு, பிறகு பலமாக ஏறி உச்சமாக 42176ஐ தொட்டது. ஒரே நாளில் சுமார் 2061 புள்ளிகள் நகர்ந்துள்ளது. தொடர்ந்து சென்ற வாரம் புதன் அன்று தட்டுத்தடுமாறி ஏறினாலும், வியாழன் அன்று மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுத்து 43900-ஐ தொட்டது. தங்கம் மீண்டும் சரித்திரம் படைக்குமா என்று பார்க்க வேண்டும்.
தங்கம் ஏப்ரல் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி மே மாத கான்ட்ராக்டுக்கு மாறுவோம். 44200 என்பது முதற்கட்ட தடை நிலை; 45120 என்ற எல்லைதான் மிகப்பெரிய தடைநிலை. கீழே 42070 மிகப்பெரிய ஆதரவுநிலை. பெரும்பாலும் இந்த இரண்டு எல்லைக்கு இடையே சுழல வாயப்புள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவெள்ளி (மினி)
வெள்ளி, தங்கத்தைப்போலவே ஏற முயன்றாலும், தட்டுத்தடுமாறி ஏறிக்கொண்டிருக்கிறது. வெள்ளி சென்ற வாரம் திங்கள் அன்று நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 35700-ஐ கீழே கேப்டவுனில் தொடங்கி, பின் ஏறி 37938-ல் முடிந்தது. அடுத்து செவ்வாய் அன்று தொடர்ந்து ஏறி தடைநிலையான 38800-ஐ உடைத்து, 40800-ஐ தொட்டது. அதன் ஏற்றத்துக்கு முயன்றாலும், எல்லாம் ஸ்பின்னிங் டாப்பாகவே முடிந்திருக்கிறது.

வெள்ளி ஏற்றத்தின் முடிவில் தடுமாறி வருவதால், மேலே 42830 என்பது தடைநிலையாகவும், கீழே 39200 என்பது உடனடி ஆதரவாகவும் உள்ளது.
கச்சா எண்ணெய் (மெகா லாட்)
கச்சா எண்ணெய், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 2288-ஐ தக்கவைத்துகொண்டு, ஆதரவுநிலையான 1890-ஐ உடைத்திருக்கிறது. தற்போது இன்னும் வலிமை குன்றி இறங்குவதற்குத் தயாராவதுபோல் உள்ளது. கச்சா எண்ணெய் தற்போது 1920 என்ற எல்லையை வலிமையான தடைநிலையாகவும், கீழே 1680 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகவும் கொண்டிருக்கிறது.
Also Read
மென்தா ஆயில்
சென்ற வாரம் மென்தா ஆயிலுக்கு நாம் கொடுத்திருந்த தடைநிலையான 1120-ஐ தக்கவைத்துக்கொண்டு இறங்க ஆரம்பித்தது. சென்ற வாரம் திங்கள் அன்றே நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 1080-ஐ உடைத்து மிக வலிமையாக இறங்கி, குறைந்தபட்சப் புள்ளியாக 1060-ஐ தொட்டது. அதன் பிறகு செவ்வாய் அன்றும் தொடர்ந்து இறங்கியது, ஆனால், முடியும்போது டோஜியில் முடிந்தது. இந்த அமைப்பு இறக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சி. புதன் அன்றும் இன்னும் ஒரு டோஜி தோன்றி, இறக்க முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தியது. அடுத்து வியாழன் அன்று 1050-ல் ஆரம்பித்து 1085-ல் முடிந்தது. அடுத்து வெள்ளி அன்றும், 1096-ல் முடிந்து ஏற்றத்தைக் காட்டியிருக்கிறது.

மென்தா ஆயில், 1111 என்ற எல்லையைத் தடைநிலையாகக் கொண்டிருக்கிறது. இதை உடைத்தால் பலமான ஏற்றம் வரலாம். கீழே 1060 ஆதரவுநிலை.
காட்டன்
சென்ற வாரம் முன்பு முடிந்த 17210 என்ற எல்லையிலிருந்து மிகப்பெரிய கேப்டவுன் மூலம் 16700-ல் தொடங்கியது. அடுத்த நாள் செவ்வாய் அன்று 16720-ல் தொடங்கி, மீண்டும் சறுக்கி 15880 வரை இறங்கி, மீண்டு எழுந்து 16490-ல் முடிந்துள்ளது. தொடர்ந்து மேலும் கீழும் ஊசலாடிய நிலையில், கடைசி இரண்டு நாள்களும் பெரிய மாற்றம் இல்லாமல் முடிந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காட்டன், மேலே உடனடித் தடைநிலையான 16700-ஐ உடைத்து ஏறினால் 17200 வரை ஏறி கேப்பை மூடலாம். கீழே 16190 என்பது உடனடி ஆதரவு ஆகும்.

சென்னா
(சென்னா என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது.)
சென்னா, தொடர்ந்து இறங்கிவந்திருந்த வேளையில், சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4022-ஐ உடைத்து பலமாக ஏறி, 4127-ஐ தொட்டது. செவ்வாய் அன்று பக்கவாட்டில் நகர்ந்தாலும், மீண்டும் புதன் அன்று பலமாக ஏறி 4264-ஐ தொட்டது. ஆனால், வியாழன் அன்று இந்த ஏற்றம் தடுக்கப்பட்டு, கீழே 4116-ஐ தொட்டது. ஆனாலும் வெள்ளி அன்று வலிமையாக ஏறி முடியும்போது 4213-ல் முடிந்திருக்கிறது.
சென்னா, வலிமையாக பிரேக்அவுட்டில் ஏறியுள்ளது. தற்போது 4300 வலிமையான தடைநிலை யாகவும், 4110 ஆதரவாகவும் உள்ளன.
கமாடிட்டி சந்தை செயல்படும் நேரம் மாற்றம்!
கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுப்பதற்காக இந்திய பிரதமர் 14 ஏப்ரல், 2020 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இருந்தாலும், அவசியத்தின் அடிப்படையில், பங்குச் சந்தைகள் மற்றும் கமாடிட்டி சந்தைகள் இயங்கிவருகின்றன. பங்குச் சந்தை காலை 9:15 மணிக்கு ஆரம்பித்து மாலை 3:30-க்கு முடிகிறது. ஆனால், கமாடிட்டி சந்தை காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 11:30-க்கு முடிகிறது.
பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளுக்கு ஒழுங்குமுறை ஆணையகமாக இருக்கும் செபி, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் வகையில், கமாடிட்டி சந்தைகளின் வேலை நேரத்தை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, கமாடிட்டி சந்தைகள் காலை 9 மணிக்கு ஆரம்பித்து, மாலை 5 மணிக்கு முடிவுக்கு வரும். இந்த வேலை நேரம் 30.03.20 (திங்கள்) அன்று ஆரம்பித்து, 14.04.2020 (செவ்வாய்) வரை தொடரும். இதனிடையே ஏப்ரல் 2, 6 மற்றும் 14 ஆகிய நாள்கள் விடுமுறை தினங்கள். கமாடிட்டி சந்தைகளின் வேலை நாள்களில் உள்நாட்டு விடுமுறைகள் வரும்போது உலகச் சந்தைகள் வேலை பார்க்கும் என்பதால், மாலை நேரச் சந்தைகள் திறந்தே இருக்கும். ஆனால், இந்த முறை கொரோனா வைரஸ் பிரச்னையால், மாலை நேர வர்த்தகம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.