Published:Updated:

மீண்டும் ஏற்றத்தில் தங்கம்... விலை உயர்வு நீடிக்குமா?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

இந்தப் பொருளாதார ஏற்றம் நீடிக்குமா என்பதில் எழும் ஐயங்கள்தான் தங்கத்தின் விலையை உயர்த்திச் செல்கின்றன.

மீண்டும் ஏற்றத்தில் தங்கம்... விலை உயர்வு நீடிக்குமா?

இந்தப் பொருளாதார ஏற்றம் நீடிக்குமா என்பதில் எழும் ஐயங்கள்தான் தங்கத்தின் விலையை உயர்த்திச் செல்கின்றன.

Published:Updated:
தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தங்கம்

மிகக் குறுகியகாலத்தில் தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்திருப்பது, தங்க நகைப் பிரியர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து எல்லோரின் மனதிலும் எழுந்திருக்கும் கேள்வி, `இந்த விலையுயர்வு நீடிக்குமா, தங்கத்தின் விலை இறங்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா...’ என்பதுதான். தங்கத்தின் விலை உயர என்ன காரணம் என்று முதலில் பார்ப்போம்.

மீண்டும் ஏற்றத்தில் தங்கம்... விலை உயர்வு நீடிக்குமா?

சீனாவைத் தாக்கியிருக்கும் கொரோனா வைரஸ்

சீனாவைத் தாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் சாதாரண மக்களை மட்டும் பாதிக்கவில்லை; அதன் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும்ம் கணிசமாக பாதித்திருக்கிறது. இதையடுத்து, அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருளாதாரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, கடந்த வாரம் கொரோனா வைரஸ் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் உலக அளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அமெரிக்கப் பங்குச் சந்தைகளான டவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் ஆகிய மூன்றுமே, ஒரே நாளில் 3.5 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து காணப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கம்
தங்கம்

இதன் உடனடித் தாக்கத்தால்தான் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்ற ஒரு வாரத்தில் மட்டும் 22 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.4,166 என்ற புதிய உச்சத்தில் வர்த்தகமானது. 2020-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சர்வதேச விலையில் தங்கத்தின் விலை 7% அதிகரித்துள்ளது; உள்நாட்டு விலையில் 8% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிர்ச்சியளிக்கக்கூடிய அளவில் விலை அதிகரிக்க முகாந்திரங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால், உலக அளவில் நிலவிவரும் பொருளாதார வளர்ச்சி சார்ந்த அச்சங்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.

இந்தப் பொருளாதார ஏற்றம் நீடிக்குமா என்பதில் எழும் ஐயங்கள்தான் தங்கத்தின் விலையை உயர்த்திச் செல்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அமெரிக்க டாலர் Vs தங்கம்

பொதுவாக, அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை இறங்கும். ஆனால், இந்த முறை அப்படி நடைபெறவில்லை. அதாவது, அமெரிக்க டாலர் வலுவான நிலையில் அதாவது, மூன்று வருட உச்சத்தில் (பார்க்க, வரைபடம்-1) இருக்கும்போதும் தங்கம் விலை இறக்கத்தைச் சந்திக்காமல் மேல்நோக்கி நகர்ந்திருக்கிறது.

தங்கம்
தங்கம்

தற்போது டாலர் மதிப்பு அதிகரிப்பதால், அமெரிக்காவின் இறக்குமதிச் செலவினங்கள் குறையலாம். அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு தற்காலிகமாக இது சாதகமானது என்றாலும், அமெரிக்காவின் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதால் வானூர்தி, வாகனம், சோயாபீன்ஸ் உள்ளிட்ட ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு சர்வதேசச் சந்தையில் சரியான விலை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. இதனால், எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு தொழில் சார்ந்த உற்பத்தி, விவசாய வாகனத் தயாரிப்பு, எண்ணெய் மற்றும் எரிபொருள் துரப்பனப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

உலகப் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் என்பது அமெரிக்க ஏற்றுமதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 2009-ம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அமெரிக்க டாலரையும், அமெரிக்கப் பங்குச் சந்தைகளையும், 10 வருட உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. மேலும், அமெரிக்கப் பங்குச் சந்தைகள் உயர்வதற்கு, அமெரிக்க ஃபெடரல் நிதிக் கொள்கைகளில் தளர்வான போக்கைக் கடைப்பிடிக்கும் என்று சந்தை எதிர்பார்ப்பது முக்கியக் காரணம்.

வரைபடம் 1
வரைபடம் 1

சமீபத்திய நிகழ்வுகளை கவனிக்கும்போது, இந்தப் பொருளாதார ஏற்றம் நீடிக்குமா என்பதில் எழும் ஐயங்கள்தான் தங்கத்தின் விலையை உயர்த்திச் செல்கின்றன. டாலரின் மதிப்பு மூன்று ஆண்டு உச்சத்தில் இருக்கும்போதும் தங்கத்தின் விலை அதிகரிக்கக் காரணங்கள்... அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீதான அச்சங்கள், அமெரிக்க ஃபெடரல் வரும் எஃப்.ஓ.எம்.சி கூட்டங்களில் வட்டி விகிதங்களைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் அமெரிக்க டாலரின் போக்கு ஆகியவையே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோல்டு சார்ந்த இ.டி.எஃப் முதலீடுகள் அதிகரிப்பு

இந்தியாவைப் பொறுத்தவரை ஆபரண நகைகளின் மீதான முதலீடுகள் குறைந்துள்ள நிலையில், கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு 2020 ஜனவரி மாதத்தில் இ.டி.எஃப்-களில் முதலீடு அதிகமாக நடைபெற்றுள்ளது. (பார்க்க வரைபடம்-2) சென்ற வருடத்தை ஒப்பிடும்போது 31% முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்திய முதலீட்டாளர்களால் ஜனவரியில் மட்டும் ரூ.6,090 கோடிக்கு (870 மில்லியன் டாலர்) தங்கம் சார்ந்த இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யப் பட்டுள்ளன. உலக அளவில் பிப்ரவரியில் 22 வர்த்தக தினங்கள் கோல்டு இ.டி.எஃப் யூனிட்டின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருப்பது, இதன் மீதான முதலீட்டு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த முதலீடுகள் வரும் மாதங்களிலும் மேலும் தொடர வாய்ப்பிருப்பதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச விலை 1,655 அமெரிக்க டாலராக வர்த்தகமாகும் நிலையிலேயே உலக அளவில், கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு 3,004.5 டன்களாக அதிகரித்துள்ளன. 2011-ம் ஆண்டில் சர்வதேச விலை 1,900 அமெரிக்க டாலராக இருந்தபோது, இதே கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் 2,750 டன்களே முதலீடு செய்யப்பட்டிருந்தன.

விலை அதிகரிக்கவே சாதகம்

1) `உலகின், பொருளாதார வலிமை வாய்ந்த 10 பெரிய நாடுகளின் நிதி நிலைமை, முடிவடைந்த ஆறு மாதங்களுக்கு முன்பிருந்த நிலைமை மாறி, வரும் காலங்களில் பற்றாக்குறை நிறைந்த பட்ஜெட்டுகளை உள்ளடக்கியதாக இருக்கக்கூடும்’ என்று பொருளாதார வல்லுநர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

2) அமெரிக்காவின் வர்த்தகச் செயல்பாடுகள் குறித்த பிப்ரவரி மாத பி.எம்.ஐ குறியீடு 2013-ம் ஆண்டுக்குப் பிறகு 49.6–ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தக் குறியீடு 53.3-ஆகக் காணப்பட்டது. ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சேவை இரண்டுமே 50-க்குக் கீழ் குறைந்துள்ளது. இந்தக் குறியீடு 50-க்குக் குறைவாக இருந்தால், பொருளாதாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொருள் கொள்ளப்படுகிறது. நிறுவனங்களுக்குப் புதிய பணி ஆணைகள் கிடைக்காதது, கொரோனா வைரஸ் தாக்குதல்களால் உல்லாசப் பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வமின்மை, ஏற்றுமதி தடைப்படுவது, பொருள்களை அனுப்புவதில் காணப்படும் இடையூறுகள், பொருளாதார தேக்கநிலை தொடர்பான அச்சத்தால் நிறுவனங்களின் செலவினங்களில் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பது போன்ற காரணங்களால் இந்தக் குறியீடு இறக்கத்தைச் சந்தித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

3) கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவின் பொருளாதாரத்திலும், ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வரவிருக்கும் ஆறு மாதங்களில் வெளியாகவுள்ள புள்ளிவிவரங்கள் உணர்த்தவிருக்கின்றன.

4) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் சரிவும் உள்நாட்டுத் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கும் என்பதால், அதன் போக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

5) உலக நாடுகள் சென்ற ஆண்டு முதல், தங்கத்தை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றன. சீனா கடந்த டிசம்பரில், அதற்கு முந்தைய மாதத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக, 150 டன்களாக இறக்குமதி செய்திருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை 10% முதல் 15% வரை நுகர்தல் குறைய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மற்ற நாடுகளில் மத்திய வங்கிகள், பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளைத் தொடரவே வாய்ப்பிருக்கிறது.

வரைபடம் 2
வரைபடம் 2

தங்கத்தின் விலைப்போக்கு எவ்வாறு இருக்கும்?

கொரோனா வைரஸ் தாக்குதல் மற்ற நாடுகளிலும் பரவுவது தடுக்கப்படுமேயானால், சர்வதேச விலையேற்றம் தடுக்கப்படும். அதாவது, டிராய் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,600 அமெரிக்க டாலராகக் குறைய வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால், தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு அதிகபட்சமாக 1,810 டாலரைத் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நிகராக இந்திய விலையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ரூ.4,275 வரை உயர வாய்ப்பிருக்கிறது.

உலகப் பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை, வளர்ந்த நாடுகள் வட்டி விகிதங்களைக் குறைத்து வைத்திருப்பது ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு மிகவும் சாதகமாக இருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. எனவே, இன்றைய தங்கத்தின் விலை ஏற்றம் என்பது பெரிய ஏற்றமே அல்ல. இனிமேல்தான் மிகப்பெரிய ஏற்றத்தை நாம் சந்திக்கவிருக்கிறோம்!

தங்கத்தில் நேரடி முதலீடுகள் குறைந்து ஊக வணிகம் அதிகரிப்பு!

தங்கம்
தங்கம்

தங்கக் கட்டிகள் மற்றும் தங்கக் காசுகள் மீதான முதலீடுகள் 2018–ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் முறையே 25% மற்றும் 8% என்ற அளவில் குறைந்திருப்பது கவனிக்கத்தக்க ஒன்று. மேலும்,சென்ற ஆண்டில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் நுகர்வு முறையே அளவின் (Volume) அடிப்படையில் 15 மற்றும் 9 சதவிகிதமாகக் குறைந்து காணப்படுவதாக உலக தங்கக் குழுமம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், மதிப்பின் (Value) அடிப்படையில் இந்தியாவின் நுகர்வு 3% அதிகரித்துள்ளது. அதாவது, விலையேற்றம் காரணமாக நுகர்வின் அளவு குறைந்திருக்கிறதே தவிர, தங்கத்தின் மீதான முதலீட்டு நிதி ஒதுக்கீட்டை நுகர்வோர் குறைத்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. 2019 ஜனவரி தொடங்கி, தற்போது 2020 பிப்ரவரி வரையிலான காலத்தில் உலக அளவில் கோமெக்ஸ், ஐ.சி.இ., எல்.எம்.இ போன்ற கமாடிட்டிச் சந்தை வழியாக நடைபெறும் தங்கம் சார்ந்த முன்பேர வர்த்தகத்தின் (ஊக வணிகம்) அளவு 68.7 பில்லியன் டாலரிலிருந்து, 141.8 பில்லின் டாலராக அதிகரித்துள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் அதிக ஊசலாட்டத்துடன் விலை ஏற்றம் அல்லது இறக்கம் காண வாய்ப்பிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism