Published:Updated:

சாதகமாகும் சர்வதேசச் சூழ்நிலைகள்... பங்குச் சந்தைகள் இனி மேல்நோக்கிச் செல்லுமா?

உலகப் பொருளாதாரம்

பிரீமியம் ஸ்டோரி

டந்த சில நாள்களாகவே பன்னாட்டு சந்தைகளில் பாசிட்டிவான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்கப் பங்கு சந்தைகள் தமது வரலாற்று உச்சத்திற்கு மிக அருகில் சென்றுள்ளன. அமெரிக்கக் கடன் சந்தையில் பத்தாண்டு வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுக்கத் துணிகிறார்கள் என்பதை வெளிக்காட்டும் விதமாக, டாலருக்கு நிகரான இதர நாடுகளின் கரன்சிகள் வலுவடைந்துவருகின்றன. இந்தியப் பங்குச் சந்தையிலும்கூட அந்நிய முதலீட்டாளர்களின் விற்பனை வேகம் மட்டுப்பட்டுள்ளது. இதன் பலனாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடந்த வியாழன் காலை வரை முன்னேற்றம் கண்டது.

ஆர்.மோகன பிரபு, CFA
ஆர்.மோகன பிரபு, CFA

சர்வதேசச் சூழ்நிலைகள் சாதகமாக மாறியதே சந்தையின் இந்த முன்னேற்றத்துக்கு முக்கியமான ஒரு காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். சர்வதேச அளவில் என்னென்ன சூழ்நிலைகள் எப்படிச் சாதகமாக மாறியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

அமெரிக்க – சீன உறவுகளில் முன்னேற்றம்

அமெரிக்க விவசாயப்பொருள்களை சீனாவிற்கும் இறக்குமதி செய்ய ஒப்புக்கொள்ளப்போவதாகவும் இதற்குப் பதிலாக சீனப் பொருள்கள் மீதான அதிகப்படியான இறக்குமதி வரிவிதிப்பைத் தள்ளிப்போடுவதுடன் சீனாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவே மீதான தடைகளையும் நீக்கவேண்டுமென்றும் சீனா கோரிக்கை வைத்திருப்பதாக, சீனாவிலிருந்து வெளியாகும் தகவல்கள் சொல்கின்றன.

மேலும், அமெரிக்க நிறுவனங்களின் கோரிக்கையான அறிவுசார் காப்புரிமை மற்றும் சீன சந்தைகளில் நுழைய அனுமதி போன்ற விஷயங்களில் சீன அரசு புதிய சலுகைகளை வழங்குவது குறித்து ஆலோசிப்பதாகவும் ஊக அடிப்படையிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஒரு முன்னோடியாக, இந்த மாதம் 10-ம் தேதியன்று, சீனப் பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களுக்கான வரையறையைத் தளர்த்துவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான சீன யுவான் நாணயத்தின் மதிப்பைச் செயற்கையான முறையில் அதிரடியாகக் குறைப்பதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

சாதகமாகும் சர்வதேசச் சூழ்நிலைகள்... பங்குச் சந்தைகள் இனி மேல்நோக்கிச் செல்லுமா?

எனவே, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது தற்போதைய வர்த்தகப்போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் சில சாதகமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ஓய்ந்தது ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங் நகரில் கைது செய்யப்படும் குற்றவாளிகளை சீனாவின் மையப்பகுதிக்குக் கொண்டு செல்ல வகைசெய்யும் வகையிலான சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடிய ஹாங்காங் நகர மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகச் சீன அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக, சீன அரசுக்கு இருந்துவந்த தலைவலி மறைந்திருக்கிறது. ஹாங்காங் போராட்டம் காரணமாகச் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் காணாது என்று நம்பலாம்.

தணிந்தது பிரெக்சிட் வெப்பம்

எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு, பிரிட்டன் வெளியேறும் என்ற வகையில் கருத்துகளைத் தெரிவித்துவரும் அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தொடர் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் “நோ டீல் பிரெக்சிட்டு’க்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

மேலும், பிரெக்சிட் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளைப் புதுப்பிக்குமாறும் பிரிட்டிஷ் பிரதமரை நிர்ப்பந்தித்துள்ளது. பிரெக்சிட்டின் தீவிர ஆதரவாளரான போரிஸ் ஜான்சனின் இடைத்தேர்தல் கோரிக்கையையும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் பிரெக்சிட் பிரச்னையில் சுமுகமான தீர்வுக் கிடைக்கும் என்று நம்பலாம்.

சாதகமாகும் சர்வதேசச் சூழ்நிலைகள்... பங்குச் சந்தைகள் இனி மேல்நோக்கிச் செல்லுமா?

இத்தாலியும் இந்தியாவும்

ஐரோப்பாவின் மற்றொரு முக்கிய நாடான இத்தாலியிலும் சூழ்நிலை மாறியுள்ளது. இங்கு புதிதாக அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான நிலைப்பாடுள்ள இடதுசாரி அரசாங்கம், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக விரும்பும் வலதுசாரிகளின் போராட்டங்கள் தற்காலிகமாகத் தணியலாம் என்ற எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான காஷ்மீர் பதற்றங்கள் கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவுக்குத் தணிந்திருப்பதாகவும் இரண்டு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற உதவ, தான் தயாராக இருப்ப தாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருப்பது ஆசிய பிராந்தியத்திற்கான சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகச் சிறந்த அமெரிக்கப் பொருளாதாரம்

உலகப் பொருளாதாரத்தின் இன்ஜினாகக் கருதப்படும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பொருளாதாரத் தகவல்கள் முன்பின் முரணாக இருந்தாலும், பெரிதாகக் கவலைகொள்ளும் அளவிற்கு அந்த நாடு இன்னும் முழுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துவிடவில்லை என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகி யுள்ளது.

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள், பங்குச் சந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ள அதே வேளையில், இந்தச் சாதகமான சூழ்நிலை தற்காலிகமானது என்பதுடன், எந்த நிமிடத்திலும் இந்த நிலை மாறிவிடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது!

கடந்த மாதத்தில் (விவசாயம் சாராத) அமெரிக்க வேலைவாய்ப்புகள், எதிர்பார்ப்பைவிடக் குறைவாகவே வளர்ச்சி அடைந்துள்ளன என்று தகவல்கள் தெரிவித்தாலும், வேலைவாய்ப்பு வளர்ச்சி வீதம் சராசரிக்கும் மேலாகவே உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக உருவாகியுள்ள தற்காலிக பணியிடங்களே இந்த வேலைவாய்ப்பு உயர்வுக்கான காரணம் என சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், பணியாளர்களின் ஊதிய விகிதாசாரத்தின் வளர்ச்சி, அமெரிக்காவின் பொருளாதார வல்லமையை உலகிற்குப் பறைசாற்றுகிறது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள் சிறப்பாகவே இருந்தாலும், வர்த்தகப்போர் மற்றும் குறைவான பணவீக்கம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அமெரிக்க மத்திய வங்கி வருங்காலங்களில் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு பங்குச் சந்தையில் நிலவி வருகிறது. அந்த நாட்டின் முக்கியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் வரலாற்று உச்சத்திற்கு மிக அருகிலேயே இருப்பதும் முதலீட்டாளர்கள் கவனிக்கவேண்டிய அம்சம்.

மாற்றம் ஒன்றே மாறாதது...

இந்த சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள், உலக அளவில் பங்குச் சந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ள அதே வேளையில், இந்தச் சாதகமான சூழ்நிலை தற்காலிகமானது என்பதுடன், எந்த நிமிடத்திலும் இந்த நிலை மாறிவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

சீனாவைப் பற்றி அமெரிக்க அதிபர் மீண்டும் ‘ட்விட்’ செய்தாலோ, வேறுவிதமான பிரச்னைகள் ஏதாவது தோன்றினாலோ, உலக அளவில் மீண்டும் பங்குச் சந்தைகள் இறக்கம் காண வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலைக்கு மீண்டும் பெரிய அளவில் பாதிப்பு வரும் வரை, உலக அளவில் பங்குச் சந்தைகள் மேல்நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கலாம்!

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விலை குறையத் தொடங்கிய தங்கம்!

அமெரிக்க - சீன வர்த்தகப்போர் பதற்றம் உள்படப் பல்வேறு பிரச்னைகள் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சர்வதேசச் சந்தையில் கடந்த 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலான காலத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸுக்கு 57 டாலர் வரை குறைந்துள்ளது. கடந்த 4-ம் தேதி ரூ.29,928 இருந்த எட்டு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 11-ம் தேதி ரூ.29,072-ஆகக் குறைந்திருக்கிறது. சர்வதேசச் சூழ்நிலை மீண்டும் பதற்றமடைந்தால், சர்வதேசச் சந்தையிலும் உள்நாட்டிலும் தங்கம் விலை மீண்டும் உயரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு