Published:Updated:

எல்.ஐ.சி பங்கு வெளியீடு... காத்திருக்கும் சவால்கள்!

பங்கு வெளியீடு

பிரீமியம் ஸ்டோரி

டந்த வாரத்தில் கஃபே காபி டே நிறுவனத்தின் தலைவர் வி.ஜி.சித்தார்த்தா தற்கொலை செய்திக்குப் பிறகு, பலரது கவனத்தை ஈர்த்த செய்தி எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் ஐ.பி.ஓ-வில் வெளியிடப்படுமா என்பதுதான். தற்போது பெருமளவில் நஷ்டம் கண்டுவரும் ஏர் இந்தியா மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதா அல்லது தொடர்ந்து அரசாங்கமே நடத்துவதா என்கிற கேள்விக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில், எல்.ஐ.சி-யின் பங்குகள் ஐ.பி.ஓ மூலம் வெளியிடப்படுமா என்கிற செய்தி கிளம்பிவிட்டது. எல்.ஐ.சி-யின் பங்குகளை வெளியிடலாமா என மத்திய அரசாங்கம் இப்போது நினைப்பது ஏன்?

அதிகரித்துவரும் நிதிப் பற்றாக்குறை

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகவும் உள்நாட்டு நிதிச் சந்தைகளின் மீதுள்ள அழுத்தத்தைக் குறைப்பதற் காகவும் மத்திய அரசாங்கம் அந்நியச் செலாவணியில் கடன் வாங்க முடிவு செய்துள்ளதாகக் கடந்த பட்ஜெட் அறிவிப்பில் தகவல் வெளியானது. ஆனால், இந்த யோசனைக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் உள்பட பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது. அந்நியச் செலாவணிக் கடன் இந்தியாவின் ஸ்திரத்தன்மையையே பாதித்துவிடும் என்று எச்சரித்த பொருளாதார அறிஞர்கள், இந்த விஷயத்தில் உலக நாடுகளின் பயமுறுத்தும் அனுபவங்களை எடுத்துச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து, அந்நியச் செலாவணிக் கடன் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி நிதி அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அந்நியச் செலாவணிக் கடன் பெறும் முடிவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆர்.மோகனப் பிரபு, CFA
ஆர்.மோகனப் பிரபு, CFA

இந்தச் சூழ்நிலையில், நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக தன்வசமுள்ள எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு ஐ.பி.ஓ மூலம் விற்பனை செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற ஊகத் தகவல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் தற்போதைய நிதித் தேவை மிகப் பெரியதாக இருப்பதால், இந்த ஊகம் நிஜமாகிவிடுமோ எனப் பலரும் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மேலும், நடப்பு பட்ஜெட் அறிக்கையின்படி, பொது நிறுவனங் களின் பங்குகளை விற்பனை செய்வதின் வாயிலாக, 2019-20-ம் நிதியாண்டில் சுமார் ரூ.1,05,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எல்.ஐ.சி பங்கு வெளியீடு இந்த இலக்கை அடைய உதவியாக இருக்கும்.

ஐ.பி.ஓ மூலம் எல்.ஐ.சி பங்குகள் வெளியிடப் பட்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும், சந்திக்க வேண்டிய சவால்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று பார்ப்போம்.

எல்.ஐ.சி – ஆயுள் காப்பீட்டுத் துறையின் அரசன்

1956-ம் ஆண்டு ஆயுள் காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய நாடாளுமன்றம், அதே ஆண்டு ஜூன் மாதம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டத்தின் கீழ் 01.09.1956-ல் உருவாக்கப்பட்ட இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தற்போது 2,048 கிளைகளுடன் இந்தியா முழுதும் வியாபித்துள்ளது.

எல்.ஐ.சி பங்கு வெளியீடு... காத்திருக்கும் சவால்கள்!

ஆயுள் காப்பீட்டுத் துறையில் இயங்கும் ஒரே அரசு நிறுவனம் எல்.ஐ.சி மட்டுமே. தனியார் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயுள் காப்பீட்டு வருவாயில், 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பங்கு எல்.ஐ.சி-யிடமே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுமார் 31,00,000 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை எல்.ஐ.சி நிர்வகித்து வருகிறது.

வரவு நல்வரவாகட்டும்

ஏற்கெனவே, ஐ.சி.ஐ.சி.ஐ லைஃப், எஸ்.பி.ஐ லைஃப் போன்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனப் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டு வர்த்தக மாகி வருகின்றன. கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி பிரீமியம் வருவாய் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.57,000 கோடி உள்ள நிலையில், சுமார் ரூ.3,17,000 கோடி பிரீமியம் வருவாய் கொண்ட எல்.ஐ.சி நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. அதேபோல, சந்தையில் பட்டியலிட்ட பின்னர் இந்தியாவின் மதிப்புமிக்க முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக எல்.ஐ.சி இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

எல்.ஐ.சி போன்ற மிகப் பெரிய மற்றும் வலுவானதொரு நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர் களுக்கு ஆயுள் காப்பீட்டுத் துறையின் வருங்கால வளர்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்கும். மேலும், பங்கு வெளியீட்டின்போதுகூட, சிறு முதலீட்டாளர்களுக்கான சிறப்பு விலை தள்ளுபடி யும் கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காத்திருக்கும் சவால்கள்

பங்குச் சந்தையில் ஒரு நிறுவனம் பட்டியலிடப் பட்டால், பல நடைமுறைகளை அந்த நிறுவனம் பின்பற்ற வேண்டியிருக்கும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை தனது நிறுவனத்தின் லாப - நஷ்டக் கணக்கை செபியிடம் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இதன்மூலம் இதுவரை வெளியிடாத பல தகவல்களை எல்.ஐ.சி வெளியிட வேண்டியிருக்கும். சிறு முதலீட்டாளர் கள், பங்குத் தரகர்கள் மற்றும் பங்கு ஆய்வாளர்கள் ஆகியோரின் கேள்விக்கணைகளுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். தற்போதைக்கு நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆபத்பாந்தவனாக உள்ள எல்.ஐ.சி-யின் நிலைப்பாட்டை பங்கு வெளியீட்டிற்குப் பிறகும் தொடர முடியுமா, அப்படித் தொடர தனியார் பங்கு முதலீட்டாளர்கள் ஒப்புக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியே.

எல்.ஐ.சி பங்கு வெளியீடு... காத்திருக்கும் சவால்கள்!

சில மாதங்களுக்குமுன், ஐ.டி.பி.ஐ வங்கியின் 26% பங்குகளை ரூ.61.73 என்ற விலையில் எல்.ஐ.சி வாங்கியது. தற்போது அந்தப் பங்கின் விலை பாதிக்குமேல் குறைந்து விற்பனையாவது அனைவரும் அறிந்ததே. ஆனால், வருங்காலத்தில், இதே போன்றதொரு சூழ்நிலை ஏற்பட்டால், முதலீட்டாளர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆக மொத்தத்தில், எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின்மூலம் அரசுக்குத் தேவையான நிதி கிடைக்கலாம் என்றாலும், அந்த நிறுவனத்தின் மீது அரசாங்கம் வைத்திருக்கும் கட்டுப்பாட்டினை நீக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகும். கட்டுப்பாட்டை அரசு நீக்கிக்கொள்ளாத பட்சத்தில், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் களுக்குப் பெரிய லாபம் எதுவும் கிடைக்காது என்கிற வாதத்தில் உண்மை இருக்கவே செய்கிறது.

என்றாலும், இந்தப் பங்கு வெளியீடு அரசுக்கும் சிறு முதலீட்டாளர்களுக்கும் ஒரு வரப் பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டுள்ளவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு