Published:Updated:

ஷேர்லக்: விலை அதிகரித்த சர்க்கரைப் பங்குகள்!

Shareluck
பிரீமியம் ஸ்டோரி
News
Shareluck

ஷேர்லக்

ரியாக ஐந்து மணிக்கு ஷேர்லக் நம் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் வந்தபோது, நிதி அமைச்சரின் அதிரடி அறிவிப்புகள் குறித்த தலையங்கத்தை எழுதி முடித்திருந்தோம். அதை வாங்கிப் படித்தவர், ‘‘சூப்பர்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘வங்கிகள் இணைப்பினால் அவற்றின் பங்குகள் என்னவாகும் என்று அடுத்த வாரம் ஒரு கட்டுரை வெளியிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

லஷ்மி விலாஸ் வங்கியின் எம்.டி திடீர்னு ராஜினாமா செய்திருக்கிறாரே?

“லஷ்மி விலாஸ் வங்கியின் எம்.டி & சி.இ.ஓ பார்த்தசாரதி முகர்ஜி ஆகஸ்ட், 31-ம் தேதியுடன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாகக் கடிதம் அனுப்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் லஷ்மி விலாஸ் வங்கியை இணைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா முடிவெடுத்திருப்பது குறிப்பிடத் தக்கது. கடந்த ஏப்ரலில் இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன் லஷ்மி விலாஸ் வங்கியை இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி மற்றும் அதன் பங்குதாரர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. இந்த இணைப்பின்மூலம், லஷ்மி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள், தங்களிடமுள்ள 100 பங்குக்கு ஈடாக, இந்தியா புல்ஸ் நிறுவனத்தின் 14 பங்குகள் கிடைக்கும்.”

ஷேர்லக்:  விலை அதிகரித்த சர்க்கரைப் பங்குகள்!

சி.ஜி பவர் நிறுவனத்தின் தலைவர் கெளதம் தாப்பரை பதவிநீக்கம் செய்திருக்கிறார்களே!

“சி.ஜி பவர் நிறுவனத்தில் பணியாற்றிய சிலர் முறைகேடாகச் செயல்பட்டது தெரியவந்துள்ளது. நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல், நிர்வாகக் குளறுபடிகள், அதிகாரப்பூர்வமற்ற முறையில் வழங்கப்பட்ட கடன்கள், புரமோட்டர்களின் இணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கார்ப்பரேட் உத்தரவாதம் போன்றவற்றின்மூலம் பல கோடி ரூபாய் மதிப்பில் மோசடிப் பரிமாற்றம் நடந்திருப்பதாகத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைவர் பதவி யிலிருந்து கெளதம் தாப்பர் நீக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவர், தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அனைத்துவிதமான பரிமாற்றங் களும் இயக்குநர் குழுவின் ஒப்புதலுடனேயே செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.”

கடந்த வியாழக்கிழமை முடிந்த எஃப் அண்டு ஓ எக்ஸ்பைரி பற்றி..!

“அன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி 11000 கீழே நிலைபெற்றிருக்கிறது. நிஃப்டியின் எஃப் அண்டு ஓ-வில் ரோல்ஓவர் 55.22 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஜூன் 2013-க்குப்பிறகு மிகக் குறைவானதாகும். அரசு தொழில்துறைக்கு அறிவித்த தகவல்கள் சந்தையை ஊக்குவிக்கவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

பேங்க் நிஃப்டியின் ரோல்ஓவர் 60 சதவிகிதமாக உள்ளது. கடந்த மூன்று மாத சராசரி சுமார் 80 சதவிகிதமாக உள்ளது. ஒட்டுமொத்தப் பங்குச் சந்தையின் ரோல்ஓவர் சுமார் 80 சதவிகிதமாக உள்ளது. இதற்குமுன் 90 சதவிகிதமாக இருந்தது. பெரும்பாலான டிரேடர்கள் லாங் பொசிஷன் களை ரோல் ஓவர் செய்யவில்லை. இப்படி அனைத்து நிலைகளிலும் ரோல்ஓவர் குறைந்திருப்பது செப்டம்பர் மாதத்திலும் சந்தை இறக்கத்தில் இருக்கும் என்கிறார்கள் சிலர்.’’

நிஃப்டி 50 இண்டெக்ஸிலிருந்து இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கு வெளியேற்றப்படுவதன் பின்னணி என்ன?

“நிஃப்டி 50 இண்டெக்ஸில் இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்குப் பதிலாக நெஸ்லே நிறுவனம் இடம்பிடிக்கவுள்ளது. இந்த மாற்றம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி கொண்டுவரப்படுகிறது. நிஃப்டி 50 இண்டெக்ஸில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே, பிரிட்டானியா, மற்றும் டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் என நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்களின் மதிப்பு 13%, ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனங்களின் மதிப்பு 40%, ஐ.டி நிறுவனப் பங்குககள் 14.8%, மின்சக்தி நிறுவனப் பங்குகள் 13.97% உள்ளன. நிஃப்டி 50 இண்டெக்ஸிலிருந்து வெளியேறும் இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம், பெர்ஜர் பெயின்ட்ஸ், பி.எஃப்.சி., பி.என்.பி நிறுவனங்கள் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸில் இடம்பிடிக்கவுள்ளன. அந்த இண்டெக்ஸிலிருந்து ஏ.பி.பி இந்தியா, பெல், எம்.ஆர்.எஃப், ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனங்கள் வெளியேறுகின்றன.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
Shareluck
Shareluck

வடிலால் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை தொடர்ந்து ஏற்றம் கண்டுவருவது ஏன்?

“ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்துவரும் இந்த நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவு நல்ல முறையில் அமைந்ததால், இந்த நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. கடந்த புதனன்று 4% விலை உயர்ந்து 682 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த நான்கு நாள்களில் மொத்தம் 22% உயர்ந்து, கடந்த 52 வாரங்களில் உச்சமான விலையில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் காலாண்டில் 16% அதிகரித்து, ரூ.38 கோடியாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதே ஜூன் காலாண்டில் நிகர லாபம் ரூ.32 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருவாய் 13% அதிகரித்து, ரூ.258 கோடியாக உள்ளது.”

ஷில்பா மெடிக்கேர் நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறதே?

“ஷில்பா மெடிக்கேர் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மோசமாக அமைந்ததால், இந்தச் சரிவு ஏற்பட்டது. கடந்த ஜூன் காலாண்டு முடிவில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 55% குறைந்து, ரூ.14.96 கோடியாக உள்ளது. நிகர விற்பனை 19% குறைந்து, ரூ.161 கோடியாக உள்ளது. மோசமான காலாண்டு முடிவு வெளியானதுமே ஆகஸ்ட் 13-ம் தேதி, அந்த நிறுவனத்தின் பங்கு விலை 35% சரிவடைந்தது. இந்த இறக்கம் தொடர்ந்தபடியே இருந்தது. கடந்த செவ்வாயன்று வர்த்தக நாளின் இடையே 11.77% வரை குறைந்து, 215 ரூபாய்க்கு வர்த்தகமானது. அன்றைய நாளின் இறுதியில் சற்று உயர்ந்து, 9.54% இறக்கத்தில் 220.45 ரூபாய்க்கு விற்பனையானது. இது கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த விலையாகும்.”

சந்தோஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், மும்பை பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்பட்டதன் காரணம்?

“இந்த நிறுவனம், மும்பை பங்குச் சந்தை மட்டுமன்றி, கொல்கத்தா பங்குச் சந்தையிலிருந்தும் பங்குகளை விலக்கிக் கொள்ளவிருக்கிறது. முதலீட் டாளர்களின் வசமிருக்கும் 26.04% அளவுள்ள மொத்தம் 12.53 லட்சம் பங்குகளைத் திரும்பப் பெறவுள்ளது. இதற்காகச் சலுகை விலையாக ஒரு பங்குக்கு ரூ.310 என நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 5 வரை இந்த டீலிஸ்டிங் பணி நடக்கும். வாசகர் களிடம் இந்தப் பங்கு இருந்தால், தயவுசெய்து திரும்பத் தந்துவிடலாம். தற்போது கவனிக்காமல் இருந்துவிட்டு, பிற்பாடு கவலைப்பட வேண்டாம்.’’

சர்க்கரைப் பங்கு விலை தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த புதன்கிழமையன்று கேபினெட் அமைச்சகம், பணத்தட்டுபாடு கொண்ட சர்க்கரை ஆலைகளை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை ரூ.6,268 கோடியை வழங்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதனால் பண்ணாரி அம்மன் சுகர், தாம்பூர் சுகர் மில்ஸ், ஷாஷி சுகர், தாரணி சுகர் மற்றும் பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர் ஆகிய நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றன.’’

இன்ஃபோசிஸ், தனது முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளைத் திரும்ப வாங்குகிறதே?

“ரூ.8,260 கோடி மதிப்பிலான 11.05 கோடி பங்குகளை, திரும்ப வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்போது பங்கு ஒன்றின் ஆஃபர் விலையாக 747.38 ரூபாயை இந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 815.57 ரூபாயாக வர்த்தகமானது. பங்குகளைத் திரும்பப் பெறும் அறிவிப்புக்குப்பிறகு, இந்தப் பங்கின் விலை உயர்ந்திருக்கிறது’’ என்றவர், மழைவிட்டதும் வீட்டுக்குப் புறப்பட்டார்!