Published:Updated:

ஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்த 450 நிறுவனங்கள்..! ஏற்ற சந்தையில் நல்ல லாபம்..!

S H A R E L U C K

பிரீமியம் ஸ்டோரி

எதிர்பார்க்காத தருணத்தில் மாலை 3 மணிக்கே மின்னல் வேகத்தில் வந்து நின்றார் ஷேர்லக். நாம் ஆச்சர்யமாகப் பார்க்க... “4 மணிக்கு என் மும்பை நண்பர் ஒருவரை வரவேற்க ஏர்போர்ட் போக வேண்டும். அதனால் கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டேன். செய்திகளை வேகமாகப் பேசி முடிப்போமா’’ என்று கேட்டபடி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார். நாம் குறித்து வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

இரண்டாவது முறையாகப் பங்குச் சந்தை மீண்டும் 50000 புள்ளிகளைக் கடந்திருக்கிறதே...

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று, இந்தியப் பங்குச் சந்தையில் பி.எஸ்.இ சென்செக்ஸ் குறியீடு மீண்டும் இரண்டாவது முறையாக 50000 புள்ளிகளைக் கடந்து வர்த்தக மானது. இதன் காரணமாகக் கடந்த மூன்று வர்த்தகத் தினங்களில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.12.31 லட்சம் கோடி அதிகரித்தது. பி.எஸ்.இ–யில் பட்டியலிடப்பட்ட பங்கு நிறுவனங்களின் மார்க்கெட் கேப்பிட்டலைஷேசன் ரூ.198.43 லட்சம் கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. புதன் கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 728.67 புள்ளிகள் அதிகரித்து, 50255.75 புள்ளிகளில் வர்த்தகமானது. திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 3969.98 புள்ளிகள் வரை உயர்ந்து சாதனை படைத்திருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வியாழக் கிழமை வர்த்தகத்தில் ஆரம்பத்தில் 50000 புள்ளிகளுக்குக்கீழ் இறங்கி வர்த்தகமானது. மதியம் 12 மணி வாக்கில் 50300 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமானது. மாலையில் வர்த்தக நிறைவில் 50614-ல் நிலை பெற்றது.”

புரூக்ஃபீல்டு ரெய்ட் ஐ.பி.ஓ பற்றி...

“புரூக்ஃபீல்டு இந்தியா ரியல் எஸ்டேட் டிரஸ்ட், ரெய்ட் யூனிட்டுகள்மூலம் ரூ.3,800 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. இந்த ஐ.பி.ஓ-வில் பங்கு ஒன்றின் விலைப்பட்டை ரூ.274 - ரூ.275 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 7.62 கோடி பங்குகள் வெளியிடும் நிலையில் முதல் நாளில் முதலீட்டாளர்களிடமிருந்து 1.15 கோடி பங்குகள் கேட்டு விண்ணப் பங்கள் வந்திருக்கின்றன.”

ஷேர்லக்
ஷேர்லக்

ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ் நிறுவனத் தின் பங்கு விலை முதல் நாளிலேயே அதிக ஏற்றத்தைச் சந்தித்தது எப்படி?

“பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி 21 - 25-ம் தேதி வரை புதிய பங்குகளை வெளியிட்டது. இதன் மூலம் ரூ.1,154 கோடி நிதி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்தப் பங்கு கடந்த 3-ம் தேதி, பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது. அன்றைய வர்த்தக தினத்தில், ஒரே நாளில் பங்கு விலை 23.4% வரை அதிகரித்து வர்த்தகமானது. அன்றைய அதிகபட்ச விலையாக 639.50 ரூபாய்க்கும், குறைந்தபட்ச விலையாக 565 ரூபாய்க்கும் வர்த்தகமானது.”

ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு என்ன காரணம்?

“இந்திய விமானப் படையின் பலத்தை அதிகப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சி.சி.எஸ்) கடந்த ஜனவரி 13-ம் தேதி 73 தேஜாஸ் எம்.கே-1 ஏ ரக போர் விமானங்கள் மற்றும் 10 எல்.சி.ஏ தேஜாஸ் எம்.கே-1 பயிற்சி விமானங்களை ஹெச்.ஏ.எல் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத் துக்கு ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் இந்திய விமானப் படைக்கு அரசு இயக்கும் ஏரோஸ்பேஸ் மேஜரிலிருந்து 83 தேஜாஸ் லைட் போர் விமானங்களை வாங்குவதற்கான ரூ.48,000 கோடிக்கான ஒப்பந் தத்தில் அரசாங்கம் முறையாகக் கையெழுத்திட உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 3-ம் தேதி ஹெ.ஏ.எல் நிறுவனத்தின் பங்கு விலை 2 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஹெச்.ஏ.எல் நிறுவனத்தின் பங்கு விலை அன்றைய தினத்தில் ரூ.26.20 விலை உயர்ந்து, 959.55 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை முதல் நாளிலேயே அதிக ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறதே...

“இண்டிகோ பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே 109% வரை விலை அதிகரித்து, 3,118.65 ரூபாய் வரை வர்த்தகமானது. ஜனவரி 21 மற்றும் 22-ம் தேதிகளில் இந்த நிறுவனம் பங்கு முதலீட்டாளர் களிடமிருந்து ரூ.1,170 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டது. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, அன்றைய மார்க்கெட் கண்டிஷன் இதன் பங்கு வர்த்தகத்துக்கு ஏற்றதாக இருந்ததாலும், பட்ஜெட் 2021-2022 பங்குச் சந்தையின் போக்கை ஏற்றத்தில் கொண்டு சென்றதாலும் அதிகபட்சமாக 3,129 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 2,436.05 ரூபாய்க்கும் வர்த்தகமானது. இதன் ஆரம்ப விலை ரூ.2,607.50.”

இன்ஃப்ரா மற்றும் சிமென்ட் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ‘மத்திய பட்ஜெட் 2021-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கொரோனா காலத்தில் வெளியிடப்படும் பட்ஜெட் என்பதால், அனைத்து தொழில்துறையைச் சேர்ந்த வர்களும் இந்த பட்ஜெட்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கியிருந்தனர். குறிப்பாக, உள்கட்டமைப்புத் துறை சார்ந்தவர்கள் எதிர்பார்த்த தைப் போலவே, இன்ஃப்ரா துறை சார்ந்த மேம்பாட்டுக்கு பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் அறிவித் திருந்தார். இதன் காரணமாக இன்ஃப்ரா மற்றும் சிமென்ட் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 5%-8% வரை ஏற்றம் கண்டன. குறிப்பாக, கே.என்.ஆர் கன்ஸ்ட்ரன்ஷன்ஸ், அல்ட்ரா டெக் சிமென்ட், ராம்கி இன்ஃப்ரா, எஸ்.பி.எம்.எல் இன்ஃப்ரா, காகதிய சிமென்ட் மற்றும் ஹெச்.ஜி இன்ஃப்ரா இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றத்தைக் கண்டன.”

எஸ்.பி.ஐ மூன்றாம் காலாண்டு முடிவு எப்படி வந்திருக்கிறது?

“பிப்ரவரி 4-ம் தேதி எஸ்.பி.ஐ வங்கி தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதன்படி இந்த நிறுவனத்தின் லாபம் 7% குறைந்து, 5,196.22 கோடி ரூபாயாக இருக்கிறது. நிகர வட்டி வருமானம் 3.7% அதிகரித்து, 28,819.94 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே போல வட்டி அல்லாத வருமானமும் 1.55 அதிகரித்து, 9,246.15 கோடி ரூபாயாக இருக்கிறது. செயல்பாட்டு லாபம் 4.9% குறைந்து, 17,333.16 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிலையிலும் இதன் பங்கின் விலை அண்மைக் காலத்தில் ஏற ஆரம்பித்திருக்கிறது.”

அஜந்தா பார்மா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவு எப்படி?

“இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 64% அதிகரித்து, 177 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 108 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருமானம் 749 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 651 கோடி ரூபாயாக இருந்தது. நல்ல காலாண்டு முடிவை அடுத்து பங்கு விலை ஒரே நாளில் 7% வரை அதிகரித்து வர்த்தகமானது. அன்றைய தினத்தில் இதன் பங்கு விலை 113 ரூபாய் அதிகரித்து, 1,859.15 ரூபாய்க்கு வர்த்தகமானது.”

எஃப்.ஐ.ஐ-களின் முதலீடு நல்ல லாபத்தில் இருக்கிறது போலிருக்கே?

“அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ-க்கள்), கடந்த 2020–ம் ஆண்டில் இந்தியப் பங்குச் சந்தையில் நிகரமாக ரூ.1.7 லட்சம் கோடி முதலீடு செய்திருக் கிறார்கள். சுமார் 450 நிறுவனங்களில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்கள். இந்தப் பங்குகளில் சுமார் 65 பங்கு களின் விலை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. மாருதி சுஸூகி, விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி தேஜா நெட்வொர்க்ஸ், இந்தோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ், டாடா எலெக்ஸி, சோமனி செராமிக்ஸ், ஹிந்துஸ்தான் ஃபுட்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்க பங்குகளாகும்.

இந்தப் பங்குகளில் பலவற்றில் எஃப்.ஐ.ஐ-க்கள் பிராஃபிட் புக்கிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சிறு முதலீட்டாளர் களும் அவர்கள் முதலீடு செய்திருக்கும் பங்குகள் நல்ல லாபத்தில் இருக்கும் பட்சத்தில் பகுதி பிராஃபிட் புக்கிங் செய்யலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.”

பார்மா துறை சார்ந்த பங்குகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

“பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2,23,846 கோடி ரூபாயை ஹெல்த்கேர் துறைக்கு ஒதுக்குவதாக அறிவித்தார். இது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப் பட்ட தொகையைவிட 137% அதிகமாகும். இதன் காரணமாக அன்றைய தினத்தில் பார்மா பங்குகள் விலை அதிகரித்து வர்த்தகமாகின. நிஃப்டி பார்மா 3% வரை உயர்ந்தது. பார்மா துறை சார்ந்த பங்குகளில் சிப்லா நிறுவனத்தின் பங்கு 6% வரை உயர்ந்து வர்த்தகமானது. டாக்டர் ரெட்டிஸ் லேப் மற்றும் சன் பார்மா நிறுவனத்தின் பங்குகள் 4% வரை அதிகரித்து வர்த்தகமாகின. பயோகான், கெடில்லா ஹெல்த்கேர், டிவிஸ் லேப்ஸ், லூபின் மற்றும் டாரன்ட் பார்மா ஆகிய பங்குகளும் விலை ஏற்றமடைந்தன.”

அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்த நிகர லாபம் இரண்டு மடங்கு அதிகரித்த காரணத்தால் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி 11% வரை விலை அதிகரித்து வர்த்தகமாகின. டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.444 கோடியாக அதிகரித் திருக்கிறது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.174 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் விற்பனை 14% அதிகரித்து, ரூ.4,965 கோடியாக இருக்கிறது.”

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்க இருக்கிறதாமே?

“பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், நாட்டின் இதர செலவுகளுக்கான நிதித் தேவையைத் திரட்ட முடியும் என மத்திய அரசாங்கம் நினைக்கிறது. இதனால் பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன்மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாயைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

அந்த வகையில், பி.பி.சி.எல், ஏர் இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ பேங்க், பி.இ.எம்.எல், பவன் ஹன்ஸ், நீலசல் இஸ்பட் நிஜாம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வருகிற நிதி ஆண்டில் விற்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது’’ என்றவர் வாட்ச்சைப் பார்த்து ‘‘எனக்கு நேரமாச்சு. ஏர்போர்ட்டுக்குப் போகணும்’’ என்றபடி, வேகமாகக் கிளம்பினார்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: லாபகரமாகப் பயன்படுத்தும் உத்திகள்..!‘

ஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்த 450 நிறுவனங்கள்..! ஏற்ற சந்தையில் நல்ல லாபம்..!

நாணயம் விகடன் நடத்தும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: லாபகரமாகப் பயன்படுத்தும் உத்திகள்..!’ என்கிற நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பல்வேறு வகைகள், திட்டங்கள், ஃபண்டுகள் உள்ளன. அவற்றை சரியாகத் தேர்ந்தெடுப்பது எப்படி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை லாபகரமாகச் செய்வது எப்படி என்பன குறித்த விரிவான விளக்கம்தான் இந்த நிகழ்ச்சி, 2021. பிப்ரவரி 20-ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் நடக்கும் இந்த ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ரூ.600. நிதி ஆலோசனையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர் எம்.வெங்கடேஸ்வரன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். இவர் Acuwealth.com–ன் நிறுவனர். இந்த நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய: https://bit.ly/2KZ8F7w

ஷேர்லக்: வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டை அதிகரித்த 450 நிறுவனங்கள்..! ஏற்ற சந்தையில் நல்ல லாபம்..!

எல்.ஐ.சி ஐ.பி.ஓ மற்றும் இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்கு விற்பனை மற்றும் ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனையும் இந்த ஆண்டில் மத்திய அரசு செய்யப் போகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு